ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

திருக்குறள் மீதான அவதூறுகளும் நமது மறுப்பும்.


----------------------------------

திருவள்ளுவர் மட்டும் ஒன்றும் பகுத்தறிவு ரீதியாக பேசிவிட்டார் என்று சொல்வதற்கு இல்லை. 
நல்வினை தீவினை பற்றி நிறைய பேசி உள்ளார். மறுபிறப்பை பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார் மறுபிறப்பு மட்டுமல்ல ஏழு பிறப்பு என்பதையும் உரக்கச் சொல்லுகிறார் 

ஒருமையில் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமா புடைத்து என்பது என்ன ?

இதைவிட ஒரு கருத்து சொல்கிறேன் 

ஒருவன் பல்லக்கை சுமப்பதற்கும் இன்னொருவன் பல்லாக்கில் ஏறி போவதற்கும் அவன் முற்பிறவியில் செய்த  நல்வினை தீவினை தான் காரணம். அதாவது பாவ காரியம் புண்ணிய காரியம் தான் காரணம் என்கிறார் வள்ளுவர் 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தாரோடு ஊர்ந்தார் இடை 

ஆக இந்த திருக்குறளில் நல்வினை தீவினை பற்றி தான் பேசுகிறார்

இப்படி...

மகாவிஷ்ணு என்பவருக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு போகிற போக்கில் திருக்குறளை களங்கப் படுத்த முயலுகின்றார் ஜெயதேவன் அவர்கள். 

அதோடு அவர் சொல்கிறார்

இதை துணிச்சலாக எழுத காரணம் தமிழில் பக்தி இலக்கிய முதல் சைவ சித்தாந்தம , நாலாயிர பிரபந்தம் தேவாரம் உபநிடதங்கள் ' புத்தர் எல்லாமே வாசித்தவன் என்ற முறையில் சற்று திமிரோடு சொல்லுகிறேன் பாவ புண்ணியம் என்பது இந்திய இலக்கியங்களில் இருக்கிறது சங்க இலக்கியங்களிலும் இருக்கிறது.

திருக்குறளிலும் நிறைய இருக்கிறது 
திருக்குறள் மட்டும் ஒன்றும் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யக்கூடிய நூல் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

இன்று முடிக்கின்றார். 
---------------------------------------

திரு. ஜெயதேவன் அவர்களே! 

வள்ளுவன் குறிப்பிடும் எழு பிறப்பு, எழுமை என்பது இன்று நாம் கருதிக் கொண்டிருக்கின்ற ஏழு ஜென்மங்கள் என்கின்ற கருத்து உடையவை அல்ல.மனித வாழ்வின் பிறப்பு முதல் இறப்புவரை ஏழு நிலைகளாகும்.

ஆசீவகத்தில் சித்தர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகள் கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு,மண்ணிறம், வெள்ளை,நீர்வண்ணம் என ஏழு நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன

ஒருவர் தன் வாழ்வில், இந்த ஏழுநிலைகளை அடைந்துவிட்டால் அவர் பிறப்பற்ற நிலையை அடைகின்றார் என்பது ஆசீவக மரபு. ஐயன்- ஐயப்பன்- ஐயனார் அனைவரும், ஆசீவக மரபின் ஏழ்நிலையடைந்தவர்கள்.

இதை தான்..,

'கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்' 

என்கிறார் சீத்தலை சாத்தனார்.
அதாவது வீடுபேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக உயர்ந்த சுழி வெண் பிறப்புற்று வீடுபேறு அடைவர் என்று சீத்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.
இங்கு வாழ்வியல் நிலையை குறிக்க பிறப்பு என்கின்ற சொல்லாடலை கையாளுகின்றார் சீத்தலை சாத்தனார். இதையே தான் திருவள்ளுவரும் கையாண்டு உள்ளார். 

திருக்குறள் ஒரு மறை நூல்.அதாவது ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு குறளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.ஒருவனின் வாழ்வியலுக்கு ஏற்றார் போல், சூழலுக்கு ஏற்றார் போல், அவனது  சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் குறளின் பொருள் விளங்கும். 

வைதீக சிந்தனையாளர்கள் தங்களுக்கு ஏற்றார் போல், தமது சிந்தனைகளுக்கு ஏற்றார்போல் அதனை பொருள் விளங்கிக் கொள்கின்றார். நீங்களும் அச்சிந்தனை வழியே நின்று குறளை  குறை காண்பது குறளுக்கு இழுக்கன்று.!

*சமரன்*

.

கருத்துகள் இல்லை: