வியாழன், மே 23, 2024

நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே

நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே


 

காட்டின் வளமை, கடலின் குளுமை, மலையின் பெருமை, வயலின் செழுமை என தமிழரின் நிலத்திணைகள் சூழ தொன்ம வரலாறும் ஆன்மிக செறிவும் இரண்டற கலந்திருக்கும் அழகிய கலாச்சார நகரம் சமரபுரி எனும் திருப்போரூர். அறநெறி போற்றிய மடங்கள், அன்னம் வழங்கிட்ட சத்திரங்கள், உழைப்பை நல்கிய மான்யங்கள், யாத்த்ரிக்களின் தாகம் தீர்த்த திருக்குளங்கள், தொன்ம வரலாறு புதைந்து கிடக்கும் மலை என பெருமைக்கு பஞ்சமில்லாத ஊர். 

இந்நகரை சீரமைத்து பெரும் மீட்டுருவாக்கம் செய்து பெருமை சேர்த்ததில் மிக முக்கியமானவர் சிதம்பர கவிராயர். சங்ககால புலவர் மரபில் தோன்றி சாந்தலிங்கரின் மாணவராக இருந்து பின்னர் குமாரதேவரின் புத்திரனாக வீர சைவ முறைப்படி 21 தீட்சைகள் பெற்று சிதம்பர சுவாமிகள் என்றானார். சிதம்பரம் என்பது அவரது இயற்பெயரன்று. ஊர் பெயரே இயற்பெயரானது.  

சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் கந்தப்பெருமானுக்காக இரு கோயிலை கட்டி எழுப்பி இருக்கிறார். ஒன்று கற்கோயில், மற்றொண்டு சொற்கோயில்.  

பிள்ளைத்தமிழ், அலங்காரம், மாலை, தூது, ஊசல், பள்ளிஎழுச்சி, திருவடிப்பற்று, சித்தொளி, சிற்சுகம் போன்ற பாடல் வகைகளுடன் கூடிய 726 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சன்னதி முறை என்னும் புதிய வடிவத்துக்கு இதுவே முதல் இலக்கியமாகும். இதிலுள்ள பிணி நீக்கும் பதிகம், மழைப்பதிகம் போன்றவை திருப்போரூர் கந்தப்பெருமானின் பேரருளைக் காட்டும் வணக்கம் மொழியாகும். அதாவது 'Praise The Lord'.

19-ஆம் நூற்றாண்டில் தமிழில் எண்ணற்ற பதிப்புகளுடன் வெளிவந்த ஒரே நூல் திருப்போரூர் சன்னதி முறை.  இதன் பிரதிகள் இன்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ்  மியூசியம் மற்றும் பாரீஸில் உள்ள மியூசியம் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இது தவிர மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களையும் தமிழ் சமூகத்திற்கு வழங்கிருக்கின்றார். 

கி.பி. 1659-ஆம் ஆண்டு வைகாசி மாத விசாக தினத்தில் மடாலயத்தில் ஒடுக்க அறைக்குள் இருந்து சுரங்கம் ஒன்றின் வழியே அடுத்துள்ள சமாதிக் குழிக்குள் பரிபூரணம் அடைந்தார். இந்த மடாலய திருக்கோயில் அதிஷ்டானம் என்றோ ஜீவசமாதி என்றோ சொல்லப்படுவது இல்லை. ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் மடாலயத் திருக்கோயில் என்றே வழங்கப்படுகிறது. 

இன்று தவத்திரு சிதம்பர சுவாமிகள் அவர்களின் 365 வது குருபூஜை வைகாசி விசாக பெருவிழா. சமரபுரிக்கு ஆன்மிக செறிவை, தமிழ் சமூகத்திற்கு அழகு தமிழ் இலக்கியங்களை வழங்கிய சிதம்பர சுவாமிகளை நன்றியோடு நினைவு கூர்வோம். அவர் தினமும் புனித நீராடிய சிலம்பாயி தீர்த்தத்தை மீட்டெடுத்து சீரமைப்பது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதுதான் திருப்போரூர் பொதுமக்களும் கோயில் நிர்வாகமும் அவருக்கு செலுத்தும் உண்மையான நேர்த்தி கடனும் நன்றி கடனும் ஆகும்.

சமரன்

#திருப்போரூர்|#சிதம்பரசுவாமிகள்|#SriChidambaraSwamigal|#thirupporur|#சமரபுரி|#Murugantemple|#samaran

கருத்துகள் இல்லை: