சீக்ரெட் ஆஃப் வாட்டர்
------------------------------
மதிய நேரம்
டிராபிக் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது. திருப்போரூர் வந்துக்கொண்டிருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மூன்று டேங்கர் லாரிகள் எதிரே ஊர்ந்துகொண்டிருந்தன. சட்டென்று வீரக்குமார் அண்ணன் நினைவுக்கு வந்தார். ஒரு லோடு தண்ணீர் கேட்டு வெகு நாளாயிற்று இன்னும் தண்ணீர் வைத்தபாடில்லை. டேங்கர் லாரி தம்பிகளுக்கு கால் செய்து பேசிக்கொண்டே வந்தேன்.
யென் அங்கேயே தண்ணீ வைக்கலாமே.. ?
இங்கிருந்து போற தண்ணீ என்ன ஸ்பெஷலா..
இங்க TDS Level நல்லா இருக்கு. Less than 300 TDS Level excellent, இது நம்மூர்ல சாதாரணமாவே கிடைக்குது. அதனால் தான்.
சோறும், நீரும் விற்பனைக்கல்ல’ முதுமொழி பேசிய இந்த மண்ணுலதான் தண்ணீர் விற்பனை கொடிக்கட்டி பறக்குது. என்னத்த சொல்ல.. என்று அங்கலாய்த்துகொண்டே கேட்டேன்.
உலகிலேயே மிக விலை உயர்ந்த தண்ணீர் எது தெரியுமா?
கோல்டன் - சி' எனும் தண்ணீர் தான். ஒரு அவுன்ஸ் நீரின் விலை, 5,000 ரூபாய். அமெரிக்காவின், சாண்டியாகோ மாநிலத்தில் உள்ள சுரங்க பகுதிகளிலிருந்து, அரிய மருத்துவ குணம் உடைய, படிக கல்லுடன் கிடைக்கும் நீரை சுத்திகரித்து விற்கின்றனர்.
அப்பு, அம், அம்பணம், அம்பு, அமுதகம், அமுது, அயம், அரி, அலம், அலர், அளகம், அளறு.. இப்படின்னு தண்ணீருக்கு மட்டும் நூற்றுக்கணக்கான பெயர்கள் இருக்கு. தண்ணீரை அமிழ்தம் என்கிறார் வள்ளுவப் பாட்டன். அவரே நீரின்றி அமையாது உலகு என்று தண்ணீரின் பெருமையை போற்றுகின்றார்.
தமிழ்ச் சமூகம் தாய் வழிச் சமூகம், இன்றளவும் தாயையும் தாய் தெய்வ வழிப்பாட்டை முதன்மைப்படுத்துபவர்கள் தமிழர்கள். அப்படிபட்ட ஆனானப்பட்ட தமிழனே ‘தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே’ என்கிறான் என்றால் அந்த தண்ணீரின் மேன்மையை, அருமையை, பெருமைகளை எண்ணிப் பாருங்களேன்.
தண்ணீரின் 97 சதவீதம் உப்பு நீராகக் கடலில் உள்ளது. 2 சதவீதம் பூமியெங்கும் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. மீதி1சதவீதம் தண்ணீரைத்தான் குடிநீராகவும் விவசாயத்துக்கும் மற்ற வேலைகளுக்கும் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
என்று சொல்லி நிறுத்தி காரை ஓரங்கட்டச்சொல்லி சைகை செய்தேன். ஒரு ஓரமாய் வண்டி நின்றது. குடிக்க ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிகொண்டு மீண்டும் கார் வேகமெடுத்தது.
தண்ணீரை உட்காந்து தான் குடிக்க வேண்டும். அதுவும் உதடு நனைய குடிக்க வேண்டும். குடிநீரை நின்று குடித்தால் நோய். அமர்ந்து குடித்தால் மருந்து. தெரியுமா? தண்ணீர் பருகும் போது தண்ணீர் செல்லும் இடமெல்லாம் பிராண சக்தி செல்கிறது. களைப்பாக இருந்தால் ஊசியோ மாத்திரை மருந்தோ எடுத்துக்கொள்வதில்லை, மாறாக உடனே குளித்து விடுகின்றோம். உலகின் அனைத்து மதங்களிலும் தண்ணீரின் பங்கு புனிதமானது.
மணமகளை அலரிப்பூவும், நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய நான்கு பெண்கள் நீராட்டும் வழக்கத்தினை அகநானூறு குறிப்பிடுகிறது. பெண்ணின் பூப்பு நீராட்டு, மன்னர்களின் வெற்றி நீராட்டு, இறந்தார்க்கு ஊரறிய ‘நீர்மாலை’ எடுத்து வந்து நீராட்டுதல் என தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டு அசைவுகளிலும் நீர் நீக்கமற்று நிறைந்திருக்கிறது.
சமணம் தமிழக மண்ணில் வீழ்ந்ததற்கு தண்ணீரும் கூட ஒரு காரணம் தான். என்று நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ஒரு மடக்கு குடித்து முடித்தேன்.
இன்னொரு மடக்கு குடிப்பதற்கு ஏதுவாக கார் வேகம் குறைந்து ஊர்ந்தது. முருகன் கோயிலை கடந்துக்கொண்டே சொன்னேன். கோயிலே புனிதமானது. அப்படிப்பட்ட கோயிலையே தண்ணீர் கொண்டு நீராட்டுகிறார்கள் என்றால் நீரின் பெருமையை என்னவென்று சொல்வது என்று தண்ணீருக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்தேன்.
காரில் இருந்தவர்களால் தண்ணீரை விட்டு வெளியே வர விருப்பம் இல்லை. இன்னும் இன்னும் ஏதேனும் சொல்வானா என்று பேச் மூச் இன்றி கவனித்துக்கொண்டிருந்தை உணர முடிந்தது.
தொடர்ந்தேன்..
பூமி 23 டிகிரி சாய்ந்து இருக்கிறது. இந்தக் கோணம் சிறிது மாறியிருந்தாலும் இந்த உலகில் நீர் பனிக்கட்டியாகவே இருந்திருக்கும். உயிர் உருவாகியிருக்காது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தண்ணீர் தான் காரணம். உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தண்ணீர் தான் காரணம். உலகம் உருவான போது எவ்வளவு நீர் இருந்ததோ அவ்வளவு நீர் தான் இன்றும் இருக்கிறது. பனிக்கட்டி, தண்ணீர், நீராவி என்று நீரை மாற்ற மட்டுமே முடியுமே தவிர உங்களால் ஒருபோதும் தண்ணீரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. தண்ணீரை நிரந்தரமாக அசுத்தப்படுத்தகூட முடியாது. என்ன செய்தாலும் அது தன்னை தானே சுத்தப் படுத்திக்கொள்ளும். இவ்வளவு பரந்த உலகில் நீர் தரையிலிருந்து 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே தண்ணீரால் உயரமுடியாது. கடலுக்கடியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு கீழே நம்மாலும் செல்ல முடியாது. அழுத்தம் காரணமாக நொறுங்கி விடுவோம்.
இன்னொன்று சொல்லட்டுமா?
இந்த தண்ணீர் பூமி பந்தில் உருவாக வில்லை. வெளியில் இருந்து
வந்தது. பூமிக்கு தண்ணீர் சொந்தமே கிடையாது. இங்குள்ள நீரெல்லாம் Carbonaceous Chondrites எரிகற்களால் பூமிக்குக்குக் கொண்டுவரப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் தான் உண்மை என்கிறார்கள் கோளியல் விஞ்ஞானிகள்.
கார்பனேசிய காண்டிரைட்டுகள் போன்ற விண்கல் பூமிக்கு நீரின் பெரும்பகுதியை வழங்கியிருக்கலாம், இது கடல் நீருடனான ஐசோடோபிக் ஒற்றுமைகளுக்கு சான்றாகிறது என்கிறார்கள் அவர்கள்.
நீர் நெருப்பில் பிறந்து காற்றில் உருகி நிலத்தில் சேர்கிறது. ஹைட்ரஜன் வெடிக்கக்கூடியது தீப்பற்றக்கூடியது, ஆக்ஸிஜன் எரிவதற்கு துனை செய்வது. இவை இரண்டும் சேர்கின்ற போது வெடித்து தீப்பிடித்து எரியதானே வேண்டும். ஆனால் அந்த தீயையே அணைக்கும் நீராக பிறக்கிறது. எது தன்னை ஆவியாக்குமோ அந்த நெருப்பில் இருந்து தான் நீர் பிறக்கிறது.
நீர் ! அதுவொரு அறிவியல் பிரம்மாண்டம்.
நீரானது அதன் வெட்பநிலை கடத்தலே இத்தனை பெரிய உலகம் பிறக்க காரணம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? தண்ணீருக்கும் ஞாபக சக்தி என்பது இருக்கிறது. கையாள்பவருடைய எண்ணங்களை அது தனது நினைவில் வைத்துக் கொள்கிறது. நீங்கள் தண்ணீரை வாழ்த்தும் போதும், திட்டும் போதும் அதனுடைய அமைப்புகளில் மாற்றம் நிகழ்கிறது. நம்புங்கள் நாம் பேசுவதை தண்ணீர் கவனித்துக்கொண்டிருக்கிறது.
நான் சொன்ன வாட்டர் சீக்ரெட் ஒரு குவளை தான். இன்னும் அது கடல் போல் பரந்து விரிந்து கிடக்கிறது.
என்று முடிக்கவும் கார் அலுவலகம் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக