வெள்ளி, நவம்பர் 17, 2023

பாணன் கழுதை பரதேசம் போனாப்பல ’

இக்குடி இல்லாது எக்குடிகளும் இல்லை என்ற அளவில் புகழ்பெற்று விளங்கிய பழந்தமிழ் குடியொன்றின் வரலாறு முற்றாக அழித்தொழிக்கப்பட்டு தமிழ்கூறும் நல்லுலகிலிருந்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 

#பாணர் !

இயல் இசை நாடக குல மக்கள்.

தமிழன் தன் வாழ்வை கொண்டாட்டங்களால் நிறைத்துக்கொள்கின்றான். சங்ககாலம் முதற்கொண்டு மு.க.ஸ்டாலின் காலம் வரை இதுவே தொடர்கிறது. பாடல்கள் பாடி, இசை வாசித்து அதற்கு நடனமாடி மக்களை மகிழ்வித்து கலைகளை வளர்த்தவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர், 

இன்றைய மானாட மயிலாட, விஜய் சூப்பர் சிங்கர் ஜோடி போன்ற களியாட்டங்களுக்கு அன்றைக்கே அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் பாணர்கள்.

தமிழ் சமூகமும் சங்க இலக்கியங்களும் பாணர்களுக்கு தனி இடம் தந்து சிறப்பித்தது. சங்கத் தமிழகத்தில் வாழ்ந்த பாணர்களின் செம்மாந்த வாழ்வு நிலையை பற்றி ஆற்றுப்படை இலக்கியங்களான, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம் போன்ற சங்க இலக்கியங்கள் நமக்கு அழகாக தெரிவிக்கிறது.

இசைக்கருவி கொண்டு பண்ணப்படுவது பண், பண்ணிசையுடன் பாடுபவர் பாணர். இசைவாணர்களான பாணர்களில் பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்; பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி நாட்டியம் ஆடுபவர் விறலியர்; கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்; ஏழு நரம்புகள் கொண்ட சீறியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள் சிறும்பாணர், 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள் பெரும்பாணர். யாழ் மீட்டும் பாணர் யாழ்பாணர். பறை இசைக்கும் பாணர் பறைபாணர், அதாவது பறை  வகைகளில் ஒன்றான இணைப்பறை, பாணர்கள் இசைத்து வந்த ஒரு கண்பறை யாகும். 

பாணர் குலத்துப் பெண்களை  பாடினி என்றழைப்பர். கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்த பாடினிகள் பாணரோடு சேர்ந்து துணைவியரும் பண் பாடுவர், பாட்டிசைப்பர். கூத்துக் கலையிலும் வல்லவர்கள். அபிநயங்கள் காட்டி ஆடுவார்கள். யாழ்க் கருவியிலும், இனிய இசையை மீட்டுவார்கள். 

பாணரைப் போலவே, பாடினியரும் பலவகைப்படுவர். பாடினிகளுக்குப் பாண்மகள், விறலி, பாடினி, மதங்கி, பாட்டி, பாடன்மகடு எனப் பல பெயர்கள் இருந்தன. இவர்கள் அழகு வனப்பு இனிய குரல்வளம், அறிவுக்கூர்மை மிக்கவர்கள் என்பதை  பொருநராற்றுப்படை வழியே  தருகிறார்.  காக்கைப் பாடினியார், 

வெறும் கலைகளோடு மட்டுமல்லாது ஆட்சி அதிகாரத்திலும் கோலோச்சியவர்கள் பாணர்கள். மேற்கே கோலார், புங்கனூர் மற்றும் ஸ்ரீசைலம்  கிழக்கே காளத்தி மற்றும் சோளிங்கர் , தெற்கே தென்பெண்ணை ஆறு, வட மேற்கே  தொண்டை மண்டலம் என  நில எல்லைகளை  கொண்ட பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலம் கட்டியாண்டனர். 

ராஜராஜ சோழன்,  நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளைத் தொகுக்கும் போது பல தேவாரப்பாடல்களுக்குப் பண்முறையை வகுத்த போது நாயன்மார்களில் ஒருவரான நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய மதங்கசூளாமணியார் என்னும் பாடினியார் தான் அனைத்துத் தேவாரத் திருமுறைகளுக்கும் பண் அமைத்துக் கொடுத்தார் என்கிறது வரலாறு.

மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழமன்னன் சூடிய பொன்-மகுடம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைப் பாணர்களுக்குப் பரிசிலாகக் கொடுத்ததாக அவரது கல்வெட்டுகள் கட்டியம் சொல்கிறது. 

துருக்கியர்கள் படையெடுப்புக்குப் பின் பாணர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பாணர்களின் வரலாற்றின் மிச்சசொச்சத்தை ஒரு சொல்லாடல் சுமந்துகொண்டிருக்கிறது. அது. 

பாணான் கழுதை பரதேசம் போனாப்பல ’  

வட புலத்தில் இருந்து தென்னகம் வந்த பிற மண்ணினர், ஆடல் பாடல் , இசை , கலை என செம்மாந்து வாழ்ந்த இவர்களோடு ஊடுருவது / கலப்பது எளிதாக இருந்ததால் பாணர்களோடு அந்த வெள்ளை தோல் கூட்டத்தாரும் தங்களை ஐக்கியமாக்கி கொண்டனர். பால் போன்ற நிறத்தை உடைய பாணர்கள் என்பதால் அவர்கள் பால் பாணர்கள் – பார்ப்பாணர்கள் என்றாகி  ஆரியர் என்று  பிற்காலத்தில் பிரகடனம் செய்து கொண்டனர்.

ஆனால் சங்க இலக்கியத்திற்கு உயிர்நாடியாக விளங்கிய பாணர் மரபு தமிழ் சமூகத்திலிருந்து அறுந்துப்போனது எங்கே ? அந்த மரபின் நிலை என்ன?  பாணர்கள் இன்றும் இருக்கிறார்களா? அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்?  போன்றவை குறித்தான நுட்பமான, காலப்பார்வை சார்ந்த ஆய்வுகள் ஏன் இங்கு உருவாகவில்லை? ஆரக்கற்ற, நிறைவாக கற்ற, வித்தை கற்ற மக்கள் ஆரியர் எனும் பொருள் கொண்ட பாணர் குடிகளின் ஆதி வரலாறு ஏன் மீட்கப்பட வில்லை?

கருத்துகள் இல்லை: