உலகை அச்சுறுத்திய அம்மை, காலரா, ஹெச்.ஐ.வி - எய்ட்ஸ், இன்ஃபுளூயென்சா என பிளேக் கொள்ளை நோய் தொடங்கி இன்றைய கொரோனா வரை அத்தனை நோய்களிலிருந்தும் மானுட சமூகம் மீண்டு எழுந்து வந்து விட்டது.
ஆனால் சாதி..?
ஆண்டாண்டு காலமாக, சாதியத்திற்கு எதிரான கலகக்குரல்கள் இம் மண்ணில் வலிமையாக முன்வைக்கப்பட்டாலும் கூட, அடக்குமுறைகளும், ஆணவக் கொலைகளும் ஆதிகுடிகள் மீதான சாதிய வெறியாட்டங்களும் நாள் தோறும் நடந்தேறி தான் வருகின்றது.
Caste is the state of mind என்கிறார் அம்பேத்கர். மற்றவர்களை போல சாதி ஒரு மனநோய் என அவர் சொல்லவில்லை, மாறாக அது ஒரு மனநிலை என்கிறார்.
நோய்கள் குணப்படுத்த கூடியவை, நமது விருப்பத்தை மீறி நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது நோய். ஆனால் மனநிலை மாறாதது. நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் விரும்புவான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது.
சாதிய மனநிலையை உள்வாங்கிகொண்ட ஒருவன் சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். இந்த சாதிய மனநிலை தான் ஒருவனுக்குள் பெருமிதங்களை, புனிதங்களை தருகிறது.
அந்த பெருமிதங்களும், புனிதங்களும் ஆணவ கொலைகளுக்கும், அடக்குமுறை வெறியாட்டங்களுக்கும், அதிகார திமிர்தனங்களுக்கும் காரணமாகின்றது.
சாதியப் பெருமிதங்களை, சாதியப் புனிதங்களை, தகர்க்கப்பட வேண்டும் ; நொறுக்கப்பட வேண்டும். இதன் ஊடாக விரும்பிய ஏற்றுக்கொள்ளும் சாதிய மனநிலை மெல்ல வலுவிழக்கும்.
அதன் முன்னெடுப்பாக..
◼️ ஆதிக்குடிகள் மீதான திட்டமிட்டு உளவியல் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் | அவர்களைத் தொடர்ந்து தாழ்வு மனப்பான்மை நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பது மாதிரியான சொல்லாடல்களை | உரையாடல்களை முற்றாக தவிர்த்தாக விட வேண்டும்.
◼️ உயர் சாதிகள் | ஆதிக்க சாதிகள் என பெருமிதங்கள் கொள்ளும் சாதிகளின் பூர்விகம் எங்கிருந்து தொடங்குகிறது? அந்த சாதிகளின் தோற்றுவாய் காலம் எது? அந்த சாதிகள் குறித்தான செய்திகள் சங்க இலக்கிய காலங்களில் இருக்கின்றனவா? வினாக்கள் எழுப்பிட வேண்டும்.
◼️ ஆதிக்க சாதிகள் ஆண்ட சாதிகள் சாதியின் குலம் கொத்து யாது? எச்சாதியின் கால்வாய் வழியே கிளைத்தவர்கள் என்பதான விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும்.
◼️ நூறாண்டுகளுக்கு முன்பாக உயர் சாதிகள் | ஆதிக்க சாதிகள் என பெருமிதங்கள் கொள்ளும் சாதிகளின் சாதிய ஆளுமைகள் யார் யார் என்கின்ற பட்டியல் பொது கவனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்
◼️ உயர் சாதிகள் | ஆதிக்க சாதிகள் | பெருமித சாதிகள் என்று அறியப்படுகின்ற இந்திய சாதிகள் அனைத்தும் பூர்விக குடிகளான பறையர் சாதியில் இருந்து கிளைத்தவை என்கின்ற வரலாற்று உண்மை நிறுவப் பட வேண்டும்
ஆண்ட சாதி என பெருமிதம் கொள்கின்றவனின் மனநிலையை | அடிமை சாதி என தாழ்வு கொள்கின்றவனின் மனநிலையை ஒருசேர தகர்த்தெறிவதற்கு இம் முன்னெடுப்பு பெரும் பயனளிக்கும் என்பதை கள செயல்பாட்டாளர்கள் உணர வேண்டும்
இதனை விடுத்து வெறுமனே புலம்பி திரிவதில் பயன் ஏதும் இல்லை.
#சமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக