பெரியாருக்கு பெரியார் என்று யார் பட்டம் கொடுத்தது என்று பலரும் பலவித கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
தந்தை பெரியாரும் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்றே அழைக்கப்பட்டார். நாயக்கர் என்றாலே அவரைத்தான் குறிக்கும் என்ற அளவிற்கு நிலைமை இருந்தது.
குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 முதல் குடி அரசு இதழ் நாயக்கர் பட்டத்தை நீக்கிவிட்டு ஈ.வெ.ராமசாமி என்று குறிப்பிட்டது.
1928 தொடக்கத்தில் நாகர்கோயில் வழக்கறிஞர் சிதம்பரம் பிள்ளை என்பவர் அவர்தான் முதல் முறையாக பெரியாரை ராமசாமிப் பெரியார் என்று எழுதுகிறார்.
சமூக முன்னேற்றத்திற்கு சமூக விடுதலைக்கும் சுயமரியாதை இயக்க கர்த்தாவாகிய ஈ.வெ.ராமசாமிப் பெரியார் அவர்கள் ஆற்றிய பெரும் பணிக்கு நன்றி பாராட்டுவதுடன் அவர் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்று நடத்துவதை அவர்பால் பூரண நம்பிக்கை உண்டு என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது என்று
1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டு ராட்டினக் கிணறு பகுதியில் நடைபெற்ற முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே கடைசியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
21.7.1929 திருநெல்வேலி ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஈ.வெ.ராமசாமியை பெரியார் என்றே அழைத்தனர்.
1932 திருச்சி மருத்துவர் குல சங்கத்தார் வழங்கிய உபச்சார பத்திரத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது திராவிடன் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
1932 கொழும்பு நகரில் ஆதிதிராவிடர் சங்கத்தார் வழங்கிய வரவேற்பில் ராமசாமிப் பெரியார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அதன்பின் பெரியாரை குறிப்பிடும் பொழுது பெரியார் என்ற சொல்லைச் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது, என்றாலும் 'பெரியார்' என்பதை ஒரு மாநாட்டின் தீர்மானம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தாக வெளியானது என்பது, சென்னையில் நடைபெற்ற தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தான்.
அயோத்திதாசர் அட்மின்கள் சொல்வதை அயோத்திதாசர் சொன்னதாகவே புரிந்து கொள்வதும், பெரியார் அட்மின்கள் சொல்வதை பெரியாரே சொன்னதாக எடுத்துக் கொள்வதும், எதிர்காலத்தில் பெரும் அவமானத்திற்கு இட்டுச் செல்லும். அந்தப் பிழையை நாம் செய்ய வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக