வெள்ளி, மே 12, 2017

வடபால் முனிவன் தடவினுள் தோன்றி

Geetha VenkatSundera Rajan 
ஆகியோரின் மேலான பார்வைக்கு..
வள்ளல் பாரி போரில் மரணமடைந்து விடுகிறான். பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார்.
பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டின் துவரைநகர் அரசன் இருங்கோவேளை சந்திக்கிறார் அவர்.
எருமை நாடென்பது இன்றைய மைசூர் என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு போவீர்கள். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்றால் வட மொழியில் மகிஷம். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
கதைக்கு வருவோம்...
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்த கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார்.
நீயே,
வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
அதாவது..
“இருங்கோவேளே…
நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே… செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!”
இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பை போகுற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் அவர்.
“வடபால் முனிவன்” யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன.
வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர் துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் பொருள்
“வடபால் முனிவன் தடவினுள் தோன்றி” என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது “பெரும் மண் பாண்டத்தில் தோன்றி” என்று பொருள். ‘தட’ என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும்.
வடபால் முனிவன் யார் ? அகத்தியர்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்கிறார் நச்சினார்க்கினியார்.
துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், “வடபால் முனிவர் தடவினுள் தோன்றி” என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும்.
ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் கண்ணனை ‘தாச யாதவன்’ என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது.
ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். தமிழ் மன்னன் என்பதும் இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.
மேலும்
கண்ணனது படைகளுடன் ஆரிய தலைவன் இந்திரன் படைகள் போரிட்டதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதமும் உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவாகிறது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான்.
இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள்.
மீண்டும் இருங்கோவேள் கிட்ட வருவோம்...
பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான் அவன். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் விரல் நீட்டி சொல்கிறார்
“உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு” என்கிறார் கபிலர்.
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் “நீடுநிலை அரையத்துக் கேடு” என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள்.
கல்யாணம் காச்சி என்றாலே இதுபோன்ற இனம் குலம் குறித்து நதிமூலம் ரிஷிமூலம் தேடுவது அப்பவே தொடங்கிடுச்சி போல 😊

கருத்துகள் இல்லை: