திங்கள், செப்டம்பர் 19, 2022

அறிவிலிருந்து விடுதலை 
-------------------------------------- 

அரசு என்பது சமூகத்தின் நிறுவனத் தலைமை. ஆட்சி என்பது நிர்வாக தலைமை. நிர்வாக தலைமை மாறக்கூடும்,  நிறுவன தலைமை மாறாதது. இந்த அரசுகளின் வருவாய் ஈட்டும் துணை நிறுவனங்கள் தான் கோயில்கள். 

கோயில் சமூக இயங்கியலுக்கு தோதானது. சமயம் பரப்பிய, கலைகள் வளர்த்த, நிர்வாகம் புரிந்த, வருவாய் பெருக்கி பேரரசு உருவாக்கத்தின் தவிர்க்க இயலாத பொருளாதாரம் மண்டலங்களாக, பயிற்சிக் கூடங்களாக,  காட்சிக் கூடங்களாக திகழ தொடங்கி 

நிலவுடைமைச் சமூகத்தின் பொதுவுடைமை வெளியாக தன்னை அது முன் நிறுத்தி கொண்டது.

கோயில்கள் பார்ப்பார் வசமிருந்தது.

கோயிலுக்குள் குறிப்பிட்ட சாதிகள் மட்டும் தான்  பூசை செய்ய வேண்டுமென்ற பாகுபாடெல்லாம் அன்றைக்கு அறவே கிடையாது. பூசை முறைகள் தெரிந்தவர் யாவரும் செய்யலாம். பார்ப்பார் மட்டுமல்லாமல் சத்திரியர், நாவிதர், கொல்லர், வேட்டுவர் உள்ளிட்ட எவர் வேண்டுமானாலும் பூசை செய்யலாம்.  

பூசை செய்யும் இந்த உரிமை பொது ஏலத்திற்கு விடப்பட்டே வந்தது. 

இந்த கோயில்களின் ஏல உரிமை தொடர்ச்சியாக, பெரும்பாலும் பார்ப்பார்கள்  கைவசமே  போனது. ஆகவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அவர்கள் செல்வாக்கும் ஆளுமையும் மிக்க மக்கள் தலைவர்களாக திகழ்ந்தனர். 

இந்த பார்ப்பார் என்ற தொகுப்பில் பறையர் கணியர் வள்ளுவர், உள்ளிட்ட அறிவுசார் குடிகளும், அந்தணர் என்னும் தொகுப்பில் பறையர், பாணர், வள்ளுவ குடிகளும் பெரும்பங்கு இருந்தனர்.

வந்தேறிகளான ஆரிய பார்ப்பார் குறிப்பிட்ட கலையையோ தொழிலையோ அறியாத நிலையில் இருந்த காரணத்தால் அவர்கள் காதலனுக்கும் காதலிக்கும், தலைவனுக்கும் தலைவிக்கும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையே வாயிலோயாக அதாவது தூது செல்பவராக , பூசை செய்து அதன் மீதப் பொருட்களை உண்டு வாழபவராக பணிக்கப்பட்டு, பின்னர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்த பார்ப்பார்களின் எடுபிடிகளாக மாறினர்.  

அவர்களுக்கு சமஸ்கிருதம் ஓத பயிற்று விக்கப்பட்டது. தமிழருடன் இணைந்து பிழைக்கத் தொடங்கிய பிறகு பார்ப்பார் எனும் பெயரைத் தங்களுக்கானதாவும் மாற்றிக் கொண்டனர்.

இந்த புள்ளியில் இருந்து தான் தமிழர்களின் வரலாற்றுப் போக்கில் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ தொடங்கியது. 
 
அறிவார்ந்த குலங்களாக விளங்கிய பறையர், பள்ளர், வள்ளுவர், கணியர், அம்பட்டர் உள்ளிட்ட அனைத்தும் குலங்கள் எனும் தகுதியை இழந்து சாதிகளாகின. சேவைத் தொழில் புரிந்து அண்டிப் பிழைத்து வந்த ஆரிய கூட்டம் ஆதிக்கத்தின் உச்சத்திற்குச் சென்றனர். 

இந்த தலைகீழ் மாற்றம் வெறும் ஆரிய கூட்டத்தாரால் மட்டுமா நிகழ்ந்தது? 

இந்த மாற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் ; இந்த தலைப்பில் மாற்றத்தை சரி செய்ய வேண்டியவர்கள் தொடர்ந்து அறிவுக் குடிகளின் மீது தீண்டத்தகாதவர்கள் | தாழ்த்தப்பட்டவர்கள் என்று உளவியல் யுத்தத்தை நடத்தி வருவது மாபெரும் துரோகமல்லவா ? 

அந்தணராக, கணியராக, 
அரசராக, வேந்தராக, படைத் தலைவராக, அர்ச்சகராக, தேவாரம் திருவாசகம் பாடியோராக, பறை இசைத்தோராக, 

சதிராட்டக் கலைஞராக, வேளாண் மாந்தராக, தத்துவ ஆசான்களாக, கப்பற் கட்டும் பொறிஞராக, சிற்பக் கலை வல்லுநராக, சித்தராக செம்மாந்து வாழ்ந்த அறிவுகுடி வாரிசுகள், 

நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்’  என்று 
நம்ப வைக்கப்பட்டு முடங்கி கிடக்கிறது.

கருத்துகள் இல்லை: