சங்கக் காலம்...
இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றக் தொடங்கியிருந்த காலம்.
பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் வறுமையின் பிடியில் வாழ்கிறான். வறுமையை
நீக்கிக் கொள்ள, வள்ளலைத் தேடிச் சென்று, பரிசுகளைப் பெற்று வா.. வாழ்! என்று வழிகாட்டி வாழ்த்தி அனுப்பினான். பாணனின்
தோழன்.
காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள தொண்டை நாட்டை ஆண்ட ஒரு குறுநில அரசன் தொண்டைமான்
இளந்திரையன். பண்ஆரம் சூடும் பாணனுக்கெல்லாம் பொன்னாரம் சூடும் புகழ்மிக்க வள்ளல். இந்த வள்ளலை காண வழிப்போக்கனாய் பாணன்
ஐந்திணை நிலங்களைத் தாண்டிப் காஞ்சி போகவேண்டிய
பாணனின் பயணத்த்தில் 'நீர்ப்பெயற்று' என்னும் ஊரை கடக்கவேண்டி இருக்கிறது. தன் பயணக்கட்டுரையில் பாணன் பதிவுசெய்கிறான்.
“வண்ட லாயமொ
டுண்டுறை.....
என்ற வரிகளோடு தொடங்குகிற பாடலின் காட்சி இதுதான்
……………………………………………………."என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ?"
"அட.. உனக்கும் தெரிந்துவிட்டதா?.. நான் புலவன் என்பதை எப்படி கண்டுபிடித்தாயோ?"
"இந்த 'நீர்ப்பெயற்று' கடலை 'ஆ' வென வாயைப் பிளந்துகொண்டே ரசிக்கிறீர்கள்.. ஆடை சற்று கந்தல்...ஆனால் உம்
கண்களில் ஒரு மின்னல் ஒளி... இது போதாதா உம்மைக் கவிஞன் என காட்டிக் கொடுக்க?..."
ஆஹா.. பெரிய ஆள்தான் போ.. சரி..சரி.. காஞ்சிக்கு போகும் வழி சொல்லேன்..."
"இந்தக் கடல் பக்கமிருந்து மேற்கே சென்றால்
காஞ்சி.."
"திசை தெரியாமல் கேட்கவில்லை அப்பா.. வழி ..வழி
கேட்கிறேன்.. புரிந்ததா?"
காஞ்சிக்கு நீர் போக வேண்டும்.. அவ்வளவுதானே.. வாரும்.. நானும் அந்தப்
பக்கம்தான்.. இப்படியே பொடி நடை போட்டால் காஞ்சி வந்துவிடும்.."
நல்ல வாய்ப் பேச்சுக்காரந்தான் நீ.. இதோ பெரிய கடல் கண்முன்னே வெள்ளம் போல்
வருகின்றது..இங்கிருந்து காஞ்சி வெகு தொலைவில் இருப்பதாக எல்லோரும் சொன்னால் நீ
ஏதோ பொடி நடை என்கிறாய்..."
"கவிஞரே! கடல் நீர் வெள்ளம் போல நம்மை நோக்கி
பெயர்ந்து வருகிறது என்று அழகாக சொன்னீர்..அதனால்தான் இந்த ஊரை 'நீர்ப்பெயற்று' என்று அழைக்கிறார்களோ என்னவோ... அதோ அங்கே
பாரும்.. அந்தக் கடல் நீரில் எத்தனை அழகான பெண்கள் எத்தனை ஆனந்தமாக நீர்
விளையாட்டு விளையாடுகிறார்கள்... சிரிக்காமல் பாரும் அந்தப் பெண்ணை.. தன்
செவிப்பூணைத் நீரில் தொலைத்துவிட்டு தன் மெல்லிய வளைகரங்கள் குலுங்க தவிக்கும்
அழகைப் பாரும்... அடடே..அதோ அந்த நீலவண்ண மீன்கொத்திப் பறவை அவள் செவிப்பூணை
பளபளக்கும் மீன் என நினைத்து கொத்தி எடுத்து செல்கின்றதே.. பாவம் அந்தப் பெண். சரி
சரி கவிஞரே! இதையெல்லாம் பார்க்காமல் 'கருமமே கண்ணாயினார்' போல் காஞ்சி
நோக்கி நடை போட்டால் கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்.."
"இதோ பார்.. நான் காணாததையெல்லாம் எனக்கும்
காண்பித்துவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் வா..என்றால் எப்படி? கவிஞன் என்றால் இயற்கையை ரசிப்பவன்
ஐய்யா..அந்தப் பறவையையும்,பெண்களையும்,
கடலையும் பெயர்ந்து வரும்
நீரையும் அப்படியே பார்த்து கொண்டே இருக்கலாம்தான்.."
"நீர் காஞ்சிக்கு போக வேண்டுமா.. வேண்டாமா?"
வேண்டும்..சரி சரி.. நடையைக் கட்டு.. என்ன இருந்தாலும் இந்த நீர்ப்பெயர்ற்று
ஊர் பரபரப்பாகவே இருக்கிறதய்யா.. அங்கே பார்.. பெருங் கப்பல்கள் எத்தனை அனாயாசமாக
நங்கூரம் போட்டு நிற்கின்றன..நல்ல நல்ல குதிரைகள் இறங்குகின்றனய்யா.. உம்...
வணிகம் அதிகம் நடைபெறும் ஊர்தான்.. செல்வம் அதிகம் உள்ள ஊர் போலும்.. பாலும்
நெல்லும் எங்கு பார்த்தாலும் அதிகம் தெரிகிறதே..அதோ.. அந்த நெல் வயல் ஒத்தையடிப்
பாதையில் வரிசையாக நடந்து வரும் பெண்களைப் பார்.. எத்த்னை நளினமான நடை..ஆஹா..
அவர்களின் ஆடைகளின் பளபளப்பு அவர்களின் அலங்கார நகைகளின் பளபளப்பை ஈடு
செயகிறதய்யா..நல்லது.. நல்லது.. நாடு வளமாக இருந்தால் நல்லதுதான்.."
"கவிஞர்கள் எப்போதும் இப்படி நல்லதையே நினைத்து
சொல்வதால்தான் நாடு வளமாக இருக்கிறது.. அதோ அந்தப் பெண்கள் அணிந்த கொன்றை மலர் கூட
கண்களுக்கு குளுமையாக காட்சியாக இருக்கிறதே.. அந்தப் பெண்களின் நடையைப்
பாருங்களேன்.. கோடை மழையைக் கண்ட மயில்களின் துள்ளல் நடை..பாருங்களேன் அப்படியே
துள்ளித் துள்ளி நடந்தாலும் கீழே விழாமல் அவர்கள் நூல் பந்துகளை தூக்கிப்
பிடிக்கும் அழகே தனிதான்..ஏன் புலவரே.. அவர்கள் கால் சிலம்பு பொன்னால்
செய்யப்பட்டதோ.. கிண்கிண்' என இனிமையாக
சலங்கை சத்தம் நம் காதில் விழுகிறதே.."
'"நீ சரியான பெண்பித்தன்.. பேசாமல் நடையைக்
கட்டுவாயா.. தங்கம்..அது இது.. என வர்ணிக்கிறாய்?"
"ஓஹோ! புலவர் வறுமையால் வாடுகிறார் போலும்..
சரி..சரி.. உம்மை எதற்கு உசுப்பெற்றவேண்டும்?..இவர்களையும் இந்த வழியில் உள்ள இந்தக்
கிராமத்து செல்வங்களையும் பார்த்து கொண்டே போனால் நடை அலுக்காது என்பதற்காக
சொன்னேன்.."
"அது என்னவோ உண்மைதான் தம்பி.. இந்த வழித்தடம்
கூட நன்றாக இருக்கிறது..பார்.. ஒவ்வொரு ஊரிலும் பாதைகளை எவ்வளவு நேர்த்தியாக
செப்பனிட்டு சரியான இடங்களில் மாட மாளிகைகள் எழுப்பி உள்ளார்கள்... அந்த வயல்களில்
பாரேன்.. அந்தக் காளை மாடுகள் கூட களையாகத் தெரிந்தாலும் களைப்பில்லாமல் உழவுக்கு
உழைக்கின்றதே.. உம்... வரப்புகளில் கூட தண்ணீர் அதிகம் தெரிகின்றது..வரப்புயர மண்
உயரும்.. சரியான சொல்தான்.."
"மண் உயர் மன்னன் உயர்வான்.. மன்னன் உயர மாந்தர்
உயர்வார்".. "இப்போது புரிகிறதா கவிஞரே.. ஏன் இங்கு செல்வம்
கொழிக்கின்றது என்று்?.."
புரிகிறது.. நன்றாகவே புரிகிறது.. ஆஹா! அதோ எதிரே தெரிகின்றதே.. அதுதான்
காஞ்சியோ? உன்னோடு
பேசிக்கொண்டே வந்ததில் பொழுதே தெரியவில்லை..நடையும் துளியும் அலுக்கவில்லை.. நீ
சொல்வது போல 'கடலிலிருந்து
காஞ்சி பொடி நடைதான்"...
"அது
வெளிப்புறத்து ஊர் புலவரே... காஞ்சியை நீர் சரியாக காணவேண்டும்..நடையை சற்று வேகமாக கட்டும்..சொல்கிறேன்…
……………………………………………
பாணன் பெயர் - 'கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
இடம் -
'நீர்ப்பெயற்று'
அட..,
மாமல்லபுரத்திற்கு 'நீர்ப்பெயற்று' என்பது. சங்க கால பெயர். மேல
கண்டது அனைத்தும் நேரில் கண்டு 'பெரும்பாணாற்றுப்படை'
யில் 'கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதியதுதான்..
அந்த காலத்தில் மாமல்லபுரம் எப்படி அழகா இருந்தது தெரியுமா ?
நீர்ப்பெயற்று ஊரில் உண்ணீர் பாய்ந்தோடும் துறைகளில் நீராடும் மகளிர் தம்
அணிகலன்களைக் கழற்றிக் கரையில் கழற்றி வைத்திருப்பார்கள்,. அங்கு மேயும் மணிச்சிரல் பறவைகள் அவற்றை இரை எனக் கருதி உண்ண அருகில் செல்லும்.
அவை இரை அல்லாமை கண்டு கொத்தி எறிந்துவிட்டு அருகிலுள்ள பெண்ணை மரத்தில்
உட்காராமல் அந்தணர் வேள்வி செய்ய நட்டிருந்த தூணில் அமரும். மணிச்சிரல்
வேள்வித்தூணில் அமர்ந்திருக்கும் காட்சி யவனர் விற்ற ஓதிம விளக்கு போல இருக்கும்.
அங்குள்ள கடலில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருக்கும். வெண்ணிறக் குதிரைகளும்
வடநாட்டுச் செல்வங்களும் நாவாயிலிருந்து இறக்குமதி செய்யப்படும். மாடம் மணல்
பரப்பில் இருக்கும் மாடி வீடுகளில் அவ்வூர்ப் பரதர் மக்கள் வாழ்ந்தனர். அந்த மாடி வீடுகளைச் சிலதர் என்று
குறிப்பிடப்படும் மக்கள் காவல் புரிந்தனர். வளர்ப்பினம் உழும் எருதுகள், கறவை மாடுகள், சண்டையிடும் ஆட்டுக்கடாக்கள், அன்னப்பறவைகள் போன்றவை அங்கு விளையாடும்.
அங்குள்ள மகளிர் பனிக்காலத்தில் கொன்றை பூத்திருப்பது போல் பொன்னணிகள்
அணிந்துகொண்டு சிலம்பிலுள்ள முத்துப் பரல்கள் ஒலிக்க வானளாவிய மாடங்களில்
வரிப்பந்து விளையாடுவார்கள்,. அந்த வளையாட்டில் சலிப்புத் தோன்றினால்
முத்துப்போல் வெளுத்திருக்கும் மணல் வெளிக்கு வந்து கழங்கு ஆடுவார்களாம். அவர்கள்
விளையாடும் கழங்கு பொன்னால் ஆனதாம். அங்குச் சென்றால் பாணர்கள் ஆமைக் கறியுடன்
அரிசி உணவு பெறலாம்.
ஏணிப்படியுடன் கூடிய வேயா மாடத்துத்
தொங்கவிடப்பட்ட எரியும் ஞெகிழி (தீப்பந்தம்) கப்பல்களுக்கு வழிகாட்டும். இவ்வுரிலுள்ள
உழவர்கள் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். மஞ்சள் காயும்
அவர்களது முற்றங்களில் பலாவும் வாழையும் பழுத்திருக்கும். அவற்றைத் தின்று
திவட்டிவிட்டால் பாணர்கள் சேப்பங்கிழங்குக் குளம்புடன் உணவு பெறலாம்.
1 கருத்து:
காஞ்சிபுரத்தின் அழகினை அமரர் கல்கியின் வரிகளிலேயே மனதை பறிகொடுத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை ரசிப்பார்கள் அழகாய் பெரும்பாணாற்றுபடையையும் கவிஞர்களின் வறுமையையும் சுட்டிக்காட்டியது அருமை
கருத்துரையிடுக