செவ்வாய், மார்ச் 05, 2013

பாதல் சர்க்கார்



மே 13ம் தேதி, இரவு எட்டரை மணிக்கு கொல்கொத்தா நகரின் அரசு மருத்துவமனையில் தனது எண்பத்தி ஆறாம் வயதில் நாடகக்கலைஞர் பாதல் சர்க்கார் மரணமடைந்தார்.
ஒரு புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவ பாதிரியாரின் மகனாகப்பிறந்து
எஞசினீயரிங் படித்து முடித்து சிவில் எஞ்சினீயராக சில வருடம்  லண்டனிலும் பிறகு நைஜீரியாவிலும் பணியாற்றி பின்னர் அவற்றையெல்லாம் உதறிவிட்டு, 1970களில் இந்தியாமுழுதும் ஒரு புயல்போலக்கிளம்பி நாடு முழுதும் பயிலரங்குகளை நடத்தி தனது மூன்றாம் அரங்குஎனும் மக்களுக்கான நாடகக் கருத்தாக்கத்தை பரவலாக்கியவர்; வேறெந்த நாடகாசிரியர்களது நாடகங்களையும் விட இந்தியமொழிகள் பல்வற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு நடிக்கப்பட்ட நாடகங்களை எழுதியவர். 2010-ம் ஆண்டு, கேரள சர்வதேச நாடக விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது,1972ம் ஆண்டு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாடெமியின் ஃபெல்லோஷிப் என பற்பல விருதுகளைப்பெற்றவர்.

2010 ம் ஆண்டு அளிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை புறக்கணித்தவர்.
எனினும் தான் பெற்ற விருதுகள்  குறித்து பெருமிதங்களோ புறக்கணித்தது குறித்த அகங்காரமோ ஏதுமில்லாதஎளிய வாழ்க்கை கொண்டவர் பாதல்சர்க்கார். மே 13 அன்று நிகழ்ந்த இவரது மரணம் மறுநாள் காலை கொல்கொத்தாவில் இருந்து வெளியான எந்தவொரு ஆங்கில, வங்க நாளிதழ்களிலும் செய்தியாகவில்லை என்பதுதான் ஓரு வருத்தமளிக்கும் உண்மை.

34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இடதுமுன்னணியின் தேர்தல் தோல்வியும் திரிணமூல் காங்கிரஸின் வெற்றியும்தான் அன்றைய செய்தியாக இருந்தது.
பாதல் சர்க்கார் மரணமடைந்த அன்று மறுநாள் பாதல்சர்க்கார் குறித்து நூலொன்றை எழுதிவரும் தேசிய நாடகப்பள்ளியைச்சேர்ந்த கீர்த்தி ஜெயின்,எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பாதல்சர்க்காரின் பல செயல்பாடுகளைப்போலவே அவரது மரணமும் கவனிக்கப்படாமல் போனதென்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் கொல்கத்தாவாசியான பாதல் சர்க்கார் தன்னை இடது முன்னணியின் ஆதரவாளராகவோ அவற்றின் செயல்பாடுகளோடு அடையாளப்பட்டவராகவோ தன்னைக்காட்டிகொண்டவரில்லை.
தனது கட்சித்தொடர்பு குறித்து கடந்த ஆண்டு கரண்ட்இதழின் இணைய பதிப்பில் நீலாஞ்சன் தத்தா என்பவர்க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நான் எந்த ஒரு ஆளுமையினாலும் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவனில்லை. இந்த சமூகம் மாற்றப்படவேண்டும் என்பதற்காக அதற்கான வழிமுறையையும் சிந்தனையையும் கொண்ட கட்சியில் இணைந்தேன். இன்று நான் கட்சியில் இல்லை என்ற போதும் இந்த சமூகம் மாற்றப்படவேண்டும் என்பதற்காகவே என் நாடகங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறேன். இப்பணி முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. தொடர்ந்துகொண்டுதானிருக்கும். இன்று நான் கட்சிக்கு வெளியில் இருந்தாலும்  ஒரு மார்க்ஸிஸ்ட்டாகவே இருந்து வருகிறேன்.

1960களில் பாதல் சர்க்கார் சில முக்கியமான நாடகங்களையெழுதுகிறார்.அபோங் இந்திரஜித்’ [ஏவம் இந்திரஜித் என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாடகம் தமிழில் ராஜாராம் அவர்களால் பிறிதொரு இந்திரஜித்என மொழிபெயர்க்கப்ட்டிருக்கிறது].  1963ல் எழுதப்பட்ட இந்நாடகம் வாழ்வின் இருப்புகுறித்த எக்ஸிஸ்டென்ஸியலிஸக்கேள்விகளை உள்ளடக்கியது

1972-74 களில் கொல்கொத்தா நகரத்தின் மையமான கர்சன் பார்க்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்துக்கு மேற்பட்ட குழுக்கள் திறந்தவெளியில் நாடகம் நிகழ்த்தும்.இவற்றில் பாதல் சர்க்காரின் சதாப்தி குழுவும் ஒன்று. அது இடதுசாரிகள் மீது சித்தார்த்த சங்கர் ரே அரசு, கொடூரமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருந்த காலம்.

நாடகம் பார்க்கக்கூடியிருந்த பார்வையாளர்கள் மீது போலீஸார் கொடூரமான தடியடி நடத்தியபோது பிரபீர் தத்தா என்பவர் மண்டைஉடைந்து இறந்து போனார். எனினும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இது போன்ற திறந்தவெளி நாடகங்கள் கர்சன் பார்க்கில் நிகழும். 3000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் அவற்றைக்காணத்திரள்வர்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் வரை இவை தொடர்ந்தன. உண்மையில் திறந்தவெளியில் நாடகம் நிகழ்த்துவது என்பது பாதல் சர்க்காரின் கண்டுபிடிப்பல்ல. பலர் இதுபோன்ற முயற்சிகளில் அன்று ஈடுபட்டிருந்தனர்.

இச்சூழலில்தான் இவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு மூன்றாம் அரங்கு’ [Third Theatre] என்ற பெயரில் தனது சதாப்தி குழுவின் மூலம் திறந்தவெளியில் நாடகங்களை நடத்த தொடங்கினார்.

ஏற்கனவே இருந்துவந்த மரபான நாடக வகைகளை அதாவது, நம்மூர் தெருக்கூத்து, கேரளத்து கதகளி, கர்நாடகத்து யக்‌ஷ கானா,வங்கத்து ஜாத்ரா போன்ற தொல்கலை வடிவங்களை முதல் வகை அரங்கு எனவும், காலனீய ஆதிக்கத்தில், மேற்கத்திய நாடுகளின் பாதிப்பில் உருவான  தற்போது நாம் காணுகிற மேடை நாடகங்களை அதாவது பிராசீனிய மேடை என்றழைக்கப்படுகிற படச்சட்ட வடிவ மேடை நாடகங்களை இரண்டாம் அரங்கு எனவும், மக்களை தேடிச்சென்று திறந்தவெளியில்,பூங்காக்களில், தெருமுனையில் நிகழ்த்தப்படுகிற நாடகங்களை மூன்றாம் அரங்கு எனவும் அவர் இனம் கண்டார்.

1992 ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியின் அருகிலுள்ள அய்கஃப்[AICUF] ஒழுங்கு செய்திருந்த பயிலரங்கில் நான் அவரை சந்தித்தேன்.சென்னையிலுள்ள நாடகச்செயற்பாட்டாளர்களோடு பாதல் சர்க்கார் கலந்துரையாடுகிற நிகழ்ச்சியை அப்பயிலரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அதற்குப்பிறகு எங்களது நாடகத்தைக்காண சர்க்காரை அழைத்தேன். மறுநாள் லயோலா கல்லூரிக்கருகிலுள்ள குடிசைப்பகுதியில் எங்களது சென்னைக்கலைக்குழுவின் மாநகர், ’உரம்ஜேம்ஸ்பாண்ட்போன்ற நாடகங்களை நிகழ்த்தினோம். அவற்றை பார்வையாளர்களோடு அமர்ந்து பார்த்தார். நாடகம் முடிந்ததும் எங்கள் குழுவினரோடு கலந்துரையாடினார். பாராட்டுதல்களைச்சொன்னார்.

தமிழ்நாட்டில் பாதல் சர்க்கார் சரியாகப்புரிந்து கொள்ளப்படாதவர் மட்டுமல்ல: சரியாக அறிமுகம் செய்யப்படாதவரும் கூட. முதன் முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது பிறிதொரு இந்திரஜித்நாடகம். நடுத்தரவர்க்கத்து இளைஞனைப்பற்றியது. 

எல்லாமே அர்த்தமற்றிருக்கும்  சமூகச்சூழலில் அவற்றோடு ஒத்துப்போகமுடியாமல் அடையாளமிழந்து போகும் ஓர் இளைஞனின் தவிப்பும் அவசமுமாக இந்நாடகம் விரியும்.. ஏமாற்றங்கள், இழப்புகள் ,கனவுகள் என்பதாக காட்சிகள் அமைந்திருக்கும் அர்த்தமற்ற இவ்வாழ்விலிருந்து விடுபட அவன் தற்கொலைக்கும் முயல்கிறான். அதிலும் அவன் தோற்றுப்போகிறான். இந்நாடகத்தின் இறுதியில் அர்த்தமற்ற இவ்வாழ்வின் சுமையை அவன் ஏற்றுக்கொள்ளத்தயாராகும் போது ஒரு வசனம் வரும் தீர்த்தஸ்தலங்கள் ஏதுமில்லை; தீர்த்த யாத்திரை தொடர்கிறதுஎன்று.

திடீரென சிலர் காணாமல் போய் விடுவார்கள். சிலதினங்களில் அவரது உயிரற்ற உடல் எங்கிருந்தாவது மீட்கப்படும். இது அன்றைய கொல்கொத்தாவிலும் மேற்குவங்கத்திலும் அன்றாட நிகழ்வாக  இருந்த காலம். இன்றைய காஷ்மீருக்கும் மணிப்பூருக்கும் இலங்கையின் தமிழ்பேசும் பகுதிகளுக்கும் இது பொருந்தலாம்.இப்பின்னணியில்தான் பாஸி காபர்நாடகத்தை அவர் உருவாக்குகிறார். அந்நாடகத்தில் இப்படி கொல்லப்பட்ட ஒருவன் பாத்திரமாக வருவான். பார்வையாளர்கள் மத்தியிலும் நாடகத்தில் வரும் கோரஸ்குழுவினரிடையேயும் இவன் சப்தமின்றி உலவிக்கொண்டிருப்பான். அவனது இருப்பு பலராலும் உணரப்படும். ஆனால் நாடகத்தில் வரும் மைய பாத்திரமான இளைஞனொருவன்  இப்படி கொல்லப்பட்டவனொருவன் இருந்துகொண்டிருப்பதை மறுத்துக்கொண்டேயிருப்பான்.

நாடக முடிவில் பாதல் சர்க்கார் இவ்வாறு எழுதியிருப்பார்.  நாம் ஒவ்வொருவரும் இந்நாடகத்தில் மையப்பாத்திரமாக வரும் இந்த இளைஞனைப்போலத்தான். நம்மிடையே உள்ள கொல்லப்பட்டவர்களைமறுத்துக்கொண்டேயிருக்கிறோம்.அதில் முழுமையாக வெற்றி பெற முடியாமல் தோற்றும் போகிறோம்.” என்று. இதுதான் பாதல் சர்க்கார்.

பலரும் அறியாத மற்றொரு விஷயம் ,பாதல் சர்க்கார் எதிர்காலத்தில் உலகமக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரு பொது மொழிகுறித்து கனவு கண்டவர். போலந்து நாட்டைச்சேர்ந்த எல்.எல். ஸாமென்ஹாஃப் [L.L.Zamenhaf] என்பவர் உலகத்து மொழிகளிருந்தெல்லாம் சீரியவிஷயங்களை எடுத்து ஒரு பொதுமொழி ஒன்றை உருவாக்க முயன்றார். இம்மொழிக்கு எஸ்பெரன்டோஎன்று பெயர்.  இம்மொழியை கற்றுக்கொடுப்பவர்கள் இன்று உலகம் முழுக்க இருக்கிறார்கள். அவர்களில் பாதல் சர்க்காரும் ஒருவர்.

பாதல், தனது கடைசி நாட்களில் தனக்கு பரிசாக கிடைத்த தொகையை வைத்துக்கொண்டு உலகம் முழுக்க பயணம் செய்தார். இவர் செல்லுமிடத்திலிலெல்லாம் இவருக்கு தங்குமிடம் தந்து உபசரித்தது இந்த எஸ்பெரன்டோசமூகத்தினர்தாம்.

நாடகவியலாளர் ரிச்சர்ட் ஷீனருக்கு எழுதிய கடிதத்தில் தனது மூன்றாம் அரங்ககோட்பாட்டின் பிரகடனங்களாக செயல் திட்டங்களாக சிலவற்றைச்சொல்கிறார்.

அதில்   
நகரத்திலிருந்து கொண்டு உழைக்கும் மக்களுக்காக உழைக்கும் மக்களைப்பற்றி நாடகம் செய்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற விவ்சாயிகள், நிலமற்ற விவ்சாயக்கூலிகள் அவர்களுக்கான நாடகத்தை அவர்களே தயாரிக்கவும்  நிகழ்த்தவும் உதவும் விதத்தில் அவர்களை ஆற்றலுள்ளவர்களாக்கவேண்டும். இச்சமூகம் பெரும்பாலான மக்களை உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும்நல்ல கல்விக்கும் சுகாதாரமான வாழ்விற்கும் ஏங்குகிற வறியவர்களாக மட்டுமல்ல அவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக, தன் திறன்மீது சுயமதிப்பற்றவர்களாக மாற்றி வைத்திருக்கிறது. நாம் இப்புனைவுகளை தகர்த்தாக வேண்டும் நாடகக்கலை என்பதும் கலைத்திறமை என்பதும் நடுத்தர படித்த வர்க்கத்தின் ஏக போகமல்ல என்பதை நாம் நிறுவ வேண்டும்.

உண்மையில் உழைக்கும் மக்களின் அணிதிரட்சி விரிவடைகிற போதுதான் இது சாத்தியமாகும். அப்படி நிகழும்போது நான் பரப்பிவரும் இந்த மூன்றாம் அரங்கின்தனித்த செயல்பாடுகள் தேவைப்படாது. அவை உழைக்கும் மக்களால் திருத்தியமைக்கப்பட்ட முதல் அரங்கோடுகலந்துவிடும்

பாதல் சர்க்கார் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான கருத்தியலை ஏற்றுக்கொண்டபோதிலும் சதானந்த் மேனன் கூறியது போல உழைக்கும் வர்க்கம்என்ற சொல்லின் பொருளை அதன் வழக்கமான அடைப்புக்குறிக்குள் வைத்து புரிந்துகொள்ளவில்லை. அடைப்புக்குறிகளை தாண்டி ஏழை ,    எளியவர்கள் , அன்றாடங்காய்ச்சிகள், விளிம்புநிலையினர் என்று எல்லோரையும் சேர்த்துப்பொருள் கொண்டவர்; பொருள்கொண்டதோடு மட்டுமன்றி
அவர்களையெல்லாம் தனது பார்வையாளர்களாக வரித்துக்கொள்ள விரும்பினார். வரித்தும்கொண்டார். அதுவே பாதல் சர்க்காரின் தனிச்சிறப்பு

நன்றி -
புதிய விசை. 

கருத்துகள் இல்லை: