டெல்லியில்
நடைபெற்ற பாலியல் கொடுமைக்கு எதிராக, டெல்லி மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்துகின்றனர். அது குறித்த
செய்திகள் பல நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களில் தெளிவாகப் பகிரப்படுகின்றன. எனவே,
அந்த செய்திகளுக்குள்
நான் போகப்போவதில்லை.
ஆனால், அது குறித்த தமிழகத்தில் எழுந்த சில குறிப்பான
கருத்துகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.
“டெல்லி
பெண்ணுக்குப் போராடுகிறார்கள்… ஆனால், தமிழகப் பெண்களைக் கண்டுகொள்ளவில்லை”
இப்படியொரு
கருத்தாக்கம் சீமான் போன்றவர்களால் முன் வைக்கப்படுகிறது. எதிலும் தமிழகம்
வஞ்சிக்கப்படுகிறது என்ற புலம்பல் அரசியலை திராவிடக் கட்சிகள் விட்டுவிட்டதால்,
அதனைக்
கையிலெடுத்துக்கொள்ளலாம் என்று சில அரசியல் சக்திகள் விரும்பலாம்.
அல்லது பாரதி
சொன்னது போல வெறும் பெட்டைப் புலம்பல் என்று நான் சொல்லமுடியாது. அதனால், வெட்டிப் பேச்சு வீணர்கள் என்று உறுதியாகச்
சொல்வேன். இந்த வீணர்களின் உளறல் ஆபத்தானது. அது உண்மையை அரசியல்- சமூக
நிகழ்வுப்போக்கின் தீவிர தன்மையை காண மறுக்கிறது அல்லது மறைக்கிறது.
டெல்லியில்
நடைபெற்ற பாலினத் தாக்குதல் டெல்லியில் நடைபெற்றதாலேயே அதிகக் கவனத்தை ஈர்த்தது.
அதற்குக் காரணம் அங்கே இந்தி பேசுகிறார்கள், தமிழ் பேசவில்லை, அல்லது பாதிக்கப்பட்ட பெண் தமிழச்சியில்லை
என்பதால் அல்ல.. அது நடந்தது இந்தியாவின் தலைநகரில் என்பதால்.
அனைத்து
தொழில்நுட்ப உன்னதங்களுடன், அனைத்து
அதிகாரத்துடன், அனைத்து
ஆணவத்துடன் வல்லரசு நோக்கி பயணப்படுவதாக சொல்லப்படும் இந்தியாவின் தலைநகரில்
பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் எழுந்த இயல்பான கோபம் அது. அது இந்திய
அரசின் மீதான, இந்திய அரசியல்
முறை மீதான பரந்துபட்ட மக்களின் கோபம் என்பதாகக் காண வேண்டுமே தவிர, ‘எனக்கு அந்த மாதிரி மிட்டாய் கிடைக்கவில்லை’
என்ற சிறுபிள்ளை மனப்பான்மை
அரசியலுக்கு ஆகாது.
மற்றொரு கவனிக்க
வேண்டிய செய்தி, இளைஞர்களும்,
மாணவர்களும் அரசின் மீது
கொண்ட கோபத்தை வலுவாக உணர்த்தியுள்ளார்கள். அரசியல் கட்சிகள் மீது கொண்ட
கோபத்தையும் தெளிவுபடுத்தியுள்ளனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்,
மற்றும் அகில இந்திய
மாணவர் சங்கத்தைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்புகளையும் அவர்கள் கடைசி நாள்
போராட்டங்களில் இணைத்துக் கொள்ளவில்லை. அரசுக்கெதிராக, ஆளும் கட்சிகளுக்கு எதிராக சேர்த்து
வைக்கப்பட்ட கோபம் போராட்டமாக வெடித்துள்ளது.
இதன் விளைவு
உடனடியாகச் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் பாலியல் தாக்குதல்
சம்பவங்கள் பதிவாகின்றன. அப்படியானால், பாலியல் தாக்குதல் திடீரென அதிகரித்துவிட்டது என்றா கருதுகிறீர்கள்?
இல்லை.
மாறாக, பாலியல் குற்றங்களைப் வெளிப்படையாக்கும்
பாதிக்கப்பட்டவர்களின் முயற்சி ஊக்கம் பெற்றுள்ளது. வழக்காகப் பதிவது, குரல் எழுப்புவது அதிகரித்துள்ளது. அந்த அளவு
டெல்லி பாலியல் தாக்குதல் மீதான மக்களின் போராட்ட அலை, வீச்சு கொண்டதாக இருக்கிறது.
இந்த அம்சங்களைப்
புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். அவற்றை தமிழக அரசியலில் முன்னெடுப்பது
அவசியம். மாறாக, ‘டெல்லிக்கு ஒரு
நீதி’, அல்லது, ‘ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பது பயன்தராது.
தமிழ்நாட்டில்
பெண்கள் மீதான வன்முறை தற்போது ‘அரசியல் ரீதியாக
அமைப்பாக்கப்பட்ட வடிவம்’ எடுத்திருக்கிறது
என்பதைக் கவனிக்க வேண்டும். இராமதாசும் அவரின் இதர சாதிப் பேய் அமைப்பு
நண்பர்களும் சேர்ந்து தலித் அல்லாத அரசியல் அணியொன்றை உருவாக்கும் அளவுக்கு
தைரியம் கொண்டுள்ளனர். அதற்கு எதிரான கோபக்குரல் தமிழ்நாட்டின் குரலாகக்
கட்டமைக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பாலியல் வன்முறை
என்பது வன்புணர்ச்சி மட்டுமல்ல. வன்முறை என்பது உடலைத் தாக்குவது மட்டுமல்ல,
மனதைத் தாக்குவதும்
வன்முறைதான்.
இராமதாசு போன்ற
அரசியல்வாதிகள் யார் யாரைக் காதலிப்பது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக்
கையிலெடுத்துக் கொண்டுள்ளனர்.
வரவிருக்கும்
நடாளுமன்றத் தேர்தலில் நடப்பிலுள்ள உண்மையான அரசியல் பிரச்சனைகளைப் பேசி, மக்களின் பக்கம் நிலையெடுத்து ஜெயித்துவிட
முடியாத/ அதனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பற்ற இராமதாசு அனைத்து பசப்பு
முற்போக்கையும், மார்க்ஸ் முதல்
பெரியார் வரையிலான அனைத்து படங்களையும் கழற்றி எறிந்துவிட்டு, சாதி வெறியைத் தூண்டி வாக்குகளைப் பெறும்
முடிவுக்கு வந்துவிட்டதையே அது காட்டுகிறது.
அவரின் நிலைபாடு
காரணமாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் மற்றும் ஆண்கள் மீதான வன்முறைகள்
அதிகரித்து வருகின்றன என்பதை செய்திகள் காட்டுகின்றன.
இராமதாசு
போன்றோரை ஓரங்கட்டுவதற்கு பெண்களின் உரிமையை நிலைநாட்டுவது ஒரு வழியாகும்.
காதலிக்கும் உரிமையை நிலைநாட்டுவது முக்கியமானதாகும்.
செத்துப் போய்
விழித்தெழுந்த சாதிப் பிணம் மீண்டும் எழாமல் எரித்து சாம்பலாக்க காதல் தீ
பயனாகும்.
ஆணும் பெண்ணும்
சமம் என்று நிறுவுவதற்கு இன்று எழுந்துள்ள பாலியல் தாக்குதலுக்கு எதிரான, ஆணாதிக்கத்தின் வடிவமான டெல்லி அரசியலுக்கு
எதிரான போராட்டங்களை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அந்தத் தீயை தமிழகத்திலும்
மூட்டிவிட முயற்சிக்க வேண்டும்.
இல்லையென்றால்,
வடக்கு வாழ்கிறது தெற்கு
தேய்கிறது என்று ஆட்சியதிகாரத்தைப் பிடித்து, பின்னர் சாதியையும் ஒடுக்குமுறையும்
நிலைநிறுத்த பாடுபட்ட திராவிட அரசியல் கட்சிகளின் மீட்சியை அல்லது புதிய போலித்
தமிழர்களின் வருகையை நாம் ஆற்றலுடன் தடுக்க முடியாது.
- சி.மதிவாணன்
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக