“ சாதி ஒடுக்குமுறை உள்ள அல்லது சமத்துவமற்ற எதனோடும், அது தமிழ்த்
தேசியமாகவே இருப்பினும் அதனோடு எனக்கு சம்மதம் இல்லை”
சென்னை இக்ஷா
அரங்கத்தில் 01.12.2012 அன்று “விடுதலைக்
குயில்கள்” ஏற்பாடு செய்திருந்த தர்மபுரி தாக்குதலுக்கு எதிரான
கண்டன கூட்டத்தில்தான் இவ்வாறு பேசினார் தோழர்.சுப.வீ அவர்கள்.
தோழரது தமிழ்த்
தேசியத்தோடு நமக்கு முரண்பாடுகள் இருந்திருக்கலாம். சில நேரங்களில் பொதுத்
தளங்களில் சிலர் விமர்சித்தும் இருக்கலாம்.
ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான அவரது அயராத, அப்பழுக்கற்ற மிக நீண்ட உழைப்பில் யாருக்கும்
எப்போதுமே சந்தேகம் இருந்ததில்லை. அதற்கான அவரது கடந்த கால இழப்புகளையும், காயங்களையும், வலிகளையும் நாம்
உணர்ந்தே இருக்கிறோம் என்ற வகையில் அவரது உரை நம்மை அசைத்து உலுக்கத்தான் செய்தது.
தமிழ்த் தேசியமா?, சாதி ஒழிப்பா? எது முதலில் என்ற
கேள்விக்கு கொஞ்சமும் தயக்கமின்றி தனது வேலைத் திட்டத்தில் சாதி ஒழிப்பிற்கே
முதலிடம் என்பதாக அமைந்தது அவரது உரை. “தமிழன்” என்ற ஒற்றை அடையாளமல்ல, ”சாதியற்ற தமிழன்” என்பதே தனது இலக்கு என்பதை மிகச் சரியாகத் தெளிவு
படுத்தினார்.
ஆயிரக் கணக்கான மேடைகளில்
தமிழ்த் தேசியம் பேசிய தோழர். சுப. வீ அவர்கள் தமிழன் என்ற அடையாளத்தில் சாதிச்
சாயம் இருக்குமானால் அது தனக்குத் தேவையில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏன்
வந்தது?
எனில், இதுவரை அப்படிப்
பேசுவதற்கான தேவையே யாருக்கும் இல்லாமல் இருந்ததா?
எப்போதும் சாதி இருக்கவே
செய்தது. புலேயும், அம்பேத்கரும், பெரியாரும், ரெட்டைமலை
சீனிவாசன் அவர்களும், அயோத்திதாசப்
பண்டிதரும் இன்னும் பலரும் போராடியதன் விளைவாக மட்டுப் பட்டுக் கிடந்த ஜாதி
வெறியின் வீரியம் இப்போது மீண்டும் தன் கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.
ஒரு காலத்தில் வெளியூருக்கு
வேலைக்கு செல்பவர்கள் தங்குவதற்கு வீடு பார்த்தால் கொஞ்சமும் வெட்கமின்றி என்ன
ஜாதி என்று கேட்பார்கள். ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் இரட்டைக் குவளை இருந்தது.
திருமண ஏற்பாடு
செய்பவர்கள் பெண் எப்படி?
மாப்பிள்ளை
எப்படி? என்பதையெல்லாம்
விசாரிப்பதற்கு முன் அவர்கள் குலம் என்ன? கோத்திரம் என்ன? என்பதைத்தான் விசாரிப்பார்கள். இவை ஒத்து வந்தால் மட்டுமே
மற்றதைக் குறித்து கவனம் செலுத்துவார்கள்.
இது ஏதோ பாமர கிராமத்து
மக்களிடம் மட்டுமே இருந்ததாகக் கொள்ளக் கூடாது.
” ஒடுக்கப் பட்டோர் குரல்” என்ற பத்திரிக்கையை அம்பேத்கர் ஆரம்பிக்கிறார். அப்போது
திலகர் அவர்கள் “கேசரி” என்ற இதழை நடத்தி
வருகிறார். கேசரி இதழில் தனது “ ஒடுக்கப்பட்டோர் குரல்” இதழுக்கான விளம்பர வாசகத்தையும், அதற்கான
கட்டணத்தையும் இணைத்து அனுப்புகிறார் அம்பேத்கர். அவை திருப்பப் படுகிறது. தலித்
ஒருவர் நடத்தும் இதழின் விளம்பரத்தைப் போட்டால் தனது இதழ் தீட்டுப் பட்டுவிடும்
என்பதைத் தவிர வேறு என்ன காரணத்தை திலகர் இதற்கு சொல்லியிருக்க முடியும்?
ஆக, “சுதந்திரம் எனது
பிறப்புரிமை” என்று
முழங்கியவர் என்று ஒளி வட்டத்தோடு பிம்பம் கட்டமைக்கப் பட்டு பள்ளியின் முதல் நாள்
தொட்டே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் ஒரு தலைவரிடமே சாதி
இருந்திருக்கிறது. அதுவும் அம்பேத்கரிடமே அவர் இந்த அளவிற்கு தனது ஜாதியைக்
காட்டியிருக்கிறார் என்றால் ஒரு சாதாரண தலித்தை திலகர் எவ்வளவு கேவலமாக
நடத்தியிருப்பார் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இன்னொன்றையும் இங்கே
பார்க்க வேண்டும். திலகர் மாதிரி தலைவர்களே அம்பேத்கர் மாதிரி தலைவர்களிடம் இப்படி
ஜாதியோடு நடந்து கொண்டார்கள் என்றால் மற்ற பாமர சாதி இந்துக்கள் பாமர தலித்துகளை
எவ்வளவு கேவலமாக நடத்தியிருப்பார்கள்.
இப்படி இருந்த நிலைதான்
கொஞ்ச காலம் மட்டுப் பட்டுக் கிடந்தது. பையனுக்கோ பெண்னிற்கோ வரண் பார்ப்பவர்கள் “ எதுவாயிருந்தாலும்
பரவாயில்லை, அதுவா மட்டும்
இல்லாமப் பார்” என்று
கேட்பவனுக்கும் சொல்லும் தனக்குமே கேட்காத ரகசியக் குரலில் சொல்லுமளவிற்குத்தான்
ஜாதி இருந்ததது. இப்பொழுதும் ஜாதி பார்க்கவே செய்தார்கள். அதை வெளிப்படையாக பேச
வெட்கப் பட்டார்கள்.
இப்போது மேடை போட்டு
பேசுகிறார்கள். மருத்துவம் படித்தவரும், பொறியியல் படித்தவரும், சட்டம் படித்தவரும், மேடை போட்டு
கலப்புக் கூடாது என்று வெளிப்படையாக வெட்கமின்றி பேசுகிறார்கள். தங்கள் சாதிப்
பெண்ணை வேறு சாதிக் காரன் மணந்தால் வெட்டிப் போடு ஒரு முன்னால் சட்டமன்ற
உறுப்பினரே பேசினார் என்பதான செய்திகள்கூட வருகின்றன.
இந்த இடத்தில் நமக்கு ஒரு
கேள்வி வருகிறது. இப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லையா?. நமக்குத் தெரிந்த
மட்டிலும் இது குற்றமே ஆகும். எனில் இப்படி பகிரங்கமாகப் பேசுகிறார்களே அவர்கள்
மேல் ஏன் நடவடிக்கையே எடுக்கப் படவில்லை. இப்படி ஒருவர் மற்றவரிடம் உரையாடினாலே
வன்கொடுமை சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உரியவராகிறார். மேடை போட்டு கூட்டம் கூட்டி
காவல் துறையினர் குவிந்து பாது காப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் அவர்கள்
சாட்சியாகவே ஒருவர் உரத்தக் குரலெடுத்து பேச முடிகிறது என்றால் வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தை வேறு எதற்கு எதிராகப் பயன்படுத்த பத்திரப் படுத்தி
வைத்திருக்கிறார்கள் என்ற அய்யம் இயல்பாகவே வருகிறது.
இது இப்படி இருக்க
வன்கொடுமை சட்டம் கொடுமையானது. அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள்
பேசுவதில் வியப்பாய் எதுவும் இல்லை. எல்லா நேரங்களிலும் சட்டம் இப்படி மௌனம்
காக்காது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருப்பதன் விளைவுதான் இந்தக் கூற்று.
ஒருக்கால் சாதீய அடக்கு முறைக்கு எதிரானவர்கள் கையில் அதிகாரம் வந்துவிட்டால்
தங்களது அயோக்கியத் தனங்கள் தண்டிக்கப் படும் என்கிற எச்சரிக்கை உணர்வே அவர்களை
வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வைத்திருக்கிறது.
இந்தச் சூழல் மட்டுமல்ல
சுப.வீ அவர்கள் அப்படிப் பேச. அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பதை உள்ளபடி உணர
வேண்டுமானால் கீழ்வரும் சில சம்பவங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சம்பவங்கள்
என்பது அயோக்கியத்தனம் என்றே படுகிறது. கொடுமைகள் என்பதே சரி.
சேத்தியாத் தோப்பு
சென்னிநத்தம் காலனியைச் சேர்ந்த கோபாலக்கிருஷ்ணன் என்ற தலித் இளைஞனும் பரதூரைச்
சேர்ந்த சாதி இந்துப் பெண்ணான (அநேகமாக வன்னிய இனத்தைச் சார்ந்த) துர்காவும் ஒரே
கல்லூரியில் படிக்கிறர்கள்.இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. பெண்ணின் தந்தை
ரவியும் அவரது உறவினர்களும் கண்டிக்கிறார்கள். காதலும் எதிர்ப்பும் போட்டிப்
போட்டுக்கொண்டு வளர்கின்றன.
திடீரென கோபாலக் கிருஷ்ணனைக்
காணவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள்
நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடுகிறார்கள்.
ஆட்கொணர்வு மனு போட்ட
அடுத்தநாள் வெள்ளியங்குடி குளத்தில் கோபாலகிருஷ்ணனது உடல் மிதக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகளும்
கோபாலகிருஷ்ணனின் உறவினர்களும் கோபத்தோடு தெருவிற்கு வந்த பின்னால் துர்காவின்
தந்தை ரவி அவரது பாட்டி கனகவள்ளி மற்றுமொருவரை கைது செய்கிறது காவல்துறை.
துர்காவின் தந்தை கொடுத்த
வாக்குமூலத்தை நக்கீரன் இணைய தளத்தில் வாசிக்க முடிந்தது.
தான் எவ்வளவோ கண்டித்தும்
கனிவாக எடுத்துக் கூறியும் கோபாலகிருஷ்ணன் கேட்கவில்லை என்றும், ஒரு இழவிற்காக
தான் வெளியூர் சென்றிருந்த சமயம் கோபாலகிருஷ்ணன் தன் வீட்டிற்கு வந்து துர்காவோடு
பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். அதை பார்த்த அவரது அம்மா கனகவள்ளி
இருவரையும் கட்டையால் அடித்து தனித் தனி அறைகளில் போட்டு பூட்டி வைத்ததாகவும் தான்
கோபத்தில் கொன்று விட்டதாகவும் சொல்கிறார்.
முதலில் ஒரு கிழவியால்
இரு இளைய வயதுப் பிள்ளைகளை அடித்து தனித் தனி அறைகளில் தள்ளிப் பூட்ட முடியுமா? அவ்வளவு பலமற்ற
பித்துக் குளியா கோபாலகிருஷ்ணன். இதை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கூட்டுச் செயலாகவே
கொள்ள முடிகிறது.
அதை எல்லாம் விசாரனை
பார்த்துக் கொள்ளட்டும். நாம் கவலை கொள்ள அதைவிடவும் முக்கியமான விசயம் ஒன்று
இருக்கிறது.
பொதுவாகவே இப்படி ஒரு
கொலை நடந்த பின்னால் அதற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றே
நிறுவ முயல்வார்கள். ஆனால் இங்கு நான்தான் கொன்றேன் என்று ரவி சொல்வதன் மூலம் ஜாதி
எந்த வித சிறு உடையுமின்றி அம்மணமாய் வெட்கமின்றி வெளி வருகிறது. இந்த
துணிச்சல்தான் நாம் கவலை கொள்ள வேண்டியதும் எதிகொண்டு வீழ்த்தவேண்டிய
விசயமுமாகும்.
இதைவிடக் கொடியது
பிரியாவின் கொலை.
சிறுவத்தூர் என்ற ஊரைச்
சார்ந்த சரண்யா என்ற வன்னியப் பெண்னும் காந்தளவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த
பறையர் இனத்தைச் சார்ந்த சிவகண்டன் என்ற இளைஞனும் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கின்றனர். இதே சமயத்தில் காந்தளவாடி கிராமத்தைச் சார்ந்த பிரியா என்ற தலித்
பெண் சிறுவத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
சிறுவத்தூர்
வன்னியர்களின் கோவம் பிரியாவின் மேல் திரும்புகிறது. தங்கள் பெண்ணை பிரியாவின்
ஊர்க்காரன் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கோவத்தை பிரியா போகும் போதும்
வரும்போதும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரியாவும் ஒரு குளத்தில்
மிதக்கிறாள். இதை என்னவென்று சொல்வது? ஜாதி ஆணவமா? மனநோயா? அல்லது வேறு எதுவுவோமா?
தர்மபுரி நத்தம்
காலனியில் நடந்த கொடுமையில் அங்கு நடந்த வன்முறையை விடவும் அதற்கான திட்டமிடலே
மிகவும் ஆபத்தானதாகப் படுகிறது. யாருக்கும் ஒரு நகக் கீரலும் இல்லாமல் அத்தகையதொரு
கோர தாண்டவத்திற்கு எவ்வளவு கவனத்தோடு கூடிய திட்டமிடலும் எவ்வளவு நீண்ட
பயிற்சியும் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே ஈரக் குலை நடுங்குகிறது.
தோழர் யாழனோடு பேசிக்
கொண்டிருந்தபோது ஒன்றைச் சொன்னார். தாக்குதல் தொடங்குவதற்கு முன்னால் அந்த காலனியைச்
சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை அவர்களது பள்ளிகளுக்கே சென்று அவர்களை வீடுகளுக்கு
செல்ல வேண்டாம் என்றும் அவர்களது காடுகளுக்கு செல்லுமாறும் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் குரலில் இருந்த வன்மம் குழந்தைகளை மிரளச் செய்திருக்கிறது. காடுகளுக்குள்
ஓடியவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கியிருக்கிறார்கள்.
உயிர்ச்சேதம் அவர்களது
செயல் திட்டத்தில் இல்லை என்றே படுகிறது.
அந்தக் காலனியில்
இருப்பவை மற்ற சேரிகளைப் போல குடிசைகள் அல்ல. பெரும்பாலும் அவை மாடிக்
கட்டிடங்கள். அவற்றுள் பல இரண்டு மாடிக் கட்டிடங்கள். சொகுசானவை.
இரண்டு தலைமுறைகளுக்கு
முன்னால் துப்புறவு உள்ளிட்ட பணிகளை செய்து கொண்டு இருந்தவர்கள்.போன தலைமுறையினர்
அதிலிருந்து விடுபட்டு கொத்தனார்களாக மாறி புலம் பெயர்ந்து நிறைய சம்பாரித்து இதை
சாதித்திருக்கிறார்கள். தெருத் தெருவாக் கூட்டினாயே இனி நீ விளக்குமாறே வீட்டிலும்
எடுக்க்ட்க்கூடாது என்று வேக்கம் க்ளீனர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ 300 கான்க்ரீட்
வீடுகள். சுத்தமாய் இடித்திருக்கிறார்கள். மிக நிதானமாக, மிக இயல்பாக இதை
செய்து முடித்திருக்கிறார்கள். இதுதான் நம்மை கொதிக்க வைப்பதே.
ஒரு குடிசையைக்
கொளுத்துகிறார்கள். எரியும் ஒரு குடிசையிலிருந்து குரல் கேட்கிறது. உடனே தீயை
அணைக்கிறார்கள் உள்ளே அம்மாசி என்ற கிழவர் இருந்திருக்கிறார். அவரை பத்திரமாக
வெளியே கொண்டு வருகிறார்கள். மீண்டும் கொளுத்துகிறார்கள். எத்தகையதொரு மனத்
தயாரிப்பு வேண்டும் இதற்கு.
சொத்துகளை நாசம் செய்திருக்கிறார்கள்.
சான்றிதழ்களை கொளுத்தியிருக்கிறார்கள். அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி இதுதான்,
“கல்வியோ, செல்வமோ உங்களை எங்கள் அருகே கொண்டு வருமெனில்
உங்களிடமிருக்கும் இரண்டையும் நாசப் படுத்துவோம். உங்களை எங்களின் கீழே
வைத்திருக்க எதையும் செய்வோம்.”
உடனடியாக அரசு புதிய
பாடப் புத்தகங்களை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கிறார்கள். அவர்களை தைரியமாகப்
பள்ளிக்குப் போகச் சொன்ன போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை கேட்டாளாம்,
“ அவர்களோடு ஒன்றாய் நாங்கள் எப்படி படிக்க முடியும்?”
“ஏண்டா?”
”என்னோடு படிக்கும் வகுப்புத் தோழன்தானே என் வீட்டை
இடித்தது. அவனோடு எந்த தைரியத்தில் ஒன்றாய் படிப்பது?”
எனில் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் பையனைக் கூட சாதி அயோக்கியத் தனத்திற்கு தயார் செய்திருக்கிறது
என்றுதானே பொருள்.
அதே கண்டன நிகழ்ச்சியில்
கம்பீரன் பேசியதும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
அங்கு அமர்ந்திருந்த
சுப.வீ அவர்களைப் பார்த்து கை நீட்டி சுப.வீ அவர்கள் சாதியை மறுப்பதற்கு அவர்
படித்த பெரியாரியமே காரணம் என்றும் அங்கு பேசி அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்
பீமாராவ் சாதியை மறுப்பதற்கு அவர் படித்தி மார்க்சியமுமே காரணம் என்றும் கூறினார்.
ஆனால் எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார்
வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண்
எடுக்கலாம் என்றும் அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது.
அதற்குப் பிறகு பேச வந்த
மதிவண்ணன் அனைத்தையும் ஆமோத்த அதே வேளையில் தலித்துகளிலும் இந்தப் பாகுபாடு
இருப்பதாக வேதனையோடு சொன்னார்.விழுப்புரம் அருகில் உள்ள பல்லி வேலியனூர் என்னும்
கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பறையர் இனத்துப் பெண்ணும் அதே ஊரைச் சேர்ந்த
கார்த்திகேயன் என்ற அருந்ததிய இளைஞனும் காதலித்து 2010 வாக்கில் யாருக்கும் தெரியாமல் பதிவுத்
திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும்
இருவரும் வழக்கம் போல அவரவர் வீட்டில் அவரவர் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் உண்மை
தெரிந்ததும் கோகிலாவை அவரது வீட்டில் கொலை செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
விசாரிக்கச் சென்ற நண்பர்கள் சொல்வதிலிருந்து ஒரு கட்டத்தில் கோகிலா கதறிக் கொண்டு
வெளியே வந்ததாகவும் அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றதாகவும், தடுத்த
உறவினர்கள் இது தங்கள் வீட்டு விசயம் என்று கூறி தட்டி விட்டதாகவும் தெரிகிறது.
மேற்சொன்ன சமவத்தை சொன்ன
மதிவண்ணன் இது குறித்தும் கவலையும் கவனமும் கொள்ளவேண்டும் என்று சொன்னபோது அரங்கம்
இறுகியது.
அதே கூட்டத்தில்
இறுதியாகப் பேச வந்த தோழர்.திருமாவளவன் மதி வண்ணன் கூறியதை தாம் ஏற்பதாகவும், இதுமாதிரி
இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அருந்ததியரோடு இணைந்துதான் எதிர் கொள்ளும் என்றபோது
மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.
அவர் சொன்னது உண்மை
என்பதைபல்லிவேலியனூரில் கார்த்திகேயனது உறவினர்களோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள்
இயங்குவதை அறியும் போது உணர முடிகிறது.
சரி ,இதற்கு என்னதான்
தீர்வு?
“எங்கள்
தேசத்தில்
கொசுவையும்
ஜாதியையும்
ஒழிப்பதற்கு ஏதுமில்லை”
என்பதுபோல வைரமுத்து
ஒருமுறை எழுதினார். ஒழிக்க முடியாது என்பதாய்க் கொண்டு முயற்சிக்காமல் விட்டு
விடலாமா?
அதே கூட்டத்தில் இனி
ஒவ்வொரு ஃபிப்ரவரி 14 அன்றும் ஊர்
ஊராக காதல் திருமணங்களை நடத்தப் போவதாக அறிவித்தார்.
மிக அருமையான யோசனை.
ஆனால் அது போதாது.
முதலில் குற்றவாளிகள்
கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்.
மதத்தைவிடவும் சாதி
கொடூரமானது என்பதை உணரவும் உணர்த்தவுமான தேவை இருக்கிறது.
ஒரு கிறிஸ்தவர்
இஸ்லாமியராகவோ இந்துவாகவோ சட்டப்படி மாறலாம். ஒரு இந்துவும் அப்படியே
இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற் முடியும். ஒரு இஸ்லாமியர் நினைத்தாலும் உடனடியாக
இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ மாறிவிட முடியும். ஆனால் என்ன செய்தாலும் ஒரு தலித்
அய்யராகவோ செட்டியாராகவோ அல்லது வேறு உயர்ந்த சாதிக்காரராகவோ மாற முடியாது.
ஆகவே மத நல்லிணக்கத்தைக்
காட்டிலும் சாதி ஒழிப்பே இன்றையப் பிரதானம் என்பதை உணர்ந்து நல்ல சக்திகள் களமேக
வேண்டும்.
பெரியார் திடலில்
திராவிடர் கழகம் ஏற்பாடு செய்ததைப் போல் ஊர் ஊராக சமூக அமைப்புகள் கலப்பு மண
சுயம்வரங்களை ஏற்பாடு செய்து ஊக்குவிக்க வேண்டும்.
இதில் இரண்டு இடதுசாரி
அமைப்புகளும் தங்களுக்கான பொறுப்புணர்வினை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிற்றிதழ்கள் பேரதிகப்
பக்கங்களை இதற்காக ஒதுக்க வேண்டும்.
ஊடகங்கள் இதன் மீது கவனம்
குவிக்க வேண்டும்.
படைப்பாளிகள் கலப்பு
மணங்களை, சாதி ஒழிப்பை
மையப் படுத்தி வாசிக்கிற மாதிரி படைப்புகளைத் தருதல் வேண்டும்.
வீதி நாடகங்கள், கூத்துகள்
போன்றவை இவற்றை சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
த.மு. எ.க. ச கலை இரவுகளை
முழுக்க முழுக்க இதனை மையப் படுத்தி நிகழ்த்த வேண்டும்.
இந்த உயரிய நோக்கோடு
பார்க்கிற மாதிரி திரைப் படங்கள் வரவேண்டும்.நாடு முழுக்க கிளைகளைக் கொண்டுள்ள
த.மு. எ.க.ச போன்ற அமைப்புகள் நினைத்தால் குறும் படங்களும் திரைப் படங்களும்
சாத்தியமே.
இவை எது கடந்தும் வீரியம்
மிக்கது மெகா தொடர்கள்.
ஆனால் இவை எல்லாம் கடந்து
சாதிவெறியர்களைத் தண்டிக்க வேண்டி அழுத்தமான நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும்.
கவனம் குவிப்போம்.
நன்றி
இரா.எட்வின்
” காக்கைச்
சிறகினிலே”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக