திங்கள், ஜனவரி 10, 2011

ஜென்னியின் காதலன்

"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை இறந்தபோது சவப்பெட்டி இல்லை" 

ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்?
பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?

ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.
ஜென்னிக்கு 4- வயது நடக்கும் போது கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.
ஜென்னியை விட கார்ல் மார்க்ஸ் 4- வயது குறைவு. கார்ல் மார்க்ஸ் தந்தை வக்கீல் தொழில் செய்தவர். அவருக்கு மொத்தம் 8- குழந்தைகள். ஐந்து பெண்கள் 3- மகன்கள். இதில் இரண்டு பெண் குழந்தைகளும், 2- ஆண் குழந்தைகளும் எலும்புருக்கி நோயால் இறந்துவிட்டனர். அதனால் கார்ல் மார்க்ஸ் மீது தந்தை மிகவும் பாசமாக இருந்தார்.

பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்ததால் ஜென்னியின் தந்தைக்கும் கார்ல் மார்க்ஸின் தந்தைக்கும் நல்ல நட்பு இருந்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸிம் சிறுவயதில் இருந்தே ஒன்றாக பள்ளிக்கு செல்லும் போதும், விளையாடும் போதும் வேறு எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். 17- வயதில் கார்ல் மார்க்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கனவுகளில் ஜென்னி அக்கிரமித்தாள். ஒவ்வொரு மணித்துளியும் ஜென்னியின் ஞாபகம். கார்ல் மார்க்ஸ்சுக்கு காதல் வந்துவிட்டது. ஜென்னியின் பக்கம் பார்த்தால் காதல் உணர்வுகளில் கார்ல் மார்க்ஸ் ஹீரோவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

கார்ல் மார்க்ஸ் ´பான்´ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஜென்னியும், கார்ல் மார்க்ஸீம் திருமணம் செய்துக் கொள்வதாக இரகசியமாக பேசி முடிவு செய்துக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவது இருகுடும்பத்தினருக்கும் தெரியாது. கார்ல் மார்க்ஸீன் தந்தைக்கு முதன் முதலில் தெரிந்த போது அதிர்ந்து போனார். மிகப் பெரிய பணக்காரப் பரம்பரைச் சேர்ந்தவர்கள். நடக்கிற காரியமா இது? ஜென்னியின் தந்தை தன்னை என்ன நினைப்பாரென்று கவலைப்பட்டார். இந்த காதல் கூத்தில் தன்னுடைய நட்பு பிரிந்துவிடப் போகிறது என்ற கவலை வேறு. மகனிடம் பக்குவமாக சொல்லிப் பார்த்தார். முதலில் படிப்பை முடி என்று சொல்லி வைத்தார். கார்ல் மார்க்ஸ் ´பெர்லின்´ கல்லூரிக்கு மேற்படிப்புக்கு சென்ற போதும் கார்ல் மார்க்ஸீன் தந்தையிடம் இருந்து ´காதல் வேண்டாம்´ என்ற அறிவுரையோடு கடிதம் அடிக்கடி வந்துக் கொண்டே இருந்தது.

ஜென்னியும் கார்ல் மார்க்ஸீம் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். கார்ல் மார்க்ஸ் சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் செய்துக் கொள்வதாகவும் அதுவரையில் ஜென்னி காத்திருப்பதாகவும் முடிவாயிற்று. கார்ல் மார்க்ஸ் படிப்பை முடிக்கும் வரை 7- வருடங்களாக ஜென்னி காத்திருந்தாள். சிலமுறை அவளின் தந்தை வரன்கள் பற்றி பேச்சு எடுத்த போதும் தவீர்த்து வந்தாள். இருவரையும் விட கார்ல் மார்க்ஸ் தந்தை மிகுந்த சங்கடத்துடனும் பயத்துடனும் இருந்தார்.

ஜென்னியின் காதல் தவீர, சட்டம், சரித்திரம், பூகோளம், தத்துவம் பாடங்களை விட்டால் நூல் நிலையங்களுக்குச் சென்று தத்துவ நூல்களை விரும்பிப் படிப்பது இவை தவீர, கார்ல் மார்க்ஸ் வேறெதிலும் ஈடுபாடு காட்டியதில்லை. குறிப்பாக தத்துவம் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது கார்ல் மார்க்ஸீக்கு. தந்தைக்கோ மகன் தன்னைப் போல் வழக்கறிஞன் ஆகவேண்டும் என்று விரும்பினார். கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனையோ பாடங்களுடன் சமூகத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதிக சிந்தனை, இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பது அல்லது தத்துவங்கள் குறித்து எழுதிக் கொண்டிருப்பது என இருந்த கார்ல் மார்க்ஸ் அக்காலத்தில் புகழ்பெற்ற ´எகல்´ என்ற தத்துவத்தை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேட ஆரம்பித்தார். தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜென்னியை நினைத்துக் கவலைப்பட்டார். எப்போதாவது வரும் கார்ல் மார்க்ஸீன் கடிதங்களும் நினைவுகளும் அவளை வாழ வைத்ததாக பிரிதொரு சமயத்தில் ஜென்னி சொல்கிறாள். அந்தளவுக்கு பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாள். கார்ல் மார்க்ஸீம் அப்படியே.

மகன் தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் ஜென்னியை திருமணம் செய்வதில் காட்டிய ஈடுபாட்டால் தந்தையிடம் பிரச்சனை வந்திருந்தது. மேலும் அக்கால அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் சர்வாதிகாரங்கள் ஜெர்மனியில் இருந்தன. நேர்மையாளரான துடிப்பு மிக்க வாலிபனுடைய வார்த்தைகளில் பலவித தொந்தரவுகள் ஏற்பட கார்ல் மார்க்ஸீக்கு ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. அந்த கட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தந்தையும் இறந்து போனார். கார்ல் மார்க்ஸ் சிறுவயதாக இருக்கும் போதே அக்காக்கள் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டார்கள். நெருங்கிய தொடர்பும் அவர்களுடன் இல்லை. கார்ல் மார்க்ஸீக்கு தனிமையில் தவீத்தார். ஜென்னியை திருமணம் செய்துக் கொள்வதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெறியேற வேண்டும் என்ற இரு குறிக்கோளைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை.

1843-
இல் ஜீன் 13-இல் க்ருஸ்னாக் என்ற ஊரில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்பொது ஜென்னியின் வயது 29. அத்துடன் ஜென்னியின் வசதி நிறைந்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அதே வருடத்தில் பாரீசுக்கு வந்துவிட்டார் மார்க்ஸ். ஜென்னியின் வீட்டில் பணிப்பெண்கள் வேலை செய்வார்கள். ஜென்னிக்கு வறுமையும் தெரியாது, வேலையும் தெரியாது, பட்டினியும் தெரியாது. தன் காதலனின் விருப்பப்படி சொந்த நாட்டையும், குடும்பங்களையும் பிரிந்து வேலையில்லாத காதலனுடன் ஒருவேளை சாப்பாட்டுக்கும், தங்கி இருந்த மிகச் சிறிய அறையிலும் தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை தொடங்குகிறாள். வறுமையின் விளிம்பில் இருந்த போதும் ஒருமுறைக் கூட காதல் கணவனை அவள் குற்றம் சுமத்தவில்லை. அவள் காதலை மட்டும் நேசித்தாள். கார்ல் மார்க்ஸிடம் அளவுக்கு அதிகமாக கிடைத்தது.

தத்துவவிவாதம் குறித்து ஜென்னியுடன் பேசியபோதெல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டும், உற்சாகத்துடன் ஊக்குவித்துக் கொண்டும் இருந்தாள் ஜென்னி. 1844- இல் மே 1-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்காலகட்டத்தில் மார்க்ஸ் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். படிப்பதும், சிந்திப்பதுமாக இருந்த கார்ல் மார்க்ஸ் பாரீசில் ஜெர்மன் தொழிலாளர்களுக்கும், பாரீஸ் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து தீவிர ஆர்வம் காட்டினார். குறைந்த கூலியில் வேலை செய்த ஜெர்மானியர்கள் மீது பாரீஸ் தொழிலாளர்கள் வெறுப்புடன் இருந்தனர்.

அந்தக்காலக்கட்டத்திலேயே பிரான்சில் சோஷலிஸக் கருத்துக்களுக்கு தீவிர ஆதரவு கிளம்பின. பல இடங்களில் கூட்டங்கள் நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்களிடம் தெளிவான கொள்கைகளோ, ஒற்றுமையோ இல்லாமல் பிளவுபட்டுக்கிடந்தது. முடிந்த வரை எல்லாக் கூட்டங்களுக்கும் செல்வார் கார்ல் மார்க்ஸ். கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் மீது திருப்தி இல்லாமல் இருந்தது அவருக்கு. அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பார். வேலையில்லாத கணவன் எப்போதாவது கட்டுரை எழுதினால் அதில் வரும் வருமானம். ஜென்னி கைக் குழந்தையுடன் எப்படி சமாளித்தாளோ?

கணவனின் செயல்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் கார்ல் மார்க்ஸ் அசரவில்லை. தன் கருத்தை எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டே இருந்ததால் ஜெர்மானிய நாட்டு அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கார்ல் மார்க்சை கவனிக்கும்படி சொல்லியது. பிரான்ஸ் அரசாங்கம் கார்ல் மார்க்ஸை 24- மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்லியது. ஜென்னியையும், குழந்தையையும் பிரான்சில் விட்டு பெல்ஜிக் சென்றார். ஜெர்மன் அரசாங்கம் அந்த நாட்டிலும் கார்ல் மார்க்ஸை நிம்மதியாக விடவில்லை. வெறுப்புற்ற அவர் ஜெர்மன் நாட்டின் பிரஜை என்ற உரிமை எனக்குத் தேவையில்லையென தூக்கியெறிந்தார். சில காலத்திற்கு பிறகே ஜென்னியை வரவழிக்க முடிந்தது.

´
ப்ரஸ்ஸல்ஸ்´ என்னும் இடத்தில் அவர்கள் தங்கி இருந்தபோது பொதுவுடமைக் கழகத்தின் கட்டிடத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் தோழர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது பெல்ஜீய போலீஸ் கட்டிடத்தைச் சுற்றி வலைத்தது. கார்ல் மார்க்ஸை தவீர மற்ற அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஜென்னிக்கு தகவல் தெரிந்ததும் பதறினாள். தன் கணவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தாள். ஜென்னிக்கு அப்படி என்னத்தான் தீராத காதலோ? எதுவும் வேண்டாம் அவளுக்கு, கார்ல் மார்க்ஸ் தனக்கு அருகில் இருந்தால் போதும். தத்துவங்களுடன் தர்க்கம் செய்துக் கொண்டும், பேசிக் கொண்டிருந்தாலுமே போதும். கார்ல் மார்க்ஸீடன் ஒரு அடி ரொட்டித் துண்டை பகிந்து கொண்டு கந்தல் உடைகளை போட்டுக் கொண்டு வறுமையின் கொடுமையில் வாழ்ந்தாலும், ஜென்னி தாய் வீட்டில் இருந்த சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தையே கார்ல் மார்க்ஸீடன் இருந்த போதும் அவளுக்கு இருந்தது. அப்படிப்பட்டவளுக்கு கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்றால் எப்படி இருக்கும்?

கணவனைக் காப்பாற்றியாக வேண்டுமே. புதிய இடம்; யாரையும் தெரியவில்லை. பெல்ஜீயம் ஜனநாயக சங்கத்தின் தலைவரான ´ஜோட்ரான்ட்´ என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டாள். தேவையான ஏற்பாடுகளை அவர் செய்வதாக சொல்லி ஜென்னியை பாதுகாப்பாக வீடு வரை சென்று விட்டு வரும்படி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ´கிகாட்´ என்பவரை உடன் அனுப்பினார் தலைவர். வீட்டுக்கு வந்த போது வீட்டினுள் ஒரு போலீஸ் இருந்தான். "கார்ல் மார்க்ஸை பார்க்க வாருங்கள் அழைத்துச் செல்கிறேன்" என்றான். கிகாட்டுக்கு சற்று யோசனையாக இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் ஜென்னி உங்களுடன் நானும் வருகிறேன் என்றார்.

போலீஸ் ஸ்டெஷனுள் ஜெயில் அதிகாரி மரியாதைக் குறைவாக பேச ஆரம்பித்தான். ´விபச்சாரி´ போன்ற வார்த்தைகளை உபயோகித்த போது கிகாட் கண்டித்தார். அதனால் கிகாட் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ´வில்லே´ என்ற சிறையில் விபச்சாரிகளுடன் ஜென்னியும் அடைக்கப்பட்டாள்; கணவனைத் தேடி வந்த ஜென்னிக்கு கிடைத்த இழிபேச்சுக்களும், விபச்சாரிகளுக்கு இணையாக அவளை ஜெயிலில் நடத்தியது அவளுக்கு எப்படி இருந்திருக்குமோ? அப்போது கூட அவளைப்பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டாள். கார்ல் மார்க்ஸை தான் நினைத்து கவலைப்பட்டிருப்பாள்.
ஜெயிலுக்குள் மற்ற கைதிகளுக்கிடையில் ஜென்னியைப் பற்றி செய்தி பரவியது. எல்லா பெண் கைதிகளும் ஜென்னிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஜென்னியை வெளியே விடு என்று விபச்சாரிகளும்
கோஷமிட்டனர்.


ஜென்னியை காணாமல் அவள் வீட்டில் இருந்த ´ஹெலன்´ என்ற பெண் எல்லோரிடமும் நடந்த விஷயத்தை கூறினாள். எல்லோரும் ஜெயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஜெயிலைச் சுற்றி பதற்றமாக இருந்தது. மறுநாள் மாஜிஸ்ட்டிரேட் முன் ஜென்னியை நிறுத்தியபோது குழந்தைகளையும் ஏன் கைது செய்யவில்லையென்று போலீசை கண்டித்தார் என்றால் சட்டத்தின் ஒழுங்கை பாருங்கள்.

அரசாங்கம் மக்களிடம் கார்ல் மார்க்ஸீக்கு இருந்த ஆதரவைக் கண்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நாட்டை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் குடும்பத்திற்கு கெடு வைத்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸையும் விடுதலை செய்தனர். 24- மணிநேரத்தில் 4- மணிநேரமே இருந்தது. வீட்டில் இருந்த சாமான்களை கூட எடுக்க முடியவில்லை. குழந்தைகளுடன் போலீஸ் ஜென்னியையும், கார்ல் மார்க்ஸையும் நாட்டின் எல்லையில் கொண்டுபோய் விட்டது.

சில துணி மூட்டைகள் குழந்தைகள் கணவனுடன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட ஜென்னி கார்ல் மார்க்ஸீடன் அந்த சூழலில் என்ன பேசி இருப்பாள்? வேறு பெண் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்? ஜென்னியைப் போன்று ஒரு பெண் காதலால் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்க்கொண்டும் சாகும்வரையில் காதலனுடன் இருந்திருப்பார்களோ என்னவோ? பிரச்சனை, வறுமை, நாடு கடத்தப்படல் இப்படியே ஆயுள் முழுவதும் ஜென்னி எப்படி தாக்கு பிடித்திருப்பாளோ?

மீண்டும் கார்ல் மார்க்ஸ் தன் குடும்பத்தினருடன் பாரீஸ் வந்தார். பிறகு சில வாரங்களில் ஜெர்மனிக்கு சென்றார். தோழர்களுடன் கூட்டம், பிரச்சாரம் என போராட்டங்களை சுருக்கி எழுதவிட முடியாது. நீண்ட போராட்ட வாழ்க்கை அவர்களுடையது என்றாலும், ஜென்னியை மையப்படுத்தி செல்ல வேண்டுமென்பதால் மீண்டும் ஜென்னியிடமே செல்வோம்.

ஜெர்மனியில் இருந்த போது கார்ல் மார்க்ஸ் தொடங்கிய பத்திரிக்கை மிகப் பிரபலமாகியது. மார்க்ஸீய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டளை வந்தது. அப்போது ஜென்னி கர்ப்பமாக இருந்தாள். மற்ற குழந்தைகளும் சிறியது வயதுடையவர்கள். மீண்டும் 1- வருடத்திற்கு பிறகு பிரான்சுக்கு வந்தார்கள். அங்கு வந்ததும் 1- மாதத்திற்குள் பிரான்சை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற அரசு கட்டளை. ஜென்னி நிறைய மாத கர்ப்பிணி. வேலை எதுவுமில்லை. சின்ன குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இனியும் வேறு நாட்டுக்கு போகும் அளவு ஜென்னியின் உடல்நிலை இல்லாததால் அரசாங்கத்திடம் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யும்படி தன் சூழலை விரிவாக குறிப்பிட்டார் மார்க்ஸ். அரசாங்கம் வேண்டுமானால் மனைவியும், குழந்தைகளும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் இருக்கக் கூடாது என்றது. கார்ல் மார்க்ஸ் வேறு வழியின்றி அன்றே வேறு நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழல்.

ஜென்னிக்கு வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. எப்போது என்ன நடக்குமென்று தெரியாது. இருப்பினும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். கார்ல் மார்க்ஸீன் கொள்கைக்கு உறுதுணையாக இருந்தாள். லண்டனுக்கு மார்க்சை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டாள். கார்ல் மார்க்ஸ் லண்டனுக்குச் சென்று ஜென்னியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொள்வதாக முடிவாகியது.

லண்டனில் மார்க்ஸ் குடும்பத்தினரை வரவழித்த போது வேலை எதுவும் இல்லை. நண்பனின் உதவித் தொகையில் வீட்டு வாடகை கட்டிக் கொள்ள மட்டும் முடிந்தது. பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவுக்கு கூட வழிக்கிடைக்காமல் பட்டினி கிடந்தன. நல்ல உடைகள் இல்லை. குளிருக்கு பாதுகாப்பான போர்வைகள் இல்லை. சிறிய ரொட்டித்துண்டகளும், சில உருளைக்கிழங்களும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர். ரொட்டியும் உருளைக்கிழங்கும் ஐரோப்பாவில் ஏழைகளின் உணவு. அது கூட மார்க்ஸ் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கு கூட ஒருவேளை உணவுகள் கிடைத்திருக்கும். குழந்தைகளையும், கணவனையும் நினைத்து மனதுக்குள் அந்த தாய்யுள்ளம் நிச்சயம் தவித்திருக்கும்.

குழந்தைகளின் தேவைகளைக் கூட கார்ல் மார்க்ஸீடம் ஜென்னி சொல்வதில்லை. குழந்தைகளின் கஷ்டத்தை நினைத்து கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் சிதறிவிடக் கூடாது என்பதில் ஜென்னி உறுதியாக இருந்தாள். இருப்பினும் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மனைவியை நினைத்தும், குழந்தைகளின் நிலையை நினைத்தும் மிகவும் வருந்தினார். போதிய சத்துணவு இல்லாததால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு அடைந்தன. ஜென்னிக்கு முதுகுவலி, நெஞ்சுவலி வர ஆரம்பித்தது. பசிக்கு அழும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக் கூட முடியாத நிலை. பாலுக்கு பதில் ரத்தம் தான் ஜென்னிக்கு வந்தது. நல்ல குளிரிலும் தரையில் படுத்தார்கள். வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் போய்விட்டது.

வறுமையோடு போராடிய ஜென்னியிடம் குடியிருந்த வீட்டுக்கு உரிமையான பெண் ஏலம் போடுபவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்து எல்லா சாமான்களையும் பொறுக்கிக் கொண்டு வாடகையான 5- பவுன் பணத்தை உடனே கொடுக்காவிட்டால் அத்தனை பொருட்களையும் ஏலத்துக்கு விடுவேன் என்று கத்தினாள். மார்க்ஸ் பித்து பிடித்தவர் போல் உட்கார்ந்து விட்டார். குழந்தைகள் பயத்தில் அழுதன. நண்பர் ஒருவர் யாரிடமாவது உதவி கேட்கலாமென்று குதிரையில் புறப்பட அன்று பெரும் மழை பெய்துக் கொண்டிருந்தது. அதில் குதிரை தாக்கு பிடிக்க முடியாமல் தவறிவிழ நண்பருக்கு உடம்பெல்லாம் ரத்தக் காயம் ஏற்பட்டு வெறும் கையுடன் திரும்பினார்.

"
வாடகை பணத்தை வை, இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறு" என்று வீட்டுக்காரப் பெண் பணத்தில் குறியாய் இருந்தாள். ஒரே ஒரு நாள் கெடு கொடுத்தாள். அப்படியே பணத்தை கொடுத்தாலும் உடனே வீட்டை காலி செய் என்று கட்டளை இட்டாள். டக்கென்று வேறு இடம் பிடிப்பதென்றால் நடக்கிற காரியமா? குழந்தைகள், மனைவியுடன் என்ன செய்வது?

கடைசியாக நண்பர் ஒருவர் வீட்டுகொஞ்சம் பணஉதவி செய்தார். மீதி பணத்திற்கு வீட்டில் இருந்த பொருட்களை விற்று வாடகை கட்டினார். மறுநாள் வீட்டுக்குள் ஏலம் எடுப்பவர்கள் நுழைந்த செய்தி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கார்ல் மார்க்ஸீடம் துக்கம் விசாரிப்பதுபோல் எல்லோரும் கேள்வி கேட்டார்கள். அவமானத்தில் குறுகிப் போவிட்டார் கார்ல் மார்க்ஸ். அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களை இப்படி எழுத்தாக்கி விளக்குவதற்கு கூட நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

மறுநாள் வேறு ஓர் இடத்திற்கு மார்க்ஸ் குடும்பத்தினருடன் இடம் மாறினார். அவை சேரிப்புறம் போன்றது. மிகவும் மோசமான சுகாதாரம். இரைச்சலும், அழுக்கும், துர்நாற்றமும் உடைய பகுதி அது. இரண்டு அறைகள் அடங்கிய அந்த வீட்டில் 6- வருடங்கள் வாழ்ந்தார்கள். அங்கு சென்றதும் மார்க்ஸீன் சிறிய குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மார்ப்புச்சலியால் அவதிப்பட்டு மூன்று நாட்களில் இறந்துவிட்டது. சவப்பெட்டி வாங்க கையில் பணம் இல்லை. ஜென்னியின் கதறிவிட்டாள்.

"
குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை
அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை."

பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த 2- பவுன் பணத்தில் சவப்பெட்டி வாங்கி அடக்கம் செய்தனர். சில வருடங்களுக்கு பிறகு 6- வயது மகன் எட்கார் இறந்தான். குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஜென்னியும், கார்ல் மார்க்ஸீக்கும் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. மார்க்ஸீக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் முழுவதும் கொப்பளங்கள் உண்டாயின. அத்தொற்று வியாதி ஜென்னிக்கும் வந்தது. சரியான சாப்பாடு இல்லாமல், பட்டினி, உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. விகாரத்தோற்றம் அருவெறுப்பாக மற்றவர்களை பார்க்கத் தூண்டும் அளவு கொப்புளங்கள். யாரும் வேலைக்கு கூட கூப்பிட மாட்டார்கள். தன்னுடைய பெரிய பெண்கள் இருவரையும் பணக்கார வீட்டில் வேலைக்கு அமர்த்திவிட்டு சிறிய குழந்தையும், ஜென்னியுடனும் ஏதாவது அனாதை விடுதியில் தங்கிவிடலாமா என்ற சிந்தனையும் கார்ல் மார்க்ஸீக்கு இருந்தது.

ஜென்னிக்கு வறுமையும், கஷ்டங்களும் அவமானங்களும் பெரியதாக தெரியவில்லை. தன்னுடைய குழந்தைகளின் மரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

"
என் குழந்தைகள் இல்லாமல் நான் வாழ்கிற நாட்கள் அதிகரிப்பானது என் துன்பத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என்று குழந்தைகள் இறந்து 10- ஆண்டுகளுக்கு பிறகும் கூறிக் கொண்டே இருந்தாள். அக்குழந்தைகளைப் பற்றியே பேசினாள். யாருக்காவது கடிதம் எழுத நேர்ந்தால் இறந்த குழந்தைகளைப் பற்றியே எழுதினாள்.

டிசம்பர் 2, 1881- இல் ஜென்னி இறந்தபோது கார்ல் மார்க்ஸை நேசித்தாள். இறந்த குழந்தைகளை நினைத்து வருந்தினாள். ஜென்னி இறந்த போது கார்ல் மார்க்ஸ் இறந்து விட்டார். காதலியின் மறைவுக்கு பிறகு நடைப்பிணமாகவே அவர் இருந்தார். 1883- ஜனவரி 11- இல் மூத்த மகள் பாரீசில் இறந்த செய்தி கிடைத்தது. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் சென்று மார்ச் 14- இல் மதியம் 2.45- க்கு கார்ல் மார்க்ஸ் இறந்தார்.

ஜென்னி தன் இளைய வயதில் இருந்த வசதியான வாழ்க்கை இனி கிடைக்காதே என்று ஏங்கவில்லை. அவளுக்கு பணம் பெரியதாக தெரியவில்லை. தன்னை நேசித்த கார்ல் மார்க்ஸின் காதலை மட்டும் கடைசி வரையில் பெற்றிருந்தாள். காதலில் ஜென்னி தோற்கவில்லை. காதலுக்கு அகராதியில் அர்த்தம் தேடுகிறோம். காதலின் உணர்வுகளை பலர் அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால், காதல் என்பது இருவரின் இதயத்தில் இருந்தும் உண்மையான நேசிப்பில் தொடங்கினால் நிச்சயம் வெறுப்பில் முடிந்துவிடும் உணர்வல்ல காதல் என்பதற்கு ஜென்னியின் காதல் முன் உதாணம்....

கார்ல் மார்க்ஸ் ஒவ்வொரு முறையும் ஜென்னியை விட்டு பிரிந்து செல்லும் கட்டாயம் ஏற்படும் போதெல்லாம் ஜென்னி சொல்லுவாள்....
"நீ என்னருகில் இல்லை என்ற உணர்வானது
நான் என்னிடம் இல்லை என்பதை
உணரக் கூட முடிவதில்லை"

கருத்துகள் இல்லை: