சனி, ஜனவரி 08, 2011

வெளிச்சத்திற்கு பின்னால்..

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை நகர்த்தும் எரிபொருள், கட்டிடங்களையும் பாலங்களையும் உயர்த்திப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள்

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள்…. மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

வரலாறு நெடுக மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு, அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும்.
இயற்கையின் இந்தக் கொடை அதன் இயல்பின் படி அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஓரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டியே கொழுக்கிறது.

உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி,புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சுரங்க விபத்துகளின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் கழகத்தின் செய்தி ஒன்றின் படி,உலகத் தொழிலாளர்களில் சுரங்கத் தொழிலாளர்களின் சதவீதம் ஒன்று  ஆனால் மொத்த தொழிற்சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் சுரங்கங்களில் மட்டும் 8% மரணங்கள் நிகழ்கின்றன.  இது பதியப்பட்ட மரணங்களின் கணக்கு தான். இன்னும் எத்தனையோ மரணங்கள் சுரங்க முதலாளிகளாலும் அரசாங்கத்தாலும் மறைக்கப்படுகின்றன.


சீனத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சற்று முன் நடந்த ஒரு சுரங்க விபத்தில் 34 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது.
விபத்துகள் என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? 
இதில் பூமியைக் குடைந்து அமைக்கப்படும் சுரங்கங்களின் பணிச்சூழலின் தன்மை நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாயங்கள் நிறைந்த ஒன்று. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத சுரங்கங்களின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடக்கூடும். இதுவும் போக நாட்கணக்கில் சுரங்கத்தினுள் பணிபுரியும் தொழிலாளிகளுக்கான உணவு தண்ணீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான சப்ளை துண்டிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூமியின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து விடும். மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் திடீரென்று வெளிப்பட்டுவிடுவதும் அதனால் தீ விபத்துகள் ஏற்படுவதும் சாதாரணம்.
அபரிமிதமான உற்பத்தியை மிகக் குறைவான நேரத்தில் குறைவான கூலியில் சாதிப்பது என்பதில்தான் லாப அளவு நிர்ணயிக்கப்படும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று.

எனவே பாதுகாப்பான ஆழம் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவையும் கடந்து பூமியைக் குடைந்து செல்லுமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இந்தப் பகாசுர உற்பத்தி வேகத்தின் காரணமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவு செய்து லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியும் வீணாகி விடக்கூடாது என்கிற முதலாளிகளின் பேராசைக் காரணமாகவும் அடிப்படை அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் விட்டுவிடுவதாலேயே 
தொழிலாளர்களின் பணிச் சூழல் பாதுகாப்பு, விபத்து தடுப்புப் போன்றவைகளை தொழிற்சாலை முதலாளிகளின் கட்டாயமான பொறுப்பு அல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டியதோ இல்லை நட்ட ஈடு தரவேண்டியதோ தேவையில்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றி எழுதப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்ப்புகளை துப்பாக்கிச் சப்தங்கள் மௌனமாக்கின. 

சுரங்கம் ஒன்றினுள் பதினேழு நாட்களாக, வெளியுலகத் தொடர்பு அற்று, மீட்கப்படுவோமா இல்லையா என்கிற நிச்சயமில்லாத ஒரு நிலையிலும், காற்றும் ஒளியும், நீரும் இல்லாத நிலையிலும் வாழ்வதற்கான நம்பிக்கையை மட்டும் உயிருடன் காப்பாற்றி வந்த அந்தப் போராட்டத்தை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. சொந்த அனுபவத்தில் மட்டுமே அந்தத் துன்பத்தின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள இயலும்.

அந்தத் தொழிலாளர்களிடையே ஓரளவு அனுபவம் கொண்ட, 40 வயதான மரியோ செபுல்வெடாவிற்கு ஆபத்து காலத்தில் தப்பித்துச் செல்வதற்கு காற்று வரும் பாதையில் மிருகத்தோலால் செய்யப்பட்ட ஏணி ஒன்று இருக்கும் என்பது தெரியும். அதில் ஏறிச் சென்று வெளியேற வழி அகப்படுமா என்று பார்க்கிறார். ஆனால், அந்த ஏணி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால் சிதைவுற்ற நிலையில் இருந்துள்ளது. அப்படியும் அதில் உயிரைப் பணயம் வைத்து ஏறிப்பார்க்கிறார்  அது 150 அடி தூரம் சென்றவுடன் முற்றிலுமாக சிதைவடைந்து கிடக்கிறது.

தலைக் கவசத்தில் இருக்கும் பாட்டரியினால் இயங்கும் விளக்கைத் தவிர்த்து
வேறு வெளிச்சம் இல்லாத நிலை. இரவா பகலா என்று புரிந்துக் கொள்ள முடியாத சூழல். வெளியுலக சப்தம் ஏதும் அற்ற அந்த நிலையில் அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்கிறார்கள்.
தப்பிக்க மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் அவர்கள் தமக்குள் ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையானவர்கள் ஆதரித்த முடிவையே ஒருமனதாக செயல்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தின் சுத்தத்தை பராமரிக்க ஒரு குழு, தப்பிக்கும் வழியைத் தேட ஒரு குழு, மீட்புக் குழு வருகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழு என்று அவர்களுக்குள் இயல்பாகவே குழுக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த நிலையிலும், வெளிக்காற்றின் சுழற்சி தடைப்பட்டிருந்த நிலையிலும் அவர்களின் உடல் வெகுவேகமாக வியர்த்தது. உடலின் நீர்ச் சத்து வெகுவேகமாக குறைந்து வந்த அந்த நிலையில் கையிருப்பில் இருந்த தண்ணீரின் அளவும் அதே வேகத்தில் குறைகிறது. தண்ணீரும் மற்ற உணவுப் பொருட்களும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கே தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருந்துள்ளது. எனவே அவர்களுக்குள் இருப்பதை சமமாக பகிர்ந்து கொள்ள ரேஷன் முறை அமுல்படுத்தப்படுகிறது. பேட்டரிகள் தீர்ந்து போய் முழுமையான இருளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க எப்போதும் வெளிச்சத்தில் இருப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைகிறது. ஒருவேளை தங்கள் உடல்களாவது மீட்கப்பட்டால் குடும்பத்தாருக்குக் கிடைக்கட்டும் என்று அவரவர் தங்கள் இறுதிச் செய்தியை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை மரணம் நிச்சயம் என்பது உறுதியாகியிருந்தால் கூட அவர்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்பட்டிருக்கலாம்.
             அவைகளின் பகல்கள் நமது இரவுகளை விட இருட்டானவை 

1 கருத்து:

Unknown சொன்னது…

பதிவுகள் அருமை,வாழ்த்துக்கள்..