ஜசீரா
ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!
பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பிடித்த தொலைக் காட்சி சானல்.
உண்மைகள் உரைப்பவர்களையும், அதற்கு துணை நிற்பவர்களையும் என்று தான் ஏகாதிபத்தியவாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது? வழக்கம் போலவே உண்மையை வெளிக் கொணர்ந்த ஒரே காரணத்திற்காக அல் ஜசீரா தொலைக் காட்சி அமெரிக்காவிற்கு “தொல்லைக் காட்சி”யாக மாறிப் போனது. அன்றிலிருந்து இன்று வரை பல இடையூறுகளையும் சமாளித்து நீதிக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் அல் ஜசீராவின் இந்த குறுகிய கால வரலாறு ஊடக வரலாற்றில் பிரமிக்கத்தக்கதாகும்.
ஆப்கன் யுத்தத்திற்குப் பிறகு சமாளித்துக் கொண்ட அமெரிக்கா ஈராக் யுத்தத்தின் போது பாக்தாதினுள் நுழைந்த பிறகு, அவர்களின் கட்டளைக்கேற்ப செய்தியளிக்கும் சானல்களைத் தவிர மற்ற எல்லா சானல்களையும் வெளியேற உத்தரவிட்டது. அதையும் மீறி பல யுத்தச் செய்திகளை – அப்பாவி மக்களுக்கு அமெரிக்கப் படையால் இழைக்கப் பட்ட அநியாயத்தை – வெளியிட்ட ஜசீரா தொலைக்காட்சியின் நிருபர்கள் தங்கியிருந்த கட்டிடம், ஆப்கன் யுத்தத்தின் போது தாக்கப் பட்டது போல் தாக்கப் பட்டது. அமெரிக்கப் படையினர் அட்டூளியம் செய்து கொண்டிருப்பதை நேரடியாக ஒளி பரப்பிக் கொண்டிருந்த ஒரு ஜசீரா நிருபர்(தாரிக் அய்யூப்) அமெரிக்க படையினரால் தாக்கி படுகொலை செய்யப் பட்டதை அதே ஜசீரா நேரடியாக ஒளிபரப்பியது.
உலகத்திற்கு ஜனனாயகத்தைப் படிப்பித்துக் கொடுக்க வந்தவர்களாலேயே இந்த ஜனனாயக அத்துமீறல், பத்திரிக்கை சுதந்திரத்தை அடித்து ஒடுக்கும் செயல் நடத்திக் காட்டப் பட்டது. இதனையே மற்றொரு நாடு செய்திருக்குமானால் ஜனனாயகப் படுகொலை என்று கூறி அந்நாட்டிற்கு எதிராக இதே ஜனனாயக காவலன்(!) தலைமையில் பொறுப்பான மற்ற ஜனனாயக காவலர்களும்(!) திரண்டிருப்பார்கள்.
என்ன சம்பவம் நடந்தாலும் அதன் உண்மை முகத்தை அப்படியே வெளிக்கு கொண்டு வரும் ஜசீராவை எப்படி இத்தனை நாளும் விட்டு வைத்தார்கள் என்பதே ஆச்சரியமான விஷயமாகும். தனக்கு எதிராக நிற்கும் எந்த சக்தியையும் அழித்தே பழக்கப் பட்ட புஷ்ஷிற்கு மற்ற காரியங்களில் இறங்கியது போல் ஜசீராவிற்கு எதிராக இறங்க முடியவில்லை அல்லது அதற்கு எதிராக குற்றங்களை அடுக்க முடியவில்லை(இடையில் உசாமாவிற்கும் ஜசீராவிற்கும் தொடர்புண்டு என்று ஒரு செய்தியை எப்பொழுதும் போல் வெள்ளோட்டமாக விட்டுப் பார்த்தார். அது மற்றவர்களிடமிருந்து எதிபார்த்த ஆதரவைப் பெற்றுத் தரவில்லை).
யோசித்த புஷ் இனி மற்றவர்களின் ஆதரவுடன் அதனை ஒழிப்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து, தனது செல்லப் பிள்ளையின் துணையுடன் ஜசீராவின் எல்லா அலுவலகங்கள் மீதும், கத்தரில் இருக்கும் அதன் தலைமையகம் மீதும் ஒரே நேரத்தில் குண்டு போட்டு ஒழிக்க திட்டமிட்டிருக்கிறார். இது நடந்தது ஒரு வருடத்திற்கு முன். என்ன காரணத்தினாலோ அதனை உடனே நிறை வேற்றவில்லை. அல்லது அதனை நிறைவேற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்ட இங்கிலாந்தின் டெய்லி மிர்ரர் பத்திரிக்கை எல்லா விதமான ஆதாரங்களையும் சேகரித்து இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தது.
பிளைர் 16 ஏப்ரல் 2004 அன்று வாஷிங்டன் சென்றிருந்த போது புஷ் பிளைரிடம் “கத்தரில் இருக்கும் ஜசீராவின் தலைமையகத்தின் மீது குண்டு வீச வேண்டும்” என்று கூறியதாக டெய்லி மிர்ரர் கூறுகிறது.
சுதாரித்துக் கொண்ட புஷ் உடனே பிளேரை பிடித்து உலுக்க தற்போது இங்கிலாந்து அரசாங்கத்தால் இங்கிலாந்து கேபினட் அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் கியோகின் மற்றும் லெயோவின் மீது அரசாங்க ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளனர். மட்டுமல்ல தொடர்ந்து இது சம்பந்தமான தகவல் வெளியிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று மிரட்டி அச்செய்தியை தொடர்ந்து வெளியிட முடியாமல் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக