வெள்ளி, ஜனவரி 29, 2010

இயக்குனர் சீமான் தமிழினத்திற்கு ஒற்றுமைக்குரல்

மீனகம் : முத்துக்குமார் அண்ணையின் ஒராண்டு நிகழ்விற்கு நீங்கள் எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்?

ஆம், முத்துக்குமாரின் நினைவுக்கு மாபெரும் பேரணியும் எழுச்சி கூட்டமும் நடத்துவது என்று முடிவு செய்து வீரத்தமிழன் முத்துக்குமாரின் நினைவைப் போற்றும் எழுச்சி நாள் என்று சேலத்தில் கொண்டாட இருந்தோம். அங்கு வீரபாண்டி ஆறுமுகம் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால அங்குள்ள சுவர்கள் எல்லாம் அவர்கள் ஆக்கிரமித்ததால் மக்கள் மத்தியில் அதை கொண்டு செல்ல முடியாத பின்னடைவு ஏற்பட்டிருப்பதால் அதே நினைவை மாசி 15 ஆம் திகதி நடத்தலாம் என்று தள்ளி வைத்திருக்கிறோம்.


மீனகம் : முத்துக்குமார் அண்ணா அவர்களின் இறப்பு நடந்து ஒருவருட காலம் நெருங்கும் இதுவரை காலமும் தமிழ்நாட்டில் அந்த இறப்பின் விளைவாக ஏதும் எழுச்சிகள் ஏற்பட்டிருக்கின்றனவா?


எம்மினம் எமக்கு பக்கத்திலேயே செத்துக்கொண்டிருக்கும் போது உலகில் போர்க்குற்றம் சம்மந்தமான எந்த ஒரு அமைப்பும் உதவ முன்வராத நிலையில் இந்தியரசாங்கம் ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து உதவியதை செய்திகள் மூலம் அறிந்து மனதிற்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருந்த இளைஞர்களில் ஒரு தீக்குச்சி தான் முத்துக்குமார். எமது உறவுகள் செத்துக்கொண்டிருக்கும் போது 7 கோடி தமிழினம் கேட்க நாதியில்லாது அடிமைப் பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த மக்களை எழுச்சி கொள்ள வைப்பதற்காக தன் மனதிற்குள் இருந்த தீயை உடலில் கொழுத்தி தீயானார். வாழவேண்டிய வயதில் பல்வேறு கனவுகளை சுமந்து அதுவும் திரைத்துறையில் பெரிய இயக்குனராக வரவேண்டும், இலக்கியத்துறையில் பத்திரிகைத்துறையில் பெரிய எழுத்தாளனாக வரவேண்டும் என்ற கனவைச் சுமந்தவன் ஒரு இளம் புரட்சியாளனாக தன் இனத்தின் விடியலைக்காக்க உடலில் தீ வைத்தான்.

தன் இனத்தின் அழிவு நிறுத்தப்படவேண்டும் என்பதே அவனது நோக்கம். ஆனால், அது நிறைவேறவில்லை. அவனும் செத்தான் என் இனமும் செத்தது. முத்துக்குமாரின் இறுதி நிகழ்விற்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தையும் மாணவர்களின் தொகையையும் பார்த்த மத்தியரசு எழுச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்லூரிகள் மாணவர்கள் தங்கும் விடுதிகள் என்பவற்றை மூடி அந்த எழுச்சியை ஏற்பட விடாமல் தடுத்தது. இது இங்கிருக்கின்ற பிழைப்புவாத பிழைப்பு நடத்துகின்ற அரசியல் கட்சிகளின் மூலம் நடத்தப்பட்டது. இதனால் அவன் எதுக்கு செத்தானோ அது நிறைவேறவில்லை.

மீனகம் : முத்துக்குமார் அண்ணையின் இறுதிக்கோரிக்கை என் உடலை வைத்து இறுதி வரை போராடுங்கள் என்று மாணவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். அந்த உடலை மாணவர் அமைப்பிடம் கொடுக்காமல் சில அரசியல் கட்சிகளின் தலையீடுகள் நடந்ததாக மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது அது சம்மந்தமாக உங்கள் கருத்து என்ன?

இங்கு ஆளுகின்ற கட்சுகள் கட்சிகளோடு கூட்டு வைத்திருக்கின்ற கட்சிகள் அரசுக்கு நெருக்கடிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு நடந்து கொண்டார்கள். அவரின் உடலை சீக்கிரமாக எரித்துவிட்டால் எழுச்சியும் நின்றுவிடும் என கருதி திட்டமிட்டு செய்த நடவடிக்கை தான் இது. மாணவர்கள் எவ்வாறு போராடினாலும் ஆட்சியாளர்கள் அடக்கு முறைகளை வைத்து அடக்கலாம் தானே.

மீனகம் : மாணவர்கள் அமைப்பு கூறியிருந்தார்கள் முத்துக்குமார் அண்ணையின் இறுதி நிகழ்வு தருணத்தில் மாணவர் அமைப்பு என்ற ஒன்றே இல்லை. எங்களை வழிநடத்த ஒரு தலைமை இருக்கவில்லை என்று அந்த தலைமை வெற்றிடத்திற்கான காரணம் என்ன?

அது எனக்கும் தெரியேல்லை. எனக்கும் ஒரு தலைமை இல்லாமல் தான் நாங்கள் ஒரு அரசியல் இயக்கமாக உருவாகி இப்போது நாம் தமிழர் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். அந்த மாணவர்கள் நான் கொஞ்சம் பெரிய மாணவன் அவ்வளவுதான். தேர்தல் நேரம் என்றதால் எந்த கட்சியில் சேர்ந்தால் பலன் கிடைக்கும் என எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் செயற்பட்டதால் ஒரு நேர்மையான ஒழுக்கமான தலைமை அந்த தருணத்தில் கிடைக்கவில்லை.

மீனகம் : இப்படியான அரசியல் கட்சிகளை எமது மக்கள் ஆதரிக்கிறார்களா? ஆதரிக்க தூண்டப்படுகிறார்களா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 50 விழுக்காட்டுக்கும் குறைவான மக்களே வாக்களிக்கின்றனர். மீதி மக்கள் வாக்களிப்பதில்லை. வசதியானவர்கள் படித்தவர்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள். வறுமையான மக்களே பணத்திற்காக வாக்களிக்க செல்கிறார்கள்.

கல்வி கற்ற அறிவாளிகள் அரசியல் ஒரு நாற்றம் என்று கருதி அரசியல் பக்கம் வருவதில்லை. பணத்திற்கே வாக்களிப்பது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டு அரசியல்.

மீனகம் : முத்துக்குமார் அண்ணா மாதிரி நீதியான வழியில் போராடி உயிர் நீத்த சமூகம் உள்ள் தமிழ்நாட்டில் குண்டர்கள் போன்ற ஒரு சமூகமும் உருவாவதற்கான காரணம் என்ன?

சீனப்புரட்சியாளர் மாவோ சொல்றார் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்று. அரசு என்ற வெற்றிடத்தை கற்றவர்கள் நிரப்பவேண்டும். கற்றவர்கள் வராததால் தீயவர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை அதை யார் சுத்தம் செய்வது? அரசில் ஒரு சாக்கடை என்று கற்றவர்கள் எல்லாம் விலகிப்போனால், தமிழகத்தின் சுவர்களில் பார்த்தீங்களெண்டால் சுத்தம் சுகம் தரும் என்று எழுதியிருக்கும். எழுதியிருந்தால் யார் இறங்கி சுத்தம் செய்வது? இறக்கு கூட்டினால் தான் சுத்தமாகும். அப்ப யார் இறங்கி கூட்டுவது? அப்படி கூட்ட யாருமே முன்வரல்லை என்றால் எப்படி! அப்படி முன் வந்தவன் தான் தம்பி முத்துக்குமார். பல தீபங்கள் எரிவதற்கு தீக்குச்சியாக இருந்தவர் தான் முத்துக்குமார். புரட்சி என்பது ஒவ்வொருவரின் காலிற்கும் கீழே காய்ந்த சருகாக ஒரு தீக்குச்சி உரசலுக்காக காத்துக்கிடக்கிறது.

அந்த சருகாக காத்துக்கிடந்த மக்களை எழுச்சி பெறவைப்பதற்காக தன்னையே தீக்குச்சியாக்கியவன் தான் முத்துக்குமார். அந்த தீயை தன்ணீர் ஊற்றி அணைத்தவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள்.

தமிழினம் ஒன்றுபடாதா என்று ஏங்கிச் செத்தான் முத்துக்குமார். ஆனால், அவன் செத்தும் இன்று என்ன நடந்தது! முத்துக்குமார் மாணவர் அமைப்பு, முத்துக்குமார் சங்கம், முத்துக்குமார் பேரவை என்று தமிழினம் முத்துக்குமார் பெயரிலயே சிதறிக்கிடக்கிறது. முத்துக்குமாரின் உயிரை மதிப்பது உண்மையானால் உயிரிலும் மேலான எமது மொழியின் பால் ஒன்று பட்டு தமிழினம் நிமிர்ந்து நிற்கவேண்டும்.

மீனகம் : மாணவர்களிற்கான விடயங்களில் அரசியல் வாதிகள் ஏன் தலையிடுகிறார்கள்?

மாணவர்கள் எதிர்கால சந்ததியினர் வலுவான சக்தி அவர்களை அரவணைத்தால் தமக்கு ஆதரவு நாட்கள் இன்னும் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்பதே காரணம்.

மீனகம் : முத்துக்குமார் அண்ணையின் நினைவு நாளில் தமிழினத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

தமிழன் என்ற உணர்வோடு அறிவாயுதம் தந்து உதவுங்கள். எமக்கான அடையாளம் தமிழன் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து போராடுங்கள் என்று நான் எமது மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மீனகம் : நன்றி. தமிழினத்தின் எதிர்கால சந்ததியினர் இப்போது உள்ள முத்துக்குமார் அமைப்பு, முத்துக்குமார் சங்கம் என்று பிரிவு பட்டு இல்லாமல் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று மீனகம் இணையம் ஊடாக நாமும் எமது எதிர்கால சந்ததியினரைக் கேட்டுக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை: