செவ்வாய், பிப்ரவரி 16, 2010

வாழ்க காதலர் தினம்!

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகக் காதலர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும், அண்மைக் காலமாக இந்நாள் விரிவாகக் கொண்டாடப்படுகிறது.
வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் விரும்பி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு
திருமணம் செய்துகொள்வது அவர்களின் உரிமையைச் சேர்ந்தது.

இதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இதில் இந்துத்துவாவாதிகள்
தேவையில்லாமல் தலையிட்டு மூக்கறுபடுவதுதான் மிச்சம்.

கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அடுத்தவர் உரிமையில் மூக்கை
நுழைத்தால் முகத்தில் கரியைத்தான் பூசிக் கொள்ள நேரிடும் என்பதற்குச்
சாட்சியம் தான் பெங்களூருவில் ராம்சேனா தலைவர் முத்தாலிக் முகத்தில்
இளைஞர்கள் கரிப் பூசியதாகும்.

வீண் வம்புக்கு அந்த இளைஞர்கள் போகவில்லை. வந்த வம்பை அவர்கள்
வீணாக்கவில்லை என்பதுதான் உண்மை.

காதலர் தினத்தன்று காதலர்கள் சந்தித்துக் கொண்டால், அந்த இடத்திலேயே தாலி
கட்டச் செய்து கல்யாணம் செய்து வைப்போம் என்று கூறுவதெல்லாம்
திமிரடியும், காலித்தனமும், வன்முறையும் அல்லாமல் வேறு என்னவாம்?
அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் அதிகாரத்தை இந்துத்துவா
கூட்டத்திற்குக் கொடுத்தவர்கள் யார்?

இவர்களின் இந்து மதத்தில் கடவுள்களின் நிலைப்பாடு என்ன? இவர்களின்
கிருஷ்ணபகவான் 60 ஆயிரம் கோபிகாஸ்திரீகளுடன் கும்மாளம் அடித்ததாகப்
பெருமைப்பட ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, காதலர்
தினத்தன்று அந்தப் படங்களை நடு வீதியில் போட்டு எரிக்கும் போராட்டத்தை
நடத்துவார்களா?

பாரதீய ஜனதாவிலோ, சங் பரிவார் வட்டாரத்திலோ காதலுக்கு இடம் கிடையாதா?
காதல் செய்து திருமணம் செய்துகொண்டவர்கள் அங்கு யாரும் கிடையாதா?

சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையர் திரு. ராஜேந்திரன் மிகத் தெளிவாக,
திட்டமாக ஆணை பிறப்பித்துள்ளார்.

காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) காதல் இணையர்களுக்கு இடையூறு
செய்பவர்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று
அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்ததுபோன்று யாராவது காதலர்களிடம் தகராறு செய்தால்,
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். காதல் ஜோடிகளுக்குத் திருமணம்
செய்து வைப்போம் என்று சொல்லிக்கொண்டு, போராட்டம் நடத்த யாருக்கும்
அனுமதியில்லை. மெரினா கடற்கரைக்கு யாரும் சுதந்திரமாக வரலாம், போகலாம்;
எவ்விதத் தடையும் கிடையாது என்று அறிவித்திருப்பது மிகவும் சரியானது.
வரவேற்கத்தகுந்ததாகும்.

தமிழ்நாட்டில் துணிந்து எந்த சேட்டைக்கும் இந்து முன்னணி வகையறாக்கள்
வரமாட்டார்கள். பெங்களூருவில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது என்கிற
தைரியத்தில் சண்ட மாருதம் செய்யலாம்; அங்கேயே அவர்கள் முகத்தில் கரி பூசி
இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம்.

இந்த ராம ஜெயக்கூட்டம், சங் பரிவார் வகையறாக்கள் காதலர் தினத்தை
எதிர்ப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது.

காதலால் இந்துத்துவாவின் வருணாசிரமம், ஜாதி என்பது ஒழிக்கப்படுகிறது.
காதல் வளர வளர ஜாதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிடுமே ஜாதியை
ஒழித்துவிட்டால், இந்து மதம் ஏது? காதலர் தினத்தை எதிர்ப்பதற்கு இது ஒரு
முக்கியமான காரணமாகும். ஜாதி ஒழிப்புக்குக் காதல் நல்லதோர் சாதனமாகும்.

அந்த வகையில் காதலை வரவேற்கிறோம். அதேநேரத்தில், காதல் என்றால் கட்டிப்
பிடித்து பொது இடத்தில் புரளுவது அல்ல; அது சினிமா காதல்.

இந்துத்துவாவாதிகள் கதறுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே, அதற்கு இடம்
கொடுத்துவிடக் கூடாது! ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒருமித்த மனதோடு
மணம் புரிவதுதான் உண்மையான காதலாகும்.

காதலர் தினம், அந்தச் சிந்தனையின் மலர்ச்சியாகப் பூத்துக் குலுங்கட்டும்!
வாழ்க காதல்! வீழ்க இந்து மத வருணாசிரம ஜாதிப்புற்று!


------------------"விடுதலை” தலையங்கம் 13-2-2010

கருத்துகள் இல்லை: