♦️தகடூர் படையெடுத்த எதிரிகளுடன் போர் செய்து களத்தில் வீழ்ந்த பறை கலியனாரின் வீரம் செறிந்த வரலாறு தகடூர் நடுகலாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. படை கட்டுவதில் பறையர்களுக்கு இருந்த திறனை, பற்றுறுதியை சோழர்கால கல்வெட்டுகளும் திருவிந்தலூர் செப்பேடுகளும் செப்புகின்றன.
♦️வலங்கை படையே நிரந்தர போர் படை யென்றும் அந்த வலங்கை மகா சேனைகளை வழி நடத்தியவர்களே பறையர்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இடங்கை ஜாதிகளின் மீது அடக்குமுறைகளும் ஆதிக்கங்களும் செலுத்திய பறையர்களுக்கு வலங்கை மாற்றான், வலங்கை தலைவன் என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டதை 17ம் நூற்றாண்டு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
♦️மூவேந்தர்களின் முடியாட்சிக்கு பிறகும் கூட பறையர்கள் படை மறவர்களாக இருந்ததை, காவல் தொழில் புரிந்ததை, மக்களை காத்து நின்றதை மராட்டிய ஆவணங்கள், புதுக்கோட்டை, திருமயம் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
♦️திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காவற்பறையனுக்கு கோயிலே உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. அந்த கோயில் இருக்கும் தெருவிற்கு காப்பறையந்தெரு என்று பெயர். அந்த காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை சங்கரநயினார் கோயில் தல வரலாறு சொல்கிறது. (https://www.instagram.com/manikirivar_official/?hl=el)
♦️சங்கரநயினார் கோயிலில் இன்றைக்கும் காவல் பறையன் மனிக்கிரீவனுக்கு சிலை வைத்து வணங்கப்பட்டு வருகிறது. அக்கோயில் இன்றும் காவற்பறையன் அருமை பெருமைகளை பேசுகிறது. சித்திரைவிழா ஆரம்பமாகும் முன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழ்கிறது.
( https://sankarankovil.com/history.html)
♦️ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்று பட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை பொது மக்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். இக்காவல்பணியிலிருக்கும் அவருக்கு இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊர் மக்கள் முடிவுசெய்தனர் என்று பறையர் ஊரைப்பாதுகாக்கும் பணிபுரிந்ததை காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவில் கல்வெட்டு நமக்கு சொல்கிறது (IPS 843)
♦️பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் பணியாற்றியதை "அரையன் அணுக்க கூவன் பறையனேன்" என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்துகிறது. (தென் இந்திய கல்வெட்டு. 14; க.எ. 56) தனக்கு கீழ் இருந்த படை வீரர்களுக்கு கட்டளையிடும் உயர் பொறுப்பில் சாக்கைப் பறையனார் என்பவர் இருந்ததை செங்கம் நடுகல் நடுகலொன்று குறிப்பிடுகிறது.
♦️பறையர்கள் இயல்பிலேயே வீரமும் தொன்றுதொட்டு அறிவாற்றலையும் மிகுதியாக கொண்ட, மரபு வழி போர் முறைகளை கற்றறிந்தவர்கள், மரபு வழி போர் கருவிகளை பயன்படுத்துவதில் மிகவும் வல்லவர்கள் என்பது எந்தவொரு பாடப்புத்தகங்களிலும், எந்தவொரு ஆய்வுநூல்களிலும் எந்தவொரு மேடைப் பேச்சுகளிலும் எளிதில் கிட்டாத ஒரு சித்திரமாகும். ஆனால் அந்த சித்திரத்தை காலம் தமது வரலாற்று பக்கங்களில். தொடர்ச்சியாக பதிவுசெய்துக் கொண்டுதான் வருகிறது.
அப்படி ஒரு வீர வரலாறுதான் பறையர் ரெஜிமென்ட்
♦️பிரெஞ்சுக்காரர்களிடம் மெட்ராஸை இழந்து பிரிட்டிஷார் மிகவும் பரிதாபத்துடன் நின்றபோது, வெறும் இரண்டாயிரம் பேரைக் கொண்டு எட்டாயிரத்திற்கும் மேலான பிரஞ்சுப் படை வீரர்களை தெறிக்கவிட்டு பூர்வீக மண்ணான மதராஸ் மாகாணத்தை மீட்டெடுத்த 'பறையர் ரெஜிமென்ட் வரலாறு தனித்துவமானது.
♦️பறையர் படைப் பிரிவு மட்டும் இல்லாமல் போயிருந்தால், பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் மறைவதில்லை என்கின்ற கெத்தப்பான பேச்சு இருந்திருக்கவே இருந்திருக்காது. உலக வரைப்படமே மாறிப்போய் இருக்கும். உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும் உலக வல்லாதிக்க சக்தி யார் என்பதை தீர்மானித்தும் இந்த பறையர் ரெஜிமென்ட் போர் தான் என்று வரலாற்று ஆய்வாளர் 'Frank McLynn' குறிப்பிடுகிறார்.
♦️வெற்றிகளுடன் ஜார்ஜ் கோட்டையை நோக்கி வந்த பிரெஞ்சுப் படைகள் பறையர் படையின் ஆக்ரோஷ தாக்குதலால் நிலைகுலைந்துப் போனது. ஏறக்குறைய 67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில் பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது. கடந்த 16:02:1759 அன்று வெள்ளிக்கிழமை பறையர்கள் பிரெஞ்சுப் படையை முழு முற்றாக வென்றனர்.
♦️மதராஸ் மீட்பு போரில் மதராஸ் பூர்வக்குடி மக்களின் பங்கு சிறப்பு வாய்ந்தது. ஏன் என்றால் அவர்கள் சொந்த மண்ணை காக்க போரிட்டனர் என்று 'Elder Smith' எனும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
♦️தெற்காசியாவின் முக்கிய வணிக நகரமாகிய மதராஸில் நடந்த இந்த போரில் பறையர்களின் பங்கு அளப்பரியது. பறையர்களின் வீரம் தியாகம் மற்றும் கடமையுணர்வு மிக்க நடத்தைக்காக நிறுவனத்தின் இராணுவ அதிகாரிகள் அடிக்கடி அவர்களைப் பாராட்டியதாக மனாஸ் தத்தா தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகிறார்.
♦️இந்திய மண்ணில் பேரரசை கட்டியெழுப்ப உதவிய மக்களை மறந்துவிடுவது நியாயமில்லை" என்று ஆங்கிலேயர்களின் முகத்தில் அடித்தார் போல பேசி பறையர் ரெஜிமென்ட் வரலாற்றை வட்டமேசை மாநாட்டில் நினைவு கூறுகின்றார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்.
♦️பூர்வீக மண்ணை போராடி வென்ற அந்த ரத்தம் சரித்திரத்தின், வீர வரலாற்றின், பறையர் ரெஜிமென்ட்டின், 266. ஆம் ஆண்டு வெற்றிவிழா வரும் பிப்ரவரி 16 ந்தேதி எதிர்வர உள்ளது. பீமா கோரேகான் போராட்டத்தை நினைவுக் கொள்கின்ற வரலாற்று ஆய்வாளர்களும் தமிழகத்து பறையர்களும் அதற்கும் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற மெட்ராஸ் பறையர் போர் வரலாற்றை நினைவுகூராமலும் ஆவணப் படுத்தாமலும் கடந்து சென்றது ஏனென்று நாளை தலைமுறை கேள்வி எழுப்பும்.
என்ன செய்யப் போகிறீர்கள்..?
சமரன்
09:01:2025
#ParaiyarRegiment | #TheMadrasRegiment | #History
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக