திங்கள், ஏப்ரல் 15, 2024

சமஸ்கிருதம் என்ற பெயரே தமிழ்தான் !

தகவல் :

1.1921இல், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மறைமலையடிகள் தலைமையில்,  ஐநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி எடுத்த முடிவு தான் தைப்புத்தாண்டு!
---------------------------------------------------------------------------------------- 

விளக்கம் :

1921-ஆம் ஆண்டு எந்த மாதத்தில்  எந்த நாளில் இந்தக் கூட்டம் நடைப்பெற்றது?  1921-ஆம் ஆண்டு மறைமலை அடிகள் இலங்கையில் பொங்கல் விழாவை கொண்டாடியதாக அவரது மகன் மறை.திருநாவுக்கரசு பதிவுச் செய்திருக்கிறார்.  

உண்மையில் என்னதான் நடந்தது?

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935-ஆம் ஆண்டு மே திங்கள் 18 மற்றும் 19-ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மறைமலை அடிகள் கலந்துக்கொண்டு உரையாற்றும் பொழுது 

'இயேசு கிருஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்' என்று பதிவு செய்கிறார். அவ்வளவு தான்.

அதனை தவிர்த்து தை மாதம் பற்றியோ, தமிழ் ஆண்டு பெயர்கள் பற்றியோ அவர் எதையுமே குறிப்பிடவில்லை. இந்தக் கூட்டத்தில் திரு.வி.க உள்ளிட்ட தமிழ் அறிஞர் பெருமக்களும் சான்றோர்களும் கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகோபித்து முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுடம். என்பதுதான்.

இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட 9 நோக்கங்களில், தை குறித்தோ? தமிழ் புத்தாண்டு குறித்தோ ஏதும் இடம்பெறவில்லை. 

15.5.1955 அன்று தமிழ்மறைக் கழகம், தமிழ் இனத்தை ஒன்று படுத்தும் ஒரு  திருநாள், திருவள்ளுவர் திருநாள் தான், அது வைகாசி அனுடத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது. 

அப்போது ‘தை’ திங்களில் வள்ளுவர் தினம் உருவாக்கலாம் என்று முன் மொழிந்த  கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களை தமிழ் அறிஞர் கூட்டம் கடுமையாகக் கண்டிக்கிறது.

அதோடு தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் திருவள்ளுவர் தினமாக 1935 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டி, இறுதியாக வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று தமிழ் அறிஞர்களும் சான்றோர்களும் உறுதிசெய்கின்றனர். 

ஆக அன்றைக்கு தேதிக்கு தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? என்கிற பஞ்சாயத்துக்கள் ஏதும் இல்லாமல் தான் அந்த கூட்டம் முடிகிறது. 

அதன் பிறகு 14.4.1963 அன்று திருக்குறள் மாநாடு நடத்தி, ஆண்டுதோறும் வைகாசி இறுதியில் அதாவது ஜூலை மாதத்தில் ஏதேனும் நாளை திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறார் அறிஞர் அண்ணா. 

அதாவது ஆனானப்பட்ட அறிஞர் அண்ணாவே வைகாசியில் தான் வள்ளுவர் தினம் வேண்டும் என்கிறார். 

இந்தக் கோரிக்கையை ஏற்று 1966-ஆம் ஆண்டு முதல், தமிழ் அறிஞர்களின் உறுதியான தீர்க்கமான முடிவின்படி, வள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுடம் (பனை) என்பதனால், சூன் திங்கள் 2-ஆம் நாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. 

ஆக, 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1966 வரை தமிழ் புத்தாண்டு குறித்த எந்த பஞ்சாயத்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் மத்தியில் இல்லை.

தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படும் இதே சித்திரை 1ந்தேதியில் தான் சீக்கியர்களின் புத்தாண்டான வைசாகி கொண்டாடப்படுகிறது. 

மலையாளிகளின் விஷூ, கொண்டாடப்படுகிறது.

பர்மியர்களின் திங்க்யான், கொண்டாடப்படுகிறது.

கம்போடியர்களின் சோல் ச்சனம் த்மே கொண்டாடப்படுகிறது. 

அசாமியர்களின் போக பிகு கொண்டாடப்படுகிறது.  

தாய்லாந்து/லாவோக்களின் சோங்க்ரான் கொண்டாடப்படுகிறது.

சிங்களர்களின் அலுத் அவருத்தா கொண்டாடப்படுகிறது.

அரேபியர்களின் ரமலான் கொண்டாடப்படுகிறது. 

கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உலகின் தொன்மையான இனங்களின் வருடப்பிறப்பு அனைத்தும் சற்றேறக்குறைய இதே நாளில் தான் கொண்டாடப்படுகிறது.

வருடப்பிறப்பு என்பதை விட யுகாதி அதாவது உகாதி என்பது சரியான தமிழ் சொல். ஆனால் அது தெலுங்கில் தொலைந்துபோய் இருக்கிறது.  

உகம் + ஆதி உகாதி. உகம் என்றால் நாள் ஆதி என்றால் தொடக்கம்.

புத்தாண்டுக்கு விண்ணியல் கணக்கு காரணமே அன்றி மொழியோ, மதமோ, அல்லது வேறு எதுவோ அல்ல. 

மொழி வழி மாநிலத்திற்குள் ஐந்தினைகளை தேடிக்கொண்டிருக்கும் கிட்டப்பார்வை தமிழ் தேசியர்கள், எமது தமிழ் சமூக சிந்தனை மரபை ஒவ்வொரு முறையும் நாடோடிகளிடம் தாரைவார்த்து வருகின்றனர். 

நாடோடிகள் எதை கொண்டு வந்தார்கள் அதை அவர்களுடையது என்று நிறுவ? எல்லாவற்றிற்கும் அறுவறுப்பான கதையை கட்டுவது அவர்களது வழக்கம் தானே?

அப்படியொரு இழிவை  தமிழ் சமூக சிந்தனை மரபின் மீது பூசி விடுகிறார்கள். அதன் பிறகு நீயே அதனை தூக்கி எறிந்த விடுவாய்.  அதுதானே அவர்களுக்கு வேண்டும்.

அறுபது ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் அது சமஸ்கிருத  சொத்தாகிவிடுமா?

சொல்லப்போனால் சமஸ்கிருதம் என்ற பெயரே தமிழ்தான் !

ஆக சமஸ்கிருதமே தமிழர்களின் சொத்து தான் என்பதை இவர்கள் எப்போது தான் உணர்வார்கள்?

கருத்துகள் இல்லை: