செவ்வாய், டிசம்பர் 26, 2023

போலி காவியின் புனித வரலாறு



10,200 BCE லிருந்து மனிதன் வண்ணங்களை பயன்படுத்தி வருகிறான். குகை ஓவியங்களில் சிகப்பு, மஞ்சள்,கருப்பு போன்ற நிறங்களை நாம் இன்றும் பார்க்கிறோம். மனிதன் முதலில் பயன்படுத்திய சாயம் இவை மூன்றும்.

ஆடை அணிய தொடங்கிய ஆரம்ப காலங்களில் மனிதன் சாயம் போட்ட வண்ண ஆடைகளை உடுத்தியதில்லை. வெள்ளை அல்லது பழுப்பேறிய நிறங்கள்தான். துணிகளுக்கு நிறமேற்றும் பழக்கம் ஆரம்பித்த பிறகு வசதி படைத்த மக்கள் மட்டுமே வண்ண ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். ராஜாக்கள், நிலப்பிரபுக்கள் போன்றவர்கள்.

ஆரம்ப காலங்களில் துணிகளுக்கு போடும் சாயங்கள் காய்கறிகள், பூச்சிகள், மரப்பட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டன. எளிதில் கிடைக்கும் நிறங்கள் மஞ்சள் (மஞ்சள், குங்குமப்பூ, பூஞ்சைப்பாசி) கருநீலம், சிகப்பு, கருப்பு போன்றவை.

நத்தைகளில் இருந்து Tyrian purple என்னும் நிறம் எடுக்கப்பட்டது இவை விலை அதிகம். தாதுக்களில் இருந்தும் சாயம் எடுக்கப்பட்டது lazurite இல் இருந்து ஊதா, limonite இல் இருந்து மஞ்சள், hematite இல் இருந்து சிகப்பு.

இந்த Tyrian purple மிகவும் விலை மதிப்பான சாயம் என்பதால் இதை அரச குடும்பங்கள் மட்டுமேஅணிந்தனர். அவர்களை தவிர வேறு யாரும் அணிவது தடை செய்யப்பட்டு இருந்தது. இன்றும் இந்த நிறம் “color of royalty” என்றழைக்கப்படுகிறது.

இருக்கும் இடத்திற்கேற்ப கிடைக்கும் நிறங்களுக்கு ஏற்ப அன்றைய காலத்தில் மக்கள் துணிகளை சாயமேற்றி அணிந்து வந்தனர்.மொத்தத்தில் அன்றைய காலத்தில் பொதுவாக இருந்த நிறங்கள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு.

இதில் சிவப்பு இருப்பதில் costly. அது ராஜ குடும்பங்களுக்கு, மஞ்சள் அடுத்தது வணிகர்களுக்கு. சாயம் ஏற்றப்படாத தூய்மையான வெள்ளை அடிக்கடி துவைத்து சுத்தமாக வைக்கப்படவேண்டிய வெள்ளை பிராமணர்களுக்கு, கருப்பு அழுக்குநிறம், சாம்பல் கரியேறிய நிறம் சூத்திரர்களுக்கு.

ஆக அடிப்படையில் சாயம் கிடைக்கும் அளவை பொறுத்து அதன் மதிப்பும், அதை விலைகுடுத்து வாங்க முடிந்தவர்கள் அந்த நிறத்தையும் அணிந்து கொண்டனர். நிறத்திற்கு என்று எந்த தனி மதிப்பும் புனிதமும் இல்லை. 

காவி நிறம் (Saffron) குங்குமப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த குங்குமப்பூ மருந்தாக, உணவில் சுவையூட்டியாக, வாசனை திரவியங்களில், மற்றும் சாயமாக பல விதங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. கானான் மக்கள் Assyrian ராஜாவிற்கு குங்குமப்பூவை பரிசாக கொடுத்ததாக குறிப்புகள் இருக்கின்றன.

Rome மக்கள் திருமண நேர ஆடையாக காவி வண்ண துணியை அணிந்து வந்து இருக்கிறார்கள். 

வாசனையாகவும் இருக்கும், மருத்துவ குணமும் இருக்கு போன்ற காரணங்களால் எகிப்தில் mummify செய்வதற்கு காவி வண்ண துணியை பயன்படுத்தி இருக்கிறார்கள். 

இந்தியாவில் காவி பயன்பாடு இல்லை. புத்த பிட்சுக்கள் மட்டுமே காவி துண்டு அணிந்து வந்தனர். அதுவும் சாயம் போட்டதால் வந்த காவி அல்ல. சிகப்பு மண்ணில் புழங்கியதால் வந்த பழுப்பேறிய நிறம்.

இந்தியாவிற்கு குங்குமப்பூவையும், மஞ்சளையும் அறிமுகப்படுத்தியது அரபியர்கள் மற்றும் போர்த்துகீசியர் 

1500 க்கு பிறகுதான் இந்தியாவில் காவி நிறம் வருகிறது. அதுவரை எந்த இந்து சாமியாரும் காவி ஆடை அணிந்ததில்லை. 

அன்றைய இந்தியாவிற்கு அண்டை நாடான பெர்சியாவில் காவி வண்ணம் அதுவும் முகலாயர்களிடம் பிரபலமாக இருந்தது. காஷ்மீரில் குங்குமப்பூ பயன்பாடு பெர்ஷியாவில் இருந்தும் பின்னர் பிரான்ஸ் சீனா போன்ற நாடுகளில் இருந்தும் வந்தது.

அப்படியே வந்தாலும் உடனே அது சாயமாக பயன்படுத்தப்படவில்லை. வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட வேண்டி இருந்ததாலும், அப்போது அதிகமாக புழக்கத்தில் இல்லாத காரணத்தாலும், சாயத்தை தவிர மருத்துவம், உணவு, வாசனைக்கு அதன் தேவை அதிகமாகஇருந்ததாலும் குங்குமப்பூ சாயமாக பயன்படவில்லை.

குங்குமப்பூ saffron அதன் மலரில் (safflower) இருந்து தருவிக்கப்படுகிறது. குங்குமப்பூ காவிநிறத்தையும் safflower சிவப்பு நிறத்தையும் தரும். குசும் என்று இந்தியில் அழைக்கப்படும் safflower சிவப்பு நிற சாயமாக பயன்பட்டு வந்தது.

இதுல என்ன ஒரு பிரச்சனை என்றால் இந்த குசும் சிவப்பு, நிரந்தரமாக இருக்காது. கொஞ்ச நாளில் மெல்ல சாயமிழந்து மஞ்சளுக்கும் காவிக்கும் இடையில் ஒரு நிறமாக வந்து நிற்கும். ராஜ குடும்பத்தினர் சிவப்பு நிற உடையை அணிந்து வருவார்கள் இல்லையா?

அவர்கள் அணிந்து சாயம் போனதும் இந்த காவி நிற ஆடை தானமாக வழங்கப்படும். இந்த குசும், அதாவது safflower க்கு அன்றைய காலத்து ஐரோப்பியர்கள் வழங்கிய பெயர் "bastard saffron". குங்குமப்பூவின் காவி நிறம் சாயம் போன துணியில் கிடைப்பதால் bastard saffron என்ற பெயர். அதாவது போலி காவி.

இந்த போலி காவியை அரச குடும்பங்களில் தானமாக பெற்றவர்கள் அணிந்து வந்தார்கள்.

பம்பாய் பிரசிடென்சி இருந்த வசதி படைத்த மார்வாரிகள், முகலாயர்கள், மராத்தியர்கள், குங்குமப்பூ சாயம் ஏற்றிய ஒரிஜினல் காவி வண்ண ஆடை அணிந்து வந்தனர் இவை விலை அதிகம். வெளியில் இருந்து தருவிக்கப்பட்டது.

(Kane, History of Dharmasastra, Vol. I (I), p. 121)

அப்புறம் கால போக்கில் காவி நிறம் விலை குறைந்து, குங்குமப்பூ பயன்பாடு பூஜைகளில் அதிகரித்து வந்ததும், காவியை விஷ்ணுவிற்கு உகந்த நிறம் என்று கதை கட்டப்பட்டது.

விலை அதிகமாக இருந்த போது விஷ்ணுவிற்கு ஆகாத நிறம், விலை குறைந்ததும் விஷ்ணுவிற்கு பிடித்த நிறமாகி போனது.

காவி இந்த பக்கம் வந்ததும், 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய பிரிவுகளில் ஆண்கள் காவி நிறம் அணிவதற்கு தடை கொண்டு வரப்பட்டது.

1920 களில் காவி நிறம் இந்தியாவில் மிக பிரபலமானது. இந்துக்களுக்கு உகந்த நிறமாகவும், புனிதமான நிறமாகவும் மாறியது. 1915 இல் கும்பமேளாவில் பங்குபெற்றதை பற்றி காந்தி கூறுகையில் காவி நிறம் சந்நியாசிகளுக்கு மட்டுமல்ல அது உலக நன்மைக்காக பாடு படும் அனைவரும் தரிக்க வேண்டிய நிறம் என்றார்.

சுதந்திர இந்தியாவிற்கென்று ஒரு கொடி உருவாக்க முயன்றபோது, காந்தி, ஹிந்து முஸ்லீம் இரு மதங்களையும் குறிக்கும் வகையில் வண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார்.

சீக்கியர்கள், அவர்களையும் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறம் வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒரு non communal கொடியை தேர்வு செய்யுமாறு வலிமையான எதிர்ப்பு குரல் வைத்தார்கள்.

எந்த வண்ணமும் எந்த சமுதாயத்தையும் குறிப்பிட தேவையில்லை வகுப்புவாதமற்ற கொடி இருக்கட்டும் அதில் சிவப்பும் பச்சையும் இருக்கட்டும் அது பார்க்க அழகா இருக்கும் என்றார் நேரு. 

சிவப்பும் பச்சையும் பல நாடுகளின் கொடிகளில் இருக்கிறது சிவப்பிற்கு பதிலாக காவியை பயன்படுத்துவோம் அது வேறு நாட்டு கொடிகளில் இல்லை என்ற பரிந்துரையை சுனிதி குமார் சட்டர்ஜி முன்வைத்தார்.

காவி, 'இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினருக்கும்' பொதுவான வண்ணமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இப்படி பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் காவி ஏற்கப்பட்டது.

இந்து-பாட்-பாட்ஷாஹி புத்தகத்தில் சிவாஜியை பற்றி மிக புகழ்ந்து எழுதி இருப்பார் சவார்க்கர். அதில் மராட்டியர்களின் பெருமைக்குரிய காவி நிறம் என்கிறார். 

இந்தியாவிற்காக போராடிய சிவாஜியை, ஒரு இந்து மதத்தின் போராளியாக சாவர்க்கர் எடுத்துரைக்கிறார். அந்த சிவாஜி அணிந்திருந்த காவி நிறம், இந்துக்களின் நிறமாக சாவர்க்கருக்கு இருக்கிறது.

RSS க்கு காவி நிறம் முக்கியமானதாகிறது. காவி நிறம் RSS கொடியாகிறது.

இந்திய கொடியிலும் RSS கொடியிலும் இடம் பெற்ற காவி நிறம், ஹிந்துக்களின் புனிதமான நிறம் என்று 1930 களுக்கு பிறகு பெயர் எடுக்கிறது.

ஆக, துணி சாயம் போன போலி காவியின் புனித வரலாறு இதுதான்

கருத்துகள் இல்லை: