செவ்வாய், நவம்பர் 07, 2023

தமிழ் ஈ



ஈக்களை பற்றி நீங்கள் என்ன நினைத்துகொண்டிருக்கிறீர்கள்?  
 
அழுக்குகளிலும், அசுத்தங்களிலும் மலங்களிலும், மொய்த்து வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, டைஃபாய்டு, நிமோனியா, காலரா, மஞ்சள் காமாலை, தொற்றுக் கிருமி காய்ச்சல் போன்ற நோய்களை  பரப்புபவை; உருவாக்குபவை என்று அறியப்பட்டாலும்  உலகத்திலேயே மிக சுத்தமான பூச்சியே ஈ தான் என்கிறார்கள்.  
  
ஈயின் முக்கிய வேலையே எது தெரியுமா? தனது உடலின் ஒவ்வொரு பாகத்தின் மீதும் தனது கால்களை தேய்த்து நொடிக்கொருமுறை சுத்தப்படுத்திக் கொள்வதுதான். சுத்தம்னா சுத்தம் அப்படியொரு சுத்தம். தங்களது உடலை தூய்மையாக வைத்துக் கொள்வதில் ஈ ஒரு ஸ்ரிட் ஆபீசர்.  
 
சராசரியாக 28 நாட்கள் ஆயுட்காலம் கொண்ட ஈக்களின் தொன்மம் என்ன தெரியுமா? பூமியில் குறைந்தது 150 மில்லியன் ஆண்டுகளாக ஈக்கள் உள்ளன என்று புதைபடிவ சான்றுகள் தெரிவிக்கின்றன, ஆதிகாலம் தொட்டு இருந்துவருகின்ற இந்த ஈக்களில் இதுவரை 1,20,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  

 
ஆஸ்திரேலியாவில் காணப்படும் கௌரோமிடாஸ் ஹீரோக்கள் தான் ஈக்கள் உலகின் பேரரசன். அதாவது அதுதான் உலகின் மிகப்பெரிய ஈ இனமாகும். இது 2.4 அங்குலங்கள் அதாவது 6 செமீ வரை வளர்கின்றன. 
 
 
ஈக்கள் தான் தாவரங்களின் இனப்பெருக்க வெற்றி மற்றும் மரபணு வேறுபாட்டை உறுதிப்படுத்த உதவுகிறது, எளிதாக்குகிறது. அது மட்டுமா? தடயவியல் ஆய்வுகளில் ஈ யின் பங்கு முக்கியமானது.    
 
 
ஈக்களின் இறக்கைகள் வினாடிக்கு 200 முறை வரை துடிக்கின்றன, இதனால் அவை விரைவாக திசையை மாற்றவும், இடத்தில் வட்டமிடவும், பின்னோக்கி பறக்கவும் உதவுகிறது. ஈக்களின் இறக்களைகளை காட்டிலும் அவற்றின் கண்கள் மிகச்சிறப்பானவை. அதாவது மனிதர்களை விட ஈக்கள் சிறந்த காட்சித் திறனைக் கொண்டுள்ளன. மனிதர்களுக்கு கண்ணுக்கு தெரியாத புற ஊதா ஒளி உட்பட பரந்த அளவிலான வண்ணங்களை அவைகளால் உணர முடியும். ஒம்மாடிடியா எனப்படும் 4000 லென்ஸ்கள் கொண்ட கூட்டுக் கண்களைக் கொண்டுள்ளன. பாவம் ஈக்களுக்கு பற்கள் கிடையாதாம்.  
 
வீட்டில் வாழ்ந்தால் வீட்டு ஈ!, தேன் சேகரிக்கும் ஈ - (தேன்+ஈ) தேனீ  இறகுகளில் தூள் போன்ற பூச்சு இருந்தால் அது (பூச்சு+ஈ) பூச்சு,  அந்த பூச்சு வண்ணங்களில் இருந்தால் அது (வண்ணத்து+பூச்சு+ஈ) வண்ணத்துப் பூச்சி,  அந்தியில் நடமாடும் பூச்சு (அந்தி+பூச்சு+ஈ) அந்திபூச்சு, பட்டு உற்பத்தி செய்யும் பூச்சு+ஈ பட்டுப்பூச்சி, சுவா் + கோழ் +ஈ = சுவா்கோழி... இப்படி ஈக்கள் மொய்ப்பது போல சொல்லிக்கொண்டே போகலாம்.  
 
ஈயை ஏன் ஈ என்கின்றோம்..? 

அதற்கு முன்பு...

தமிழ் ஈக்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி விடுகின்றேன்.  
 
ஈ என்பது உயிரொலி.  தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் நான்காவது எழுத்து ஈ பதினெட்டு மெய் எழுத்துகளுடன் சேர்ந்து பதினெட்டு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகிறது. ஈ யின் ஒலியைத் தழுவி வரும் இந்த உயிர்மெய் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைக் கொண்டு ஒலிக்கும் நெடிலாக மாறுகின்றன.  

19 ஆம் நூற்றாண்டு வரை இ என்பதன் மேல் ஒரு சுழியாக எழுதப்பட்டு வந்து, அதன் பின் வீரமா முனிவர் தான் நிலைக்கால் வடிவத்தையும் புள்ளிகளையும் ஈ யை தந்தார்.  
 
ஈ க்கு தமிழில் நிறைய பொருள் உண்டு. ஈ என்றால் அம்பு, அழிவு, அம்பு, அரைநாள், பாம்பு, இரத்தல், என்றெல்லாம் பொருள் உண்டு. ஈ, தா, கொடு என்னும் சொற்கள் ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறக் கேட்பதாக அமைந்த சொற்கள் என்று நாம் நினைத்துகொண்டிருக்கின்றோம்.  
 
*தாழ்ந்த நிலையில் உள்ளவர், தன்னிலும் உயர்ந்த நிலையில் உள்ளவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல். – ஈ.!*

*தனக்கு ஒத்தவரிடம் ஒருவர் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல். தா !*

*உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர், தன்னிலும் தாழ்ந்த ஒருவரிடம் ஒரு பொருளைப் பெறப் பயன்படுத்தும் சொல். – கொடு !*

ஈ என்று நீங்கள் உச்சரிக்க வேண்டுமானால் நீங்கள் பல்லை காட்டிதான் ஆகவேண்டும். அதனால் தானோ என்னவோ ஈ என இரத்தலை பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறான் பார்  இழிக்கப்படுகிறார்கள். 

இரப்பது இழிவு தான் என்றாலும் கூட தன்னிடம் உள்ளதை ஈயமாட்டேன் என்பது அதைவிட இழிவு என்கிறார்கள் முன்னோர்கள். 

அந்த ஈயை விட இந்த  ஈயேன் ரொம்ப இழிவானவன் போல. ஈ என்றும் இல்லாமல் ஈயேன் என்று இல்லாமல் இருப்பதே உத்தமம் போல. 

நன்றி வணக்கம்.!  
 
என்ன..? 

ஓ அந்த ஈ - க்கு ஈ..னு பெயர் வந்த மேட்டரா?  
  
இரண்டு இறக்கைகளை விரித்தபடி, ஈ.. என்ற ரீங்காரத்துடன் பறந்து திரிவதால் ஈ என்று பெயர் வந்ததாம். 

ஈக்கள் மொய்ப்பது போல ஒரே இடத்தில் மனிதர்கள் கூடி மொய்பதால் தான் மொய் என்று பெயர் வந்ததா?  என்பதை நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும்.

*சமரன்*

கருத்துகள் இல்லை: