வியாழன், நவம்பர் 02, 2023

தெய்வம் தொழாள்

தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள் - திருக்குறள் பெண்ணடிமை பேசும் நூலா?

வள்ளுவர் சனாதனி அல்ல..!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

என்று சமத்துவம் பேசிய வள்ளுவன் எப்படி பிறப்பினடிப்படையிலான ஆண் பெண் பாலின வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? - என்ற கேள்வி சொல்லி வைத்தார் போல் யாருக்குமே எழுவதில்லை.

தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார்?

ஊழ், வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார், ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதர் ஆகியோரை தானே தெய்வம் என்ற பொருளில் வள்ளுவர் கையாளுகின்றார்.

தொழு என்றால் வழிபடுதல் என்று தற்காலத்துப் பொருளிலேயே அதனை முடிச்சு போட்டுக் கொள்கின்றோம். தொழு என்றால் வழிபடுதலை மட்டுமல்ல வாழ்விடத்தையும் குறிக்கும்.

இன்னொரு ரெபெரென்ஸ்...

திருக்குறள் இடம்பெற்று இருக்கின்ற பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலில் வரும் ஒரு பாடல்

கொண்டான்

குறிப்பு அறிவாள் பெண்டாட்டி;

கொண்டன

செய் வகை செய்வான் தவசி;

கொடிது ஒரீஇ

நல்லவை செய்வான் அரசன்;

இவர் மூவர் பெய் எனப் பெய்யும் மழை

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி, தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிக்கும் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள்

என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது. இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் இந்த பொருளில் குறிப்பிடப்படவில்லை.

எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.

வள்ளுவரும் முற்போக்காளர் தான், இடதுசாரி தான், பெரியாரிஸ்ட் தான், அம்பேத்கரிஸ்ட் தான் என்று தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்.

-

சமரன்

கருத்துகள் இல்லை: