புதன், ஆகஸ்ட் 08, 2012

நாடோடி மனிதர்கள்




சில வருடங்களுக்கு முன் சென்னையில் சக எழுத்தாள நண்பர் ஒருவர் தன் சந்தேகத்தை என்னிடம் கேட்டார். ' நரிக்குறவர்கள் எனும் நாடோடி மனிதர்கள் நாம் காணும் இடங்களெல்லாம் தென்படுகிறார்கள். கிடைத்த இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். கிடைத்த சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஒரு புடவை மறைப்பில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் யாராவது ஒருவர் இறந்தால் அவரை எங்கு புதைக்கிறார்கள்? அல்லது எரிக்கிறார்கள்? வயதான குறவர்களைப் பார்க்கிறோம். இறந்த குறவர் பிணம் சுற்றி யாரும் அழுது நான் பார்த்ததில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தேசமே வீடாயிருக்கும் அவர்களின் இடுகாடு உங்களுக்குத் தெரியுமா?' என்றார்.

மரணம் பற்றி விசாரிக்கச் சென்ற எனக்கு ஒரு குறவப்பெண்ணின் பிரசவத்தினை நேரில் உணரும் கொடூரம் நேர்ந்தது. ஆமாம், அது கொடூரம்தான். புரியாத மொழியில் ஏதோ வினோதமான சப்தம் அந்த இருட்டுக்குள்ளிருந்து கேட்டதும்தான் பேருந்து நிலையத்து மக்களுக்கு தங்கள் அன்றாட வழக்கமான பரபரப்புகளைத்  தவிர வேறொன்றும் இந்நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று புரிந்தது. பேருந்து நிலையம் நேர் எதிரில் அரசு மருத்துவமனை. அங்கு பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்டிருந்த குறவப்பெண்ணொருத்தி எப்படியோ அங்கிருந்து கிளம்பி பேருந்து நிலைய கழிப்பறை கட்டிட இருளில் தஞ்சமடைந்து விட்டாள். அவள் குறவப்பெண் என்பதற்கு அடையாளமாக அவள் கட்டியிருந்த தாவணியும்

( புடவையின் பாதி ) கணுக்கால் ஏற்றிக் கட்டியிருந்த பாவாடை மட்டுமே சொன்னது தவிர வேறெதுவும் குறிப்பிட்ட அடையாளம் இல்லை. காதிலோ, மூக்கிலோ, கழுத்திலோ எவ்வித அணிகலனும் இல்லை. புரிந்து கொண்டார்கள்.

' யே...ஆஸ்பத்திரியிலேர்ந்து வந்துருக்குப்பா...ஏம்மா ஒனக்கு என்னம்மா வேணும்...ஏதாவது மறைவா துணி இருந்தா எடுத்துக்கிட்டு வாங்கப்பா...' ஆச்சரியமாய் அங்கிருந்த ஆண்களுக்கு இருந்த அக்கறை பேருந்துக்கென காத்திருந்த ஒரு பெண்ணுக்கும் இல்லாமல் போயிற்று. பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள். பேய் மட்டும்தான் இரங்கும் போலிருக்கிறது. லேசான வெளிச்சத்தில் தெரிந்த குறத்தியின் நிறைமேடான வயிறும் முகத்திலுறைந்த வலியும் மனதை என்னமோ செய்தது.  வலி தாங்க முடியாமல் முனகி கத்தியவள் அடுத்து செய்த காரியம் பகீரென்றது. சட்டென்று தரையில் படுத்து உருண்டாள். நிறைமாத வயிற்றுக் கர்ப்பிணிப் பெண் குப்புறப்படுப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று. வியர்வையும்  கண்ணீருமாய் நிமிர்ந்தவள் '' ஒரு பிளேடு வேணும் சாமி'' என்றாள். பல் கடித்து  கால்களால் தரை உதைத்தபடி மெல்ல நகர்ந்து அவ்விருளின் உள்ளே சென்றுவிட்டாள்.

உறை நீக்கி பிளேடு தரும்போது மட்டும் கை நீட்டி வாங்கிக் கொண்டாள். அவளின் முக்கல் முனகல் மட்டும் சில வினாடிகள் கேட்டுக் கொண்டிருக்க திடீரென்று அப்ப்பிரதேசமே குமட்டும்படி ஒரு துர்நாற்றம் எழுந்தது. தொடர்ந்து குழந்தை அழும் சப்தம். எதிர்திசை பார்த்து திரும்பி நின்றிருந்த அனைவர் உடலும் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. சிறிது நேரத்துக்குப் பின் அவள் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்தபடி ஒரு சிசுவை தன் முந்தானைத் துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு கால்கள் நடுங்க மெல்ல நகர்ந்து போனாள் ஆஸ்பத்திரியின் இருள் நோக்கி. அவளைப் பின் தொடரும் சக்தி எங்கள் எவருக்கும் இல்லை. அதன்பின் அவள் எங்கு போனாள்  என்று யாருமே கவனிக்கவில்லை. பின்பு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் மரணம் எப்படி நிகழ்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கான ஜனனம் இவ்வாறுதான் நிகழ்கிறது என்று எழுதினேன்.

ஒரு மரம் போதும் அவர்களுக்கு. மழையில் நனைந்து,வெயிலில் காய்ந்து, சமைத்து சாப்பிட்டு, தூங்கி, திருமணம் செய்து, உறவுகொண்டு, குழந்தைபெற்று வாழ்ந்துவிடுகிறார்கள். பாசிமணி, ஊசிமணி, நரிப்பல் விற்கும் அவர்களின் கையில் ஒரு கயிறு இருக்கும். கயிற்றின் மறுமுனையில்  மிகப்பெரிய காந்தம் ஒன்று கட்டப்பட்டு தெருவெங்கும் அந்தக் காந்தக்கல் அவர்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். ஊரின் அத்தனை இரும்புத் துகள்களும் அக்காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும். என்றாவது ஒருநாள் அந்தக் காந்தத்தில் தங்களது மூதாதையர்கள் வந்து ஒட்டிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் உலகம் எங்கும் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அங்கும் ஆதி மனிதன் உருவாக அழகான கதை வைத்திருக்கும் ஆதிக்க மனிதர்கள், குறவர்கள் தோன்றியதற்கும் காரணம் வைத்திருப்பார்கள். தன்னளவில் சமாதனம் செய்துகொள்ளப் புனையும் கதைகளில் ஒன்றாகக் கூட அது இருக்கலாம். நிரந்தரமென்று எதுவுமின்றி நாடோடிகளாய்த்  திரியும் குறவர்கள்தான் உண்மை வாழ்வினை உலகிற்கு சொல்கிறார்களா...?

ஒரு சிறிய ஊரின் சிறிய பஸ் நிறுத்தத்தில் நடந்த சம்பவம். என் ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்தபோது  அருகில் நிறைய குறவர்கள் தங்கள் குழந்தைகள், பெண்களுடன் நின்றிருந்தனர். வந்து நிற்கும் பேருந்துகளில் ஏறுவதும் நடத்துனர் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ( 'பின்னால வர பஸ்சுல கூட்டம் இல்ல...அதுல வாங்க...' ' இந்த பஸ் அங்க நிக்காது...') அவர்களை பஸ்ஸில் ஏற்றிச்செல்ல மறுப்பதுமாய் இருந்தது. இவர்களும் சளைக்காமல் வந்து நிற்கும் பஸ்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர். சிறிது நேரம் கழித்துசெல்லும் திசை நோக்கி கை காட்டியபடி ஏதோ பேசிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்கள் அனைவரும். இப்படித்தான் உலகம் முழுவதும் நடந்தபடியே இருக்கிறார்கள்  அவர்கள். திசைகளையும் தொலைவுகளையும் தீர்மானிப்பவர்கள் தங்களைத்  தவிர்க்கும் மனிதர்களைத் தவிர்த்தபடி அவர்கள் பாதையில் விரைகிறார்கள். நில உடல் முழுவதும் பதிந்திருக்கின்றன நரிக்குறவர்களின் பாதங்கள். இயற்கை தங்களைத் தவிர்க்காது என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்களில் ஆண்கள் பெண்கள் அனைவருமே தங்களுக்குப் பிடித்த பெயர்களை கையில் தோளில் பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். அரசியல் கட்சி சின்னத்தையும் அரசியல் தலைவர் பெயர்களையும் தவிர்க்கும் இவர்கள் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்!  பேதம் காணாது இவர்கள் அனைவர் மனத்திலும் பச்சைக் குத்தப்பட்டிருக்கும் ஒரு பெயர். ஒரு திரைப்படத்தில் ( ஒளி விளக்கு) நரிக்குறவ வேடம் போட்டு இவர்களின் நிலையை பாட்டாய் பாடி ஆடிய ( நரிக்கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்) ஒரே காரணத்துக்காக எம்.ஜி.ஆரை சாமி போல் பூஜிப்பவர்கள் உண்டு. ஒரு சினிமாக் கலைஞன் தங்களைப் பற்றி பேசியதற்காக அவனையே தெய்வமென தொழும் நிலையில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது எப்படிப்பட்ட விளிம்புநிலை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் பேசும் மொழிக்கு பெயர் கிடையாது. எழுத்துரு கிடையாது. அவர்களின் பாஷை  
தவிர தமிழ்தெலுங்கு பேசுகிறார்கள். முதன்முறையாக அவர்கள் மொழியாலே ஒரு பாடல் இயற்றப்பட்டு ( பல்லவி சரணம் என்ற சம்பிரதாயங்கள் விலக்கி) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் இயக்கும் ' நந்தலாலா' திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் பதிவான இப்பாடலை ஒரு குறவ இனப்பெண்ணே பாடியுள்ளார். இப்பாடலின் பொதுவான அர்த்தமாய் அவர்கள் தெய்வத்திடம் வேண்டும் வேண்டுதல் பட்டியலாய் விரியும். குறவர் இன மொழியின் முதல் பதிவான அப்பாடலே  ' எலினே...எலி எலி' ஆகும்.

கடைசியாக...

தேவராயநேரி. திருச்சி துவாகுடிக்கு அருகில் உள்ள நரிக்குறவர்களின் நகரம். நாடோடிகளாய்த் திரியும் குறவர்கள் பற்றிய பிம்பங்களைச் சுமந்து இந்நகருக்குள் நுழைந்தால் அடைவது உச்சபட்ச அதிர்ச்சியாகத்தானிருக்கும். அவர்கள் நம்மிடையே உருவாக்கிக் கொண்ட  தகரடப்பா, பாசிமணி, நரிக்கொம்பு பிம்பங்களைக் களைந்து நாகரீக உடையுடன் இருப்பார்கள். சுடிதார் அணிந்த பெண், பேன்ட் அணிந்த ஆண்கள் கையில் செல்போன் சகிதம் திரிவதைக் காணலாம். தங்களின் இறுதிக்காலத்தில் இங்கு வந்து சேர்ந்துவிடும் வயதானக் குறவர்கள் தங்கள் தெய்வங்களான முனி, மற்றும் அம்மன் போன்ற சிறு தெய்வங்களை வணங்கியபடி உலா வருவார்கள். படித்து பட்டம் பெற்று வெளிநாடு சென்று வரும் இளைங்கர்களும் உண்டு இவ்வூரில். இவர்களுக்கென தனியாய் இடுகாடு உள்ளது. வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்த கால்கள் நிரந்தர ஓய்வு பூணுவது இங்குதான். இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தோ என்னவோ இன்னும் இவர்களில் சிலர் நாடோடிகளாய்த் திரிந்த வண்ணமே உள்ளனர். செல்லும் வழியில் நிகழும் துர் மரணங்களைத் தொடர்ந்த நிலை கொஞ்சம் மர்மமாகவே உள்ளது. அவை ரகசியமாகவே இருக்கட்டும். அல்லது அவர்களுடனே அலையும் சிறு தெய்வங்கள் அம்மரணங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றட்டும்.

 நன்றி !
கணேசகுமாரன்
நாகப்பட்டினம்.              


2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு. நாம் பார்த்தும் தவறவிடும் நாடோடிகளின் வாழ்க்கை. தொடர்ச்சி இருந்தால் பதிவிடுங்கள்.

Samaran Nagan சொன்னது…

மிக்க நன்றி !