சனி, டிசம்பர் 24, 2011

யுத்தங்கள் தத்துவங்களோடு



அன்புத்தோழி!

உன் கடிதம் கிடைத்தது. எனக்கான உனது ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைகளுக்கு நன்றி! அரிதாக பூக்கின்ற நமதுசந்திப்புகளின் பொழுதெல்லாம் ஆவியான தேவரின் அநேகஅற்புதங்கள் குறித்து நிகழும் உனது பேச்சுக்கள் என்னை சிவப்பேந்திய விளிம்புகளை கண்ட பரிசுத்த வேதாகம பக்கங்களுக்கு அழைத்து சென்றது.

ஆயினும் தோழி ! அவை, விட்டலாச்சார்யாவின்  திரைப்படங்களை போன்று வியப்பாகவும், பகுத்தறிவு அங்கே  பஞ்சத்திலும் காணகிடக்கின்றன.

தோழி !
கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால்...மரத்தின் கனியை ஆதாமும் ஏவாளும் உண்ணுவார்கள் என்று அவருக்கு முன்பே ஏன் தெரியாமல் போனது? இது தெரியாதவர் எப்படி எல்லாம் தெரிந்தவர் ஆவார். தெரிந்துக்கொண்டுதான் இருந்தார் என்றால் அந்த தவறுக்கு அவரும் உடந்தை அல்லவா?

சர்வ வல்லவரோடு வழக்காடி அவருக்கு புத்தி படிக்கிறவன் யார் ? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் யார்? என்று விவிலியம் கேட்குமே, 

இதோ !
சர்பத்தை பார்த்து அதிரூபன் சாபமிடுகிறார். “நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்“ (ஆதி -3:14). 

சொல் தோழி !
பாம்புகள் மண்ணை தின்றா உயிர்வாழ்கின்றன.
“நீ வேதனையோடு மக்களை ஈன்றெடுப்பாய்“ என ஏவாளுக்கு மட்டும்தானே சாபமிட்டார்?  பிறகேன், ஆடுகளுக்கும்,மாடுகளுக்கும் , கழுதைகளுக்கும்,குதிரைகளுக்கும் அதேவேதனை? அவைகள் செய்த குற்றமென்ன? இதுதான் தெய்வநீதியா ?

ஒருவன் தன பெட்டியை தொட்டான் என்பதற்காக அவனை அடித்துகொன்றவர் (Iசாமுவேல் 6:6:7) கேவலம் ஒரு பெட்டியை எட்டி பார்த்தான் என்பதற்காக 1070 பேரை அடித்து கொன்றவர் (Iசாமுவேல் 6:19) எப்படி ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என உபதேசித்தவராக இருந்திருக்க முடியும்? இந்த பிதாவானவர் எப்படி கொலை செய்யாதிருப்பாயாக என போதிக்கும் தகுதி உள்ளவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும், இவர் எப்படி இறக்கம் உள்ளவராக இருக்கிருக்ககூடும்? கருணை உள்ளவராக இருக்கமுடியும்?

தோழி ! இவைகளை விட மேலாக...
ஏழை – எளியவர்களின் வறுமையை அடித்தளமாக்கி அதன் மீது மத மதில்களைகட்டி வருவதும்...அழுக்கேறி உழைப்போரின் பெலன்களையெல்லாம் தும்பைவெள்ளை அங்கிகள் தசமபாகமாக சுரண்டி வாழ்வதும்...பிராத்தனை என்கிற பெயரில் சிந்தனை சுதந்திரம் மறுக்கபடுவதும் நெஞ்சு பொறுத்திட முடியாத நெடுஞ்சோகம் அல்லவா?
இப்படி வேதாகம சித்தாந்தத்திலும், செயல்பாட்டிலும் வழிநெடுக ஏற்கமுடியாதவைகள் ஏராளம்.

அன்புத்தோழி! 
உனது உணர்வுகளை புண்படுத்துவதோ, நம்பிக்கைகளைக்காயப்படுத்துவதோ இக்கடிதத்தின் நோக்கம் அல்ல; அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் நீ உணர்வாய். பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுமே... அதை போல 
அறிவை சிலுவைகளில் அறைந்தவர்களாய்; 
பகுத்தறிவு சுதந்திரம் பரிக்கப்பட்டவர்களாய்; 
மத பிசாசுகளின் பிடியில் கட்டுண்டவர்களாய் இருக்கும் 
உன் போன்றோரை விடுதலையாக்கும் முயற்சி. மற்றபடி இது கிருஸ்துமீதான, கிருத்துவர்கள் மீதான குற்ற பத்திரிக்கை அல்ல, ஏனெனில்
யுத்தங்கள் தத்துவங்களோடு மட்டுமே
                                                   
தோழமையுடன்
சமரன்.
                                                                                         
நன்றி
தமிழ் முற்றம்
டிசம்பர் 2005 இதழ்



2 கருத்துகள்:

சுபாவள்ளி சொன்னது…

யுத்தங்கள் தத்துவங்களோடு.... பிரார்த்தனை என்ற பெயரில் சிந்தனை சுதந்திரம் மறுக்கப்படுவது
மதங்களை பரப்ப வந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே நம்பிடும் கிறித்தவ மக்கள்.. நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்

Samaran Nagan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.