சனி, நவம்பர் 26, 2011

ஈழம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?




"களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்
களிகள் விதிர்த்திட்ட வெங்கள்-துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே “

கள்ளு பருகும் போது சிந்தும் துளிகளாலும் நுரைகளாலும் வீதியே நனைந்து கிடக்க அதன் மேல் யானை நடந்ததால் சேறாகி வீதி முழுக்க மணக்கிறது கள்ளு மனம் என்று கள்ளின் பெருமையை உச்சி முகர்கிறது அந்த இலக்கிய பாடல்.

ஆலைவாய்க் கரும்பின் தேனும், அரி தலைப் பாளைத் தேனும்,
சோலை வீழ் கனியின் தேனும், தொடை இழி இறாலின் தேனும்,
மாலைவாய் உகுத்த தேனும்,-வரம்பு இகந்து ஓடி, வங்க
வேலைவாய் மடுப்ப-உண்டு, மீன் எலாம் களிக்கும் மாதோ.

கரும்பாலைகளிலிருந்தும் பெருகும் தேன் போன்ற கருப்பஞ்சாரும், தேனும் கள் இறக்குவோர் அரிந்த பாளையிலிருந்து வடியும் கள்ளும், சோலைகளில் பழுத்த பழங்களின் சாறும், தொடுக்கப்பட்ட இடத்தினின்று வழிகின்ற தேனடைத் தேனும் மலர் மாலைகளிலிருந்து வடியும் தேனும், எல்லை மீறிப் பெருகி ஓடிகப்பல்கள் இயங்கும் கடலிலே போய்ச் சேர கடலிலே வந்து கலக்கின்ற அவற்றை மீன்களெல்லாம் பருகிக் களிக்கும். என்று கோசல நாட்டின் வளம் மற்றும் சிறப்பினை கூறும் இந்த பாடலில் கள்ளின் சிறப்பும் மணக்கிறது.

கள்ளும் கறி சோறும் போட்ட மன்னன் இறந்து விட்டானே என்று இலக்கிய வீதிகளில் எத்தனையோ புலவர்கள் புலம்பி இருக்கிறார்கள் .
ஈழம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?
பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் கிளைகளிலிருந்து கீரல் செய்து அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் மண் குடுவைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு சுவையுடன் இருக்கும் . தமிழர்களின் வாழ்வோடு இணைந்த பிரிக்க முடியாத உணவு என்பதை பழந்தமிழர் இலக்கியங்களிலிருந்து அறியலாம். ஆமாம் கள்ளுக்கு மறு பெயர் ஈழம் !


வெறி
தேன்
மாலி
முருகு
காவி
சாலி
அரி
நாரி
மேதை
படு
இக்கு
அரிட்டம்
என இலக்கியங்களில் ஏனைய பெயர்களில் அழைப்படுகிறது கள்ளு.

உடல் வலியுடன் வேலை செய்யும் கிராம மக்கள், கள்ளை வலி நிவாரணியாக நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியாக மக்களுக்கு கள் ஏற்ற பானமும் ஆகும். கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி. கள் இறக்குவது மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47 சொல்கிறது.

1927 இல் கள்ளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னை மரங்களை வெட்டிய பெரியார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 1963 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்து கொண்டு, கள்ளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் மது கொள்கை மற்றும் மதுவிலக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் தனது அறிக்கையில், “கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ மது விலக்குச் சட்டத்தின் படி தமிழக அரசு கள்ளைத் தடை செய்துள்ளது. மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உணவு தேடும் உரிமையைத் தமிழக அரசு பறிக்கிறது என அறிந்து கொள்ளலாம். ஆகையால் திட்டமிட்டே நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிஷனின், கள் குறித்த அறிக்கையை வெளியிடாமல் தமிழக அரசு காலம் கடத்துகிறது.இது மிகவும் அநீதியான செயலாகும்.


பெரியாரின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்வோரும், கள் மது என்று கூறி மது ஒழிப்பு மாநாடு நடத்துவோரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கள்ளுக்கு தடை என்றால் அரசு விற்பனை செய்யும் பீர், பிராந்தி போன்றவை என்ன புனித நீரா? மக்கள் இறக்கும் கள்ளுக்கு தடை விதிக்கும் அரசாங்கம், தானே மதுவை தெருத் தெருவாக விற்பனை செய்கிறது. இதில் மேட்டு குடிகளுக்கு வேறு தனி ஒயின்ஷாப்.

அரசின் வருமானத்தைத் தாண்டி, பண முதலைகள் மற்றும் தங்கள் பினாமிகளின் வருமானம் பாதிக்கப் படக்கூடாது என்பது தானே முக்கிய நோக்கம். வருமானத்திற்காக உடலைக் கெடுக்கும் மது வகைகளுக்கு பருவந் தோறும் இலக்கு வைத்து வணிகம் நடத்தும் தமிழக அரசு, மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
ஆம் , மக்களே ஈழத்தை அங்கீகரிப்போம் வாருங்கள் !

கருத்துகள் இல்லை: