புதன், ஆகஸ்ட் 10, 2011

சுதந்திரமென சொல்லி திரிகிறது





ஒருவனை சிலுவையில் அறைந்து விட்டு பின் அவனை மண்டியிட்டு வணங்குவதை போல..
இன்னொருவனை விஷம் வைத்துகொன்று விட்டு பின் அவன் சொன்னதையெல்லாம் பொன்மொழிகள் எனத்தொகுத்து பூரித்து மகிழ்வதை போல..
பெண் இனத்தையே  அடிமைகளாக்கிவிட்டு பின் கல்லுக்கும் மண்ணுக்கும் அவர்களின் பெயர்களை சூட்டிப்பெருமைப்பட்டுக்கொல்வதை போல.. 

விரிந்த பரந்த மார்பில் தேசிய பதாகை அணிவதும் , நெஞ்சையும் தோளையும் நிமிர்த்தி உயர்த்தி கீதம் இசைப்பதும் , அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி ஆனந்தபடுவதும் சுதந்திரமென சொல்லி திரிகிறது இத்தேசம்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஜனநாயக புண்களில் ரத்தமும் ,சீழுமாய் வழிய , வெண்மணி சாம்பல்களுக்கு நடுவே விரைப்பாய் நின்று “ தாயின் மணிக்கொடி பாரீர் , அதை தாழ்ந்து பணிந்திட வாரீர் “ என்று ஒரு நடைபாதை வியாபாரியின் தோரணையோடு கூவி கூவி அழைப்பது நகைப்புக்குரியதேன்றி வேறன்ன?

இது ஒரு புறமிருக்க
இந்திய சுதந்திரம் என்பதை , தனி மனிதனை மையப்படுத்தியும் , அவனது அகிம்சாமுறைக்கு கிடைத்த வெற்றி என்றும் இந்த வகுப்பறை வரலாறுகள் போதனை செய்துவிட்டு போகட்டும் , ஆனால் ஜாலியன் வாலாபாத் படுகொலையிலும் , ஒத்துழையாமை இயக்கத்தின் போது நடந்த வெறியாட்டங்களின்  போதும் இன்னும் பிற விடுதலைபோராட்டங்களிலும் உயிர் நீத்த வீர மறவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவதை எப்படி ஏற்கமுடியும் ?

இந்திய சுதந்திரம் என்பது ...
ஆயிரமாயிரம் தோழர்களின் ரத்த வெள்ளத்தில் தோய்த்தெழுதிய சரித்திரம்! அவர்களின் முதுகுத்தண்டு உடைய வீழ்ந்து முறிந்த குண்டாந்தடிகளுக்கான வெகுமதி ! தொண்டைத்தண்ணி  வற்ற முழக்கமிட்ட உரத்த குரல்களுக்கு கிடைத்த உரிய மரியாதை !,      

சமரன்
நன்றி - தமிழ் முற்றம் இதழ்
ஆகஸ்ட் -2005

1 கருத்து:

சுபா வள்ளி சொன்னது…

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்.. வீர முழக்கம் பேசி ரத்தம் சிந்தி நாம பெற்ற சுதந்திரத்தை போற்றவேண்டாம் தூற்றாமலாவது இருக்கலாமே..பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்தாலே போதும்...