செவ்வாய், பிப்ரவரி 16, 2010

படித்ததும் கிழித்ததும் - பாமரன்


அட்சரா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள பாமரன் எழுதிய "படித்ததும் கிழித்ததும்" என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி நக்கலும், நையாண்டியும் இழைந்தோடும் பாமரனுக்கு ஒரு இந்தியனின் கோபம் சராசரிக்கு மேலேயே இருக்கிறது. படிக்க படிக்க எப்படி நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லையோ, அதேபோல நம் சிந்தனையையும் அடக்க முடியவில்லை. சமூக கோபம் கொண்டு நாடு திருந்த நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது (குறிப்பாக அரசியல்வாதிகள்). நன்றிகள் பாமரன். அந்த புத்தகத்தில் நான் ரசித்த சில சுவாரசிய தகவல்கள் கீழே ...
**********************************************
பாண்டிச்சேரியில் ஒரு கருத்தரங்கம். உணவு இடைவேளையின் போது வெளியில் வந்தவன் கையில் தனது கையெழுத்திட்ட புத்தகத்தைத் திணித்தார் ஒரு சிறுமி.

'யாரும்மா எழுதியது' என்றபடி புத்தகத்தைப் புரட்டியவனுக்கு அதிர்ச்சி. 'நான்தான் எழுதினேன்' என்றார் அச்சிறுமி. வயது வெறும் பதினான்கு. 'சிறகின் கீழ் வானம்' என்கிற தலைப்பில் அச்சிறுமி எழுதியிருந்த ஹைக்கூ கவிதைகளைக் கண்டு அதிர்ந்து போய்விட்டேன். போதாக்குறைக்கு ஹைக்கூ... சென்ரியு... துளிப்பா... என ஏதேதோ பேசிக்கொண்டே போனார் அச்சிறுமி. மெய்யாலுமே பாமரன்தான் என்பதை உணர்ந்து கொண்ட பொழுதது.

யான் பெற்ற இன்பம் பெற வேண்டாமோ இவ்வையகம்? இதோ அச்சிறுமி கு.அ. தமிழ் மொழியின் நெத்தியடிகள்.

அரசு கோப்பு
நடவடிக்கை எடுத்தது
கரையான்...

தோழியின் திருமணம்
மறந்தே போனது
'மெகா' தொடர்...

ஆறுமுகனே
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்...

என்ன நண்பர்களே... இந்த வரி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

**********************************************
எப்படியோ ஒருவழியாக 1948 இல் எழுதப்பட்ட காந்தி கடிதம் ஏலம் விடுவது தடுக்கப்பட்டு விட்டது. அதற்கு மன்மோகன் சிங்... மத்திய கலாச்சார அமைச்சகம்... வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ (அப்போதைய அமைச்சர்) என எல்லோரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லி மாளாது.

அன்னியப் பொருள் புறக்கணிப்பு தொடங்கி அந்நிய முதலீடுகள் வரைக்கும் நாம் காந்தியையே ஏலத்தில் விட்டாச்சு. இதுல கடுதாசி ஒண்ணுதான் பாக்கி.

ம்ம்ம்... அப்படிப் போடுங்க ராசா.

**********************************************
ஒருமுறை ஆரம்பப் பள்ளி ஒன்றில் உரையாற்றுவதற்காக ஜார்ஜ் புஷ் போயிருந்தார். மாணவர்களிடையே பேசி முடித்த பிறகு...

'இனி கேள்வி நேரம்... உங்களில் யாருக்கும் எந்த சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேட்கலாம். ம். கேளுங்கள்' என்றார் புஷ்.

கேள்வி கேட்பதற்காக கையைத் தூக்கிய சிறுவனைப் பார்த்து 'உன் பெயர் என்ன தம்பி?' என்று புஷ் கேட்க...

'ஜாக்' என்றான் சிறுவன்.

'ஒ.கே. ஜாக். உனக்கு எந்த சந்தேகமானாலும் தயங்காமல் கேள்... கம் ஆன்' என்றார் புஷ்.

'மிஸ்டர் புஷ். எனக்கு கேட்பதற்கு மூன்று கேள்விகள் இருக்கின்றன.

ஒன்று: ஐ.நா.வின் ஆதரவில்லாமல் எதற்காக அமெரிக்கா ஈராக்கில் ஊடுருவியது?

இரண்டு: கெர்ரி உங்களை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் எப்படி ஜனாதிபதி ஆனீர்கள்?

மூன்று: ஒசாமா பின்லேடன் என்னவானார்?'

ஜாக் கேட்டு முடித்ததுதான் தாமதம். அதற்குள் பள்ளியின் இடைவேளைக்கான பெல் அடிக்க ஆரம்பித்து விட்டது.

'நல்லது... நீங்கள் வெளியில் போய் உங்கள் வேலையைப் பார்த்துவிட்டு வரலாம். நான் காத்திருக்கிறேன்' என்றார் புஷ் பெருந்தன்மையுடன்.

இடைவேளை முடிந்து மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்பிய சிறுவர்களைப் பார்த்து...

'சரி... நாம் மீண்டும் ஆரம்பிக்கலாமா? நான் எந்த இடத்தில் நிறுத்தினேன்? ஆங். சரி... கேள்வி நேரத்தில் நிறுத்தினேன் அல்லவா? உங்களில் யாருக்காவது கேள்விகள் இருக்கிறதா?' என்றார் ஜார்ஜ் புஷ்.

குசும்பு பிடித்த மற்றொரு மாணவன் எழுந்து... 'எனக்கு ஐந்து கேள்விகள் இருக்கின்றன' என்றான்.

'வெரிகுட் தம்பி... உன் பெயர் என்ன?' என்றார் புஷ்.

'ஸ்டீபன்'

'நல்லது ஸ்டீபன். நீ உன் ஐந்து கேள்விகளைக் கேட்கலாம்' என்று புஷ் சொல்ல... கேட்க ஆரம்பித்தான் ஸ்டீபன்.

'எனது முதல் கேள்வி: ஐ.நா.வின் ஆதரவில்லாமல் எதற்காக அமெரிக்கா ஈராக்கில் ஊடுருவியது?

இரண்டு: கெர்ரி உங்களை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் எப்படி ஜனாதிபதி ஆனீர்கள்?

மூன்று: ஒசாமா பின்லேடன் என்னவானார்?'

நான்கு: வழக்கத்திற்கு மாறாக, இடைவேளைக்கான பெல் ஏன் இருபது நிமிடங்களுக்கு முன்பாகவே அடிக்கப்பட்டது?

ஐந்து: எனக்கு முன்னர் கேள்வி கேட்ட ஜாக் என்ன ஆனான்?'

அவ்வளவுதான்.

**********************************************
செம்மொழித் தமிழின் பெருமையை மேலும் பன்மடங்கு உயர்த்த பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.

தங்களது படத்தின் தலைப்பை தூய தமிழில் 'பொறுக்கி' என்று வைப்பதா? 'பொல்லாதவன்' என்று வைப்பதா? 'கெட்டவன்' என்று வைப்பதா? என பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் இவர்கள் கொடுக்கும் நெத்தியடி விளக்கங்களைக் கேட்டால், ஆனானப்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள்.

'பொறுக்கி' என்றால் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும், அநீதிகளையும் பொறுக்கி எடுப்பவன் என்கிறான், பல்வேறு 'கலைப் படைப்புகளை' தமிழுக்கு அளித்த ஷக்தி சிதம்பரம். இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வேறு பெயரையும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

'கெட்டவன்' என்றால், ஒரு பெண்ணால் கெட்டவன் என்று அர்த்தம். யாரையும் திட்டுவதாக அர்த்தம் வராது. பெயரை மாற்றப் போவதில்லை நான்' என்கிறார் சிலம்புக்கு அரசன்.

'பொல்லாதவன்' என்கிற வார்த்தை யாரையும் திட்டுகிற அர்த்தத்தில் இல்லை. அதைவிட எனது மாமனார் இந்தப் பெயரில் நடித்திருக்கும் போது... அங்கிள் மெச்சிய மருமகனாய் அதே பெயரில் நடிப்பதில் என்ன தவறு?' என்கிறார் தனுஷ்.

அதானே! இவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ரொம்ப ரொம்பச் சரி...

நாளை 'எச்சக்கலை' என்று தலைப்பு வைத்தால் கூட 'நாங்கள் கலைகளின் எச்சத்தைப் பற்றி படம் எடுக்கிறோம்' என்று போட்டுத் தாக்கக் கூடவா நமக்குத் தெரியாது?

அதனால் அப்படியே வேலையோடு வேளையாக...

'பேமானி,
சோமாறி,
கசுமாலம்,
கம்மனாட்டி,
முடிச்சவிக்கி,
மொள்ளமாறி,
விருந்தாளிக்குப் பொறந்தவன்'

போன்ற 'அரிய' டைட்டில்களையும் உடனே பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...

ஏமாந்து விட்ட வேற எவனாவது லவட்டீட்டுப் போயிருவான்.

**********************************************
தங்களுக்கு அண்ணல் காந்தியின் மீதும், அவர்தம் அகிம்சையின் மீதும் எவ்வளவு ஆழ்ந்த பற்று இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது காங்கிரஸ் பேரியக்கம்.

கட்சித் தலைவர் குத்துப் பட்டதை விசாரிக்கக் கூடிய கூட்டத்திலேயே குத்து வெட்டு. இந்த லட்சணத்தில் 'இறந்த ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்களா...? கூடவே கூடாது... சட்டம் ஒழுங்கு கேட்டு விடும்... வன்முறை எரிப்போம்... ச்சே... எதிர்ப்போம்... ஆய்... ஊய்...' என்று கூச்சல் போடுவதையும் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. (வாயில் அல்ல)

ஆனால் உண்மையிலேயே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவும்... தமிழக மக்களின் உயிர் உடமைகளைப் பாதுகாக்கவும்... தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை அவசரமாகத் தந்தாக வேண்டியிருக்கிறது. அவை.
1. சத்தியமூர்த்தி பவனில் துணை ராணுவப் பிரிவொன்றை நிரந்தரமாக நிறுத்தி வைப்பது,

2. சத்தியமூர்த்தி பவனிலேயே அவசர சிகிச்சைக்கான ஒரு மருத்துவமனையை அமைப்பது.

3. 24 மணி நேரமும் இயங்கும் கதர் வேட்டி, கதர் சட்டை, கதர் புடவை, கதர் அண்டர்வேர் கடைகளை உடனடியாகத் திறப்பது.

4. வரும்போது காலில் இருக்கும் பாதுகைகள், போகும்போது நைந்து நார் நாரைப் போவதைத் தடுக்க உள்ளுக்குள்ளேயே நவீன செருப்பு அங்காடிகளை நிறுவுவது.

5. கழுத்து முதல் முழங்காலுக்குக் கொஞ்சம் மேல் பகுதி வரை மறைக்கிற இரும்பாலான ராம, லட்சுமண டாலர்களைத் தயாரிக்க தொழிற்சாலையை உள்ளேயே உருவாக்குவது.

6. கொடும்பாவி கொளுத்துதல், சொந்தத் தலைவரின் படைத்தையே செருப்பாலடித்து எரித்தல் போன்ற அகிம்சா ரீதியான போராட்டத்தை பக்கத்திலுள்ள பிற கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுக்க தீயணைப்பு நிலையமொன்றை சத்திய மூர்த்தி பவனுக்குலேயே அமைப்பது.

7. சமாதான பேச்சுக்கான மேலிடத் தூதர் வரும்போது ஒவ்வொரு கோஷ்டியையும் குண்டு துளைக்காத தனித் தனி கூண்டுகளுக்குள் உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டு வெளியில் நின்றபடி வீடியோ கான்பாரன்ஸ் முறையில் அகிம்சையை நிலைநாட்டுவது.

8. எல்லாவற்றை விடவும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைபவர்கள் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திடுகிறார்களோ இல்லையோ, மறக்காமல் இன்சூரன்ஸ் படிவத்தில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குவது.

தமிழக அரசு இதற்கென தனி சட்டம் கொண்டு வந்தால் கூட தப்பில்லை. அப்போதுதான் சத்தியமூர்த்தி பவன் சாலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் ஜீவன்கள் மரண பயம் இல்லாமல் கடந்து போக வசதியாக இருக்கும்.

வந்தே மாதரம்!

**********************************************
பொதுவாக டிசம்பர் 31 இல் நாடு ராத்திரி கொட்டமடிக்கிற மொத்தக் கூட்டமும் தை 1-ம் தேதி மட்டும் எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்கும்.

இன்னொரு கூட்டம் தமிழர் திருநாளுக்கு இங்கிலிஷில் குறுஞ்செய்தி அனுப்பும். மற்றொரு கூட்டமோ... வாசல் தெளித்துக் கோலமிட்டு தமிழ்ப் புத்தாண்டு பிறப்பிற்கு Happy Pongal என்று ஆங்கிலத்தில் எழுதி தங்கள் அறியாமையைப் பறை சாற்றும். இதையெல்லாம் கண்டும்... கேட்டும்... தொலைக்கிற நமக்கு, ஏர்வாடி, மனநலக் காப்பகங்களில் இருக்கிற உணர்வு தானாக வந்து சேரும்.

தமிழர்களுக்குள் எப்பொழுதாவது ஆங்கிலத்தில் பேசுவது தப்பே கிடையாது. ஆனால் எப்பொழுதாவது தமிழில் பேசுவதுதான் தப்பு.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பொங்கலுக்கான வாழ்த்து தயாரிக்கும் பணியில் எனது தோழர் செந்தமிழ்ச் செல்வனும் நானும் இறங்கியபோது எங்களுக்குள் தோன்றிய வாழ்த்து வரிகள் இதுதான்.

காலை மிதித்தால்: எக்ஸ்கியுஸ் மீ
கையில் கொடுத்தால்: தேங்க்ஸ்
ஊட்டி விட்டால்: மம்மி
கூட்டிப் போனால்: டாடி
புத்தகம் பிரித்தால்: சேஸ்
கும்பிடப் போனால்: நமஹ
பல்லை இளித்தால்: லவ்
பாட்டி செத்தால்: டெத்
அட மறந்தே போச்சு... (தமிழரென்பது)
இன்று தை பர்ஸ்ட்டாம்...
Wish you a Happy Tamil New Year.

**********************************************
2000 புள்ளிகள் சரிந்தன. சதுரங்கள் சிரித்தன... என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதே இல்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையை பற்றி எப்படி புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு மின்னஞ்சலை ஐதாராபாத்திலிருந்து அனுப்பி இருந்தார் நண்பர் சதீஷ் டேவிட்.

அது சுமந்து வந்த கதை இதுதான்.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்க கிளம்பினார்கள்.
கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய் பார்த்து...

'நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள்' என்று அறிவித்துவிட்டு, 'நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு கிளம்பினான் நகரத்து வாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபிசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் 'இதற்கா இவ்வளவு கவலை? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்... இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்றுவிட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக.. அங்கே...

குரங்குபிடி ஆபீஸில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம். 'நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் உள்ளது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா.

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.

**********************************************
உங்கள் ஞாபக சக்தியை சோதித்துப் பார்ப்பதற்கான சோதனை என்றும் வைத்துக் கொள்ளலாம்.
அல்லது நாமெல்லாம் எவ்வளவு கேனையர்கள் என்பதை நிரூபிப்பதற்கான போட்டி என்றும் வைத்துக் கொள்ளலாம் இதை.

கேள்வி ஒன்று: தூத்துக்குடியில் டாடாவின் டைட்டானியம் தொழிற்சாலை அமையவே கூடாது என்று எதிர்த்தவர்கள் யார்? யார்?

கேள்வி இரண்டு: அதற்கான உண்மை அறியும் குழுக்களை அனுப்பியவர்கள் யார்? யார்?

கேள்வி மூன்று: சுற்றுச் சூழலுக்கு தீங்கானது இந்த ஆலை என்று அடித்துச் சத்தியம் செய்தவர்கள் யார்? யார்?

கேள்வி நான்கு: தீங்கில்லை என்று அடியோடு மறுத்தவர்கள் யார்? யார்?

கேள்வி ஐந்து: தீங்கானதுதான் என்று எதிர்த்து அறிக்கை விட்டவர்கள் இப்போது எங்கே போனார்கள்?

கேள்வி ஆறு: இந்த ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா?

கேள்வி ஏழரை: பெட்டி... பெட்டி... என்கிறார்களே அதற்கான அர்த்தம் என்ன?

இவைகளுக்கு விடை உங்களுக்குத் தெரியும் எனில் உங்களின் தெளிவான பதிலினை ஜெயில் வார்டனின் அனுமதி பெற்றும் அனுப்ப வேண்டிய முகவரி

பாமரன் C/o குமுதம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10.

**********************************************
நேரம்: உங்கள் ஆயுள் காலம் முழுவதும்

மொத்த மதிப்பெண்கள்: 45

(சரியான விடையை டிக் செய்யவும். ஒவ்வொன்றுக்கும் ஏழரை மதிப்பெண்கள்.)

1. தற்போது 7 சதவீதமாக உள்ள பணவீக்கம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு எதிர்காலத்தில் 3 சதவீதமாகக் குறைக்கப்படும் என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர். அந்த எதிர்காலம் என்பது...

அ) கி.பி. 2099
ஆ) கி.பி. 8435
இ) கி.மு. 340
ஈ) இவை எதுவுமில்லை

2. விலைவாசி உயர்வு என்பது

அ) தேசியப் பிரச்சனை
ஆ) மாநிலப் பிரச்சனை
இ) நமக்கெல்லாம் மறை கழன்ரதன் பிரச்சனை
ஈ) சர்வதேசப் பிரச்சனை

3. ஆடம்பர வாழ்க்கை முறை, அதீத செலவீனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுணர்ந்த மகான்...

அ) தாயுமானவர்
ஆ) நபிகள் நாயகம்
இ) கௌதம புத்தர்
ஈ) டாக்டர் மன்மோகன் சிங்

4. உணவுப் பொருட்களின் விலை ஏற்றம்தான் பணவீக்கத்துக்குக் காரணம் என்றால், உணவு தானிய உற்பத்தி குறைய எது காரணம்?

அ) உங்களிடமும் என்னிடமும் உள்ள எக்கச்சக்க பணப்புழக்கம்
ஆ) காய்கறிகார பாட்டியிலிருந்து ஒன் பி த்ரீ டி கொடுக்கும் நாயர் வரைக்கும் கீப் த சேஞ்ச் என்று ஐந்நூறு ரூபாய் நோட்டை நாம் அன்றாடம் விசிறியடிப்பது
இ) பயோ டீசல் உற்பத்தி
ஈ) பேச்சைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்காமலிருப்பது

5. தற்போது மக்களிடையே பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது. காசு இல்லாமல் இருந்தவர்களிடம் கூட இப்போது காசு இருக்கிறது. பணப்புழக்கம் அதிகமானால் விலைவாசி உயரத்தான் செய்யும் என்கிற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட பொருளாதார நிபுணர்

அ) அமர்த்தியாசென்
ஆ) சுஷ்மிதா சென்
இ) ஆல்பூர் காம்யு
ஈ) பேராசிரியர் அன்பழகன்

6. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை மட்டப்படுத்தவும், இந்த நாட்டின் குடிமகன் என்கிற வகையில் நாம் என்ன செய்யலாம்?

அ) நமக்கான கழுமரம் ஒன்றை நாமே தயாரித்து அதில் ஏறி ஹாயாக அமர்ந்து கொள்ளலாம்
ஆ) சமணத் துறவிகளைப் போல உடைகளுக்கு விடை கொடுத்து விட்டு மயிலிறகால் தெருவைப் பெருக்கியபடி எங்காவது தொலைந்து போகலாம்
இ) சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளலாம்
ஈ) எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டு போடலாம்.

என்ன? இவற்றுக்கெல்லாம் சரியான விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படியானால் சந்தகமே வேண்டாம்.

நிச்சயம் நீங்களும் ஒரு நக்சலைட்தான். உங்களைக் கண்டவுடன் போட்டுத்தள்ள தமிழக போலிசின் என்கவுன்ட்டர் நாடகப் பிரிவுக்கு உங்கள் பெயரும் பரிந்துரைக்கப் படுகிறது ஒ.கே.?

**********************************************
யப்பா...

இதுவரைக்கும் நாங்க எங்க போராட்டத்துக்குப் பயந்து போயித்தான் சுதந்திரம் கொடுத்தான் வெள்ளக்காரன்னு நம்பிகிட்டு இருந்தோம்...

இதையெல்லாம் கேக்கறப்போ...

அவனோட சுதந்திரத்தக் காப்பாத்திக்கத்தான் பின்னங்கால் பிடரில பட ஓடிருக்கான்னு இப்பதான புரியுது...

**********************************************

கருத்துகள் இல்லை: