வியாழன், ஜூலை 07, 2011

அதிகாரக் கொழுப்பு


அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும்.

அது தில்சன் பிறந்த வீடு. அது தில்சன் தவழ்ந்த இடம். அது தில்சன் நடைபயில பயன்பட்ட நாற்காலி. அது தில்சன் தத்தித் தத்தி நடந்த சுவர். அது தில்சன் ஓடியாடி விளையாடிய அறை. அது தில்சன் உணவருந்திய தரை. அது தில்சன் வீட்டுப் பாடங்களை எழுதிய இடம்.

இந்த வீட்டில்தான் தில்சன் வாய்விட்டு சிரித்தான். இதே வீட்டில்தான் ஐம்பது பைசா சாக்லெட்டுக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.

கைவிரல்களையே துப்பாக்கியாக்கி ‘டுமீல்… டுமீல்…’ என சுட்டு அவன் திருடன் போலீஸ் விளையாடிய இடமும் அதுதான். அக்கடா என்று படுத்து உறங்கியதும் அதே இடம்தான்.

பள்ளித் தேர்வுக்காக அவன் படித்ததும் அந்த இடம்தான். வீட்டுச் சூழ்நிலையை உணர்ந்து பனிரெண்டு வயதில் அவன் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும் அதே இடத்திலிருந்துதான்.

இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்குள் வளர்ந்திருந்த வாதாம் மர கொட்டைகளை எடுப்பதற்காக கடந்த ஜூலை 3ம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு நண்பர்கள் சூழ அவன் புறப்பட்டதும் அந்த வீட்டிலிருந்துதான். வாதாம் மர கொட்டைகளை எடுத்த ‘பயங்கரவாத’ செயலுக்காக இராணுவ அதிகாரியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி சடலமாக அவன் திரும்பி வந்ததும் அதே இடத்துக்குத்தான். பொது மக்களின் பார்வைக்கு அந்த பதிமூன்று வயது சிறுவனின் உடல் கிடத்தப்பட்டதும் அதே தரையில்தான்.

இனி தில்சன் சுவற்றில் தொங்கும் ஒரு புகைப்படம் மட்டுமே.

அது எஸ்.எம்.நகரும், காந்தி நகரும் இணைந்த குடியிருப்புப் பகுதி. கிட்டத்தட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கிருக்கின்றன. வீடுகள் என்றால் நான்கு பக்கமும் சுவர். கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் தகடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் துணி. ஆங்காங்கே கம்பை நட்டு அதன் மீது துணிகளை போர்த்தி உருவாக்கப்பட்ட வீடுகளும் அங்கு உண்டு. இடைவெளியின்றி இருக்கும் இந்த வீடுகளில் அதிகபட்சம் இரு அறைகள் இருக்கின்றன. ஐந்தடி உயரம் கொண்டவர்கள் கால் நீட்டி படுக்கலாம். அதற்கு மேல் உயரம் கொண்டவர்கள் கால்களை மடக்கித்தான் படுக்க வேண்டும். வாசல் கதவாக பெரும்பாலும் மைக்காவே இருக்கிறது. லேசான காற்றுக்கும் பலமாக அது ஆடுகிறது.

சென்னையின் மையப் பகுதியான அண்ணாசாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கிச் செல்லும் சாலையில், இப்படியொரு குடியிருப்பு இருக்கும் விஷயமே தில்சன் சுடப்பட்டு இறக்கும் வரை பலருக்கு தெரியாது. அண்ணாசாலையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திரும்பும் பாடிகாட் முனீஸ்வரன் இருக்கும் சாலையில் திரும்பாமல் நேராக வந்தால் காயிதே மில்லத் பாலத்தில் முட்டி நிற்கும். இப்பாலத்தைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் பாரிஸ் கார்னரை அடையலாம். வலப்பக்கம் திரும்பினால், மெரீனா கடற்கரை சாலையை தொடலாம்.

இச்சாலையின் இடதுபுறத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளும், வலது புறத்தில் தீவுத்திடலின் காம்பவுண்ட் சுவரும் இருக்கின்றன. இந்த இராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புச் சுவர் ஐந்தரை அடி உயரத்தில் இருக்கிறது. அதற்கு மேல் இரண்டடி உயரத்தில் கம்பிகள். கம்பியின் நுனியில், வேல் போல் கூர்மை. இந்தச் சாலைதான் தில்சன் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடி மரச் சாலை.

காயிதே மில்லத் பாலம் ஆரம்பமாகும் இடத்தில், இடதுபுறமாக ஒரு தார்ரோடு பிரிகிறது. இந்தச் சாலைதான் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எம்.நகரும், காந்திநகரும் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் மெயின் ரோடு. இச்சாலையின் தொடக்கத்திலேயே இடதுபுறமாக மாநகராட்சிக்கு சொந்தமான கட்டணக் கழிப்பிடம் இருக்கிறது. இங்குதான் இப்பகுதி மக்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தினமும் பயன்படுத்துகிறார்கள். சாலையின் இருபுறமும் இடைவெளியின்றி ஒன்று வீடுகள் இருக்கின்றன அல்லது நான்குக்கு நான்கு அளவில் கடைகள் இருக்கின்றன.

இந்தப் பிரதான சாலையின் வலதுபுறத்தில் ஆங்காங்கே சந்துகள் பிரிகின்றன. ஒவ்வொரு சந்திலும் இருபுறமும் வரிசையாக வீடுகள். சந்தின் அளவு மூன்றடி இருந்தாலே அதிகம். இச்சந்துகளுக்குள் இரண்டடி அகலமுள்ள கிளை சந்துகளும் உண்டு. அங்கும் வரிசையாக வீடுகள். பலரும் சந்திலேயே துணி துவைக்கிறார்கள் அல்லது அடுப்பை எரியவிட்டு சமையல் செய்கிறார்கள்.

மெயின் ரோட்டில் நூறடி நடந்தால் வலதுபுறமாக வரும் அரசு ஆரம்பப் பள்ளியை ஒட்டி ஒரு சந்து பிரிகிறது. அச்சந்துக்குள் இடப்புறமாக பிரியும் கிளைச்சந்தின் ஆறாவது வீடுதான், தில்சனின் வீடு.


தில்சனின் பெற்றோர் கலைவாணி-குமார்
”எனக்கு மொத்தம் மூணு புள்ளைங்க. பெரியவ தீபிகா. 18 வயசாகுது. பத்தாவது வரை படிச்சுட்டு கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்கறா. பை தைக்கிற வேலை. அடுத்து திலீபன். 16 வயசு. ஆறாவது வரை படிச்சிருக்கான். எனக்கொரு தம்பி உண்டு. அவன் மீன்பாடி வண்டி ஓட்டுவான். அவனுக்குத் துணையா திலீபன் போயிட்டு வர்றான். வண்டில மூட்டையை ஏத்தறதும், இறக்கறதும் அவன் வேலை. கடைசி புள்ளதான் தில்சன். 13 வயசாகுது. அஞ்சாவது வரை படிச்சிருக்கான்.

ராசா மாதிரி இருந்தாருங்க எம் புருஷன். குமாருன்னா எல்லாருக்கும் தெரியும். அவரும் மீன்பாடி வண்டி ஓட்டறவருதான். சொன்ன நேரத்துக்கு கரீட்டா சரக்கை கொண்டு போய் சேர்த்துடுவாரு. அதனாலயே பலபேரு அவர்கிட்ட சரக்கை டெலிவரி பண்ணச் சொல்வாங்க. யார் கண்ணு பட்டதுனு தெரியலை. அவருக்கு சக்கரை நோய் வந்துடுச்சு. ஓடியாடி வேலை செய்ய முடியலை. வண்டி ஓட்ட சிரமப்பட்டாரு.

சின்னதா… ரொம்ப லேசா அவர் கால்ல ஏற்பட்ட காயம், பெரிசாகிடுச்சு. டாக்டருங்க காலையே வெட்டி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுனே தெரியலை. சடார்னு டாக்டர் கால்ல விழுந்து ‘எப்படியாவது எம் புருஷன் காலை காப்பாத்திடுங்க’னு கெஞ்சினேன். அந்த மவராசன், ’80 ஆயிரம் ரூபா செலவாகும். பரவாயில்லையா’னு கேட்டாரு. வட்டிக்கு கடன வாங்கி அவர்கிட்ட பணத்தை கொடுத்தேன். புருஷன் காலை எப்படியோ குணமாக்கினாரு. ஆனா, திரும்ப வண்டி ஓட்டக் கூடாதுனு சொல்லிட்டாரு.

என்ன செய்யறதுனு தெரியலை. கடன் சேர்ந்துப் போச்சு. எம் பொண்ணும் பையனும் சம்பாதிக்கிற பணம் வட்டி கட்டத்தான் சரியா இருக்கும். குடும்பத்த எப்படி காப்பாத்த? நான் காலைல இரண்டு மணிநேரம் பேப்பர் பொறுக்கறேன். அதுல மாசம் ஆயிரத்தைனூறு ரூபா கிடைக்கும். அதுபோக சாயங்காலமானா, பூ கட்டப் போவேன். பூ விப்பேன். அதுல ஏதோ கிடைக்கும். இதை வச்சுட்டு அஞ்சு பேரு எப்படி சாப்பிடறது?

அப்பத்தான் தில்சன், ‘அம்மா நான் வேலைக்கு போறேன்’னு சொன்னான். இதைக் கேட்டுட்டு நானும் எம் புருஷனும் அழுதுட்டோம். இவனையாவது நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு தகுந்தாமாதிரி அவனும் நல்லா படிச்சான். ஆனா, தலையெழுத்து அவனும் சம்பாதிச்சாதான் எங்களால திங்க முடியும்னு நிலை. என்ன செய்ய… சரினு சொல்லிட்டோம்.

ஆனா, தில்சன் உடம்பு பூஞ்ச உடம்பு. அவனால மூட்டை தூக்க முடியாது. மீன்பாடி வண்டி ஓட்ட முடியாது. அதனால எம் புருஷன் ரெகுலரா சரக்கு ஏத்தற கடை முதலாளிகிட்ட விஷயத்தை சொன்னோம். ‘சின்னப் ப்சங்கள வேலைக்கு வச்சிக்கறது தப்பு… ஆனா, உங்க குடும்ப சூழ்நிலை இப்படி இருக்கறதுனால யாருக்கும் தெரியாம நான் வேலை தர்றேன். அனுப்பி வை. ரெண்டாயிரம் ரூபா சம்பளமா தர்றேன்’னு சொன்னாரு.

காலைல 7 மணிக்கு தில்சன் வூட்ட வுட்டு கெளம்பினானா ராத்திரி 7க்குத்தான் வருவான். அங்க டீ, சாப்பாடு வாங்கிக் கொடுக்கறதுதான் அவன் வேலை. மதியம் அவன் சாப்பிட திலீபன்கிட்ட சோறு பொங்கி கொடுத்துவுடுவேன். சம்பளப் பணத்தை அப்படியே கொண்டு வந்து கொடுத்துடுவான். அதுல ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டான். செலவுக்கு காசு வேணும்னாலும் என்னான்டதான் கேப்பான்.

ஞாத்திகிழமை ஒருநாள்தான் அவனுக்கு லீவு. பசங்களோட இதோ இந்தச் சந்துலயேதான் கிரிக்கெட் ஆடுவான். இல்லைனா பீச்சுக்கு போவான். மத்தபடி வேற எங்கயும் போக மாட்டான். அந்தப் பொறம்போக்குங்க இருக்குங்குளே மிலிட்டரி இடம்… அங்க அவன் ஒருமுறை கூட போனதா எங்கிட்ட சொன்னதேயில்லை. நான் பேப்பர் பொறுக்க போறப்பவும், பூ விக்கப் போறப்பவும் பல பசங்கள அங்க பாத்திருக்கேன். ஒருமுறை கூட தில்சனை அங்க பார்த்ததில்ல. அதனாலயே அங்க போனப்ப அவன சுட்டுட்டாங்கனு சஞ்சய்யும், பிரவீன்னும் அழுதுகிட்டே வந்து சொன்னப்ப நம்ப முடியலை. ஆனா, இதுல எல்லாமா பசங்க பொய் சொல்லும்? கும்பலா ஓடிப் போய் பார்த்தோம்.

அங்க எம் புள்ள தலைல குண்டு பாஞ்சு சுயநினைவு இல்லாம விழுந்து கிடந்தான். படுபாவிங்க, அவன் மேல இலையை போட்டு மூடியிருந்தாங்க. யாருக்கும் தெரியக் கூடாதாம். நல்லா இருப்பாங்களா அந்தக் கபோதிங்க… வயிறு எரிஞ்சு சொல்றேன், நாசமா போவாங்க… விழுந்துக்கிடந்த தில்சனை அப்படியே தூக்கிட்டு ஆட்டோ பிடிச்சு கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேர்த்தோம். டாக்டருங்க எதுவுமே சரியா சொல்லலை. நேரம் பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. அப்புறம் தில்சன் செத்துட்டான்னு பொணமா கொடுத்தாங்க.

இப்ப வரைக்கும் எனக்கு புரியலைங்க… வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா… அதுக்காக சுட்டுக் கொல்வாங்களா? எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்…”

அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி.


அந்தக் குடியிருப்புப் பகுதி முழுக்கவே கொந்தளிப்பாக இருக்கிறது. இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் அப்பகுதியில் மா மரங்களும், வாதாம் மரங்களும் நிறைந்திருப்பதால், அடிக்கடி சிறுவர்கள் அங்குச் சென்று பழங்களையும், கொட்டைகளையும் பறித்துச் சாப்பிடுவார்களாம். அதுபோன்ற நேரங்களில் கூப்பிட்டு, கண்டித்துத்தான் காவலாளிகள் அனுப்புவார்களாம். துப்பாக்கியை காட்டி இதுவரை யாரும் மிரட்டியதில்லை என்கிறார்கள் அக்குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள்.

”ஞாத்திக்கிழம அன்னிக்கி வாடா வாதாம் கொட்டய சாப்பிடலாம்னு நாங்கதான் தில்சனை கூட்டிட்டு அங்க போனோம். தில்சன் மரத்து மேல ஏறி வாதாம் காய பறிச்சு கீழ போட ஆரம்பிச்சான். நானும் சஞ்சய்யும் அத பொறுக்க ஆரம்பிச்சோம். அப்ப கார்ல ஒருத்தர் வந்தார். எங்கள பார்த்து சத்தம் போட்டார். உடன நானும் சஞ்சய்யும் சுவர் ஏறி குதிச்சு வெளில வந்தோம். தில்சன் மரத்த விட்டு வேகமா இறங்க ஆரம்பிச்சான். எங்கள மாதிரியே சுவர் ஏறி அவன் குதிக்க முயற்சி செஞ்சப்ப ‘டுமீல்’னு துப்பாக்கி சத்தம். அவன் தலைலேந்து ரத்தம் வர அப்படியே அந்தப் பக்கமா கீழ விழுந்தான். கார்ல இருந்தவரு உடனே போயிட்டார். நானும் சஞ்சய்யும் பயந்துபோய் ஓடி வந்து சொன்னோம்…”

கருவிழிகளில் பயம் மின்ன நடந்தக் கொடூரத்தை பிரவீன் சொல்லும்பொழுதே அடிவயிறு சில்லிடுகிறது. அப்படியிருக்க 13 வருடங்களாக அவர்கள் கண்முன்னால் வளர்ந்த ஒரு சிறுவன் குண்டடிப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த மக்களுக்கு எப்படியிருக்கும்?

சுட்டவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். சுடப்பட்ட தில்சனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லாமல் இலை, தழைகளை போட்டு மூட முயற்சி செய்ததும், தண்ணீர் ஊற்றி உடனுக்குடன் தரையில் இருந்த அந்த ரத்தக் கறையை கழுவியதும் அவர்களது ஆவேசத்தை கிளறிவிட்டது. காவல்துறை வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் வரை மக்கள் தங்கள் மறியலை கைவிடவில்லை.


இதோ, இந்த நிமிடம் வரை இராணுவ வளாகத்துக்குள் நடந்த இந்தப் படுகொலை குறித்து இராணுவ அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகவே சொல்லி வருகிறார்கள். முதலில் தில்சனை யாரும் சுடவில்லை. அவனாக சுவரிலிருந்து கீழே குதிக்கும்போது கம்பி குத்தி இறந்தான் என்றார்கள். ஆனால், பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தெளிவாக தில்சன் குண்டடிப்பட்டு பலியாகியிருக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. உடனே சுட்டது ஒரு இராணுவ வீரர்தான் என்றார்கள். இப்போது இல்லை… இல்லை… அது இராணுவ அதிகாரிதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வளாகத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இராணுவ வீரர்கள் அல்ல. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நடத்தும் தனியார் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் துப்பாக்கி கிடையாது. லத்தி மட்டுமே உண்டு.

இந்த உண்மை அம்பலப்பட்டுப் போனதால் இப்போது அது இராணுவ அதிகாரிதான், லெப்டினன்ட் கர்னல்தான் என்கிறார்கள். அந்த அதிகாரி குடிபோதையில் இருந்ததால் இப்படி தன்னையும் அறியாமல் சுட்டுவிட்டார் என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் வர அனுமதியில்லை என நியாயம் பேசுகிறார்கள். ஆனால், வெறும் இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிதான் அது என்பதும், குடும்பத்துடன் இராணுவ அதிகாரிகள் உண்டு, உறங்கி, கக்கூஸ் போகும் ஒரு இடம்தான் அப்பகுதி என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். மறக்கும்படி சொல்கிறார்கள்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த இராணுவ அதிகாரியை தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி இராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வரும் தனது பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை தில்சனின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்கிறார்.

”பணம் கொடுத்துட்டா எம் புள்ள திரும்பக் கெடைச்சுடுவானா? கொலக்காரன தப்பிக்க வைக்கத்தான் முயற்சி நடக்குது…” என்று கலைவாணி ஆவேசத்துடன் சொல்வதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்கின்றன.


பூக்கடை போலீசார் முதலில் தில்சன் கம்பி குத்தி இறந்ததாகத்தான் வழக்கை முடிக்கப் பார்த்திருக்கிறார்கள். பகுதி மக்கள் சத்தம் போட்ட பிறகே குண்டு பாய்ந்து இறந்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.

இராணுவ வீரரோ அல்லது இராணுவ அதிகாரியோ பொது மக்களை இப்படி சுட்டுக் கொல்லும்போது, இறந்த மனிதர் பயங்கரவாதி என்று அறிவித்து அப்படுகொலையை நியாயப்படுத்துவதுதான் வழக்கம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றாடம் நடப்பது இதுதான். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், சிறுவர்கள் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி எடுப்பவர்களாக சித்தரிக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாவதும் இப்படித்தான்.

ஒருவேளை இராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், காவல்துறையினரால் விசாரணை நடத்த முடியாது. இராணுவ வீரர்களுக்கென்றே இருக்கும் கோர்ட் மார்ஷல்தான் விசாரணை நடக்கும். அந்த விசாரணையும் இராணுவத்துக்கு சாதகமாகத்தான் இருக்கும். காரணம், அதிகார பலத்தில் இராணுவத்துக்கான நீதி, நியாயங்கள் வேறு.

இந்த அதிகார கொழுப்புத்தான் சென்ற தலைமுறையில் மாந்தோட்டத்தில் மாங்காய் பறிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சிறுவர்களை கட்டி வைத்து சவுக்கினால் விளாச வைத்தது. இதே கொழுப்புத்தான் நந்தனை உயிருடன் எரித்தது. சவுக்கினால் பண்ணையடிமையின் தோல் உறிவதைப் பார்த்து அன்று பண்ணையார்கள் சிரித்தார்கள். நந்தன் எரிவதைப் பார்த்து தீக்ஷிதர்கள் ஆர்ப்பரித்தார்கள். இன்று தில்சன் குண்டடிப்பட்டு இறந்ததைப் பார்த்து இராணுவ அதிகாரிகள் புன்னகைக்கிறார்கள். அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது.

எந்த வேலையும் இல்லாமல் தின்னும் குடித்தும் பொழுதை போக்கும் இராணுவம்தான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நிலை கொண்டுள்ளது. காஷ்மீர், வடகிழக்கு, போன்ற இடங்களில் இராணுவத்திற்கு இருக்கும் உரிமை யாராலும் தட்டிக் கேட்க முடியாத ஒன்று. ஆயுதம் ஏந்தும் உரிமை இவர்களிடம் மட்டும் உள்ளதால் அதுவே இராணுவத்தின் கொழுப்பிற்கு காரணமாகிறது. இராணுவத்திற்கு அளிக்கப்படும் பயற்சியும், கட்டுப்பாடும் கூட பொது மக்களை அடக்கி ஒடுக்கி மிரட்டவே பயன்படுகிறது. அதிலும் இராணுவ வீரர்களை விட இராணுவ அதிகாரிகள் மிகுந்த சுகபோகிகளாகவே இருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்.

ரத்தம் சிந்தி 13 வயது தில்சன் இதை அம்பலப்படுத்தியிருக்கிறான். மெளனமாக இதையும் ஒரு செய்தியாக கடந்துச்செல்லப்போகிறோமா ?

கருத்துகள் இல்லை: