செவ்வாய், ஏப்ரல் 12, 2011

மெழுகுவர்த்தியோடு





ண்ணா ஹசாரே அன்கோவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் வெறியோடு ஒரு ரஜினி ரசிகனைப் போல ஆதரிப்பது தேர்தல் கமிஷனை! தமிழகத்தில் பறக்கும் படைகளால் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம், திருச்சி ஆம்னி பேருந்தில் ஐந்து கோடியை பிடித்த வீராங்கனை அதிகாரி, அஞ்சா நெஞ்சன் அழகிரியை தண்ணி குடிக்க வைத்த மதி நுட்பம்….என்று இந்த போற்றுதல்கள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முக்கியமாக பெரிசு கருணாநிதியே தேர்தல் கமிஷன் குறித்து எல்லா இடங்களிலும் புலம்பித் தள்ளுவதை நடுநிலையாளர்கள் மாபெரும் வெற்றியாக கருதுகின்றனர்.
ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னே உங்களையும் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியலில் இருந்தே விலக்கும் பாசிச போக்கு கலந்திருக்கிறது என்பதை அறிவீர்களா?
அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் ஜெயலலிதாவை ஆதரிப்பதன் விளைவாகவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டி தேர்தல் என்பதே மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா அல்ல, வெறுமனே வாக்களிப்பு மட்டும் நடக்கும் ஒரு சடங்கு போல மாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் வரும்போது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விரிவான தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை நடத்துவது வழக்கம். அதன் அங்கமாக பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்த தேர்தல் குறைவான  காலத்தில் நடக்கிறது என்றாலும் பல இடங்களில் தோழர்கள் விரிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசு மறுத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சணம்.
பொதுக்கூட்டத்திற்கான விண்ணப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வார்த்தைகளைப் பார்த்தாலே போலீசு மருண்டு விடுகிறது. உடனே இது குறித்து தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வேண்டும்என்று சம்பந்தப்பட்ட போலீசு சொல்கிறது. நண்பர்களே, ஒரு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அந்த கமிஷன், தேர்தல் எப்படி சட்டப்படி நடத்த வேண்டும் என்பதைத்தானே செய்ய வேண்டும்? இந்த அரசு, அரசியல், அமைப்பு குறித்த ஒரு இயக்கத்தின் கொள்கையை, அதை பிரச்சாரம் செய்யும் உரிமையை அது எப்படி தீர்மானிக்க முடியும்?
சரி, தோழர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் தேர்தல் கமிஷன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கிறது? இதில் சட்டப்படி அவர்கள் பதிலளிக்க முடியாது என்பதால் இது குறித்து நீங்கள் போலீசிடமே அனுமதி வாங்குங்கள்என்கிறார்கள். மீண்டும் போலீசு, மீண்டும் தேர்தல் கமிஷன்….இந்த ஆட்டம் இன்று வரை முடியவில்லை.
நாள் வேறு குறைவாக இருக்கிறதே இதற்கு வழக்கு போட்டு அனுமதி வாங்க முடியுமா என்று தோழர்கள் யோசனையோடு சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.
மறுகாலனியாக்கம் மும்முரமாக நடைபெறும் இந்த இருபது ஆண்டுகளில் அரசு மட்டுமல்ல அதற்கு பொருத்தமாக தேர்தலும், கூடத்தான் பாசிசமயமாக  மாறியிருக்கிறது. முன்பிருந்த பொதுவான அரசியல் நடவடிக்கைகளெல்லாம் இன்று கிடையாது. முதலில் இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றார்கள். திராவிட இயக்க வரலாற்றில் விடிய விடிய நடக்கும் இந்த பிரச்சாரக் கூட்டங்கள்தான் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்பு வைத்த கையோடு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான முக்கியமான இடங்களை மறுத்தார்கள். ஆளா வராத ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கினார்கள். ஆர்ப்பாட்டங்கள், மறியல் எல்லாவற்றிற்கும் இதுதான் கதி. பின்னர் சுவரெழுத்து, சுவரொட்டிகள், பேனர்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள்.
இதனால் தற்போது சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் மக்களிடையே பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. பெரிய கட்சிகள் எல்லாம் ஆளுக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை. அதே போல பணபலத்தால் ஊடகங்களில் விளம்பரம் செய்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் நமது தேர்தலும் அமெரிக்கா போல கார்ப்பரேட் நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவே முடியாது என்ற சூழ்நிலை இங்கும் தோன்றும். அல்லது தோன்றிவிட்டது.
இது தவிர பெரிய கட்சிகள் கூட முன்னர் போல பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளை வைத்து தேர்தலை அணுகுவதை இப்போது மாற்றிவிட்டார்கள். வேட்பாளர் மனுக்கொடுக்கும் போது கூட நான்கு பேர்தான் செல்ல வேண்டும், வாகன ஊர்வலத்தில் நான்குக்கு மேல் அனுமதியில்லை என்று ஏராளமான விதிகள் இப்போது அமலில் இருக்கின்றன. இவையெல்லாம் தேர்தலை சிறப்பாகவும், நடுநிலைமையோடும் நடத்துவதற்கு காரணமென்று பலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அரசியலே சாக்கடை என்று கருதுவதற்கு பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்தான் இதனை எந்தவித பரிசீலனையின்றி  போற்றுகிறது.
தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை, மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் மற்றும் பொதுவான அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது. அப்படி மக்கள் விலக விலக அரசு என்பது மேலும் பாசிசமயமாகுவதற்கு உதவியாக இருக்கும். ஆளும் வர்க்கம் தான் விரும்பும் எதனையும் மக்கள் எதிர்ப்பின்றி அல்லது அப்படி எதிர்ப்பு காட்டுவதற்கு வழியில்லாத நிலைமையினை உருவாக்கி சாதித்துக் கொள்ளும்.
கூர்ந்து கவனித்தீர்களென்றால் இந்த தேர்தல் கார்ப்பரேட் கட்சிகளின் நடவடிக்கைகளை மட்டும் ஊக்குவிப்பதை புரிந்து கொள்ளலாம். சோனியா, ராகுல், அத்வானி, ஜெயலலிதா போன்றோர் விமானத்தில், ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 14 இலட்சம் மட்டும் செலவு செய்யலாம் என்று கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் செலவுகளை மட்டும் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்காதாம். தொண்டர்களுக்கு பிரியாணி போடுவதை தடுத்து நிறுத்தி மாபெரும் ஜனநாயக நடவடிக்கை எடுக்கும் கமிஷன் இந்த ஹெலிகாப்டரை மட்டும் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் இரகசியம் என்ன?
அதே போல பெரிய கட்சிகள் ஆளுக்கொன்றோ இரண்டோ தொலைக்காட்சிகளை வைத்துக் கொண்டு செய்தி, விளம்பரம் என்ற முகாந்திரத்தில் பிரச்சாரம் செய்கின்றன. இதற்கான செலவை மதிப்பிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் அந்த கட்சிகளது வேட்பாளர்களின் கணக்கில் சரசாரியாக கழிக்க வேண்டியதுதானே? செய்வார்களா?
ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ஆனால் நடப்பு தேர்தலில் 230க்கும் மேற்பட்ட கோடிசுவர வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். கையில் செலவழிக்க வழியற்று பணத்தை சேர்த்திருக்கும் வர்க்கம் தேர்தலில் நின்றால் செலவழிக்காமல் என்ன செய்வான்?
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதற்காக அதிரடி ரெய்டுகளை செய்யும் கமிஷன் இந்த அக்கறையில் உண்மையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கும், அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகள் எதுவும் எந்த முதலாளிகளிடமும் நன்கொடை வாங்க கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாமே? டாடா, அம்பானி, பிர்லா, அம்பானி, பஜாஜ், மல்லையா, டி.வி.எஸ் என்று எல்லா முதலாளிகளிடமும் நன்கொடை வாங்கித்தான் காங், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன. இந்த சப்ளையை துண்டித்தால் அவர்கள் தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்க முடியாதில்லையா? ஏன் செய்யவில்லை?
ஆக ஒட்டுமொத்தமாக ஒன்று புரிகிறது. இந்த தேர்தலும், தேர்தல் கமிஷனும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களது நலனுக்காக இருக்கும் பெரிய கட்சிகளைத்தான் எல்லா சலுகைகளோடும் அனுமதிக்கிறது.
தற்போது ஸ்ரீரங்கத்தில் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்று ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏதோ இவர்களெல்லாம் மாபெரும் கிரிமினல்கள் போல அவர்களது பெயர்களையெல்லாம் பெற்றோர் பெயர்களோடு தினசரிகள் பிரசுரித்திருக்கின்றன. இவர்கள் மீது 171 இ எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு தண்டனை என்று எல்லா ஊடகங்களும் மக்களை பயமுறுத்துகின்றன. தேர்தலுக்கு வாக்களிப்பதையே அவமானமாக கருதும் மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கைகளை நெஞ்சார வரவேற்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்டுவதுதான் இந்த வழக்கின் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்றால் அதை மேடையிலேயே ஆதரித்து பேசுபவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் பல இடங்களில் பேசும் போது தி.மு.க காரன் காசு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது நம்ம காசு, வாக்கு மட்டும் எங்களுக்கு மறக்காமல் போடுங்கள்என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஊடகங்களில் பலரும் கூட இதை தெரிவித்திருக்கின்றனர். இப்படி ஆதாரப்பூர்வமாக காசு பெறுவதை ஆதரிக்கும் நபர்கள் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பணம் வாங்கியதும், வாக்களித்ததும் உண்மையென்றாலும் இரண்டுக்குமுள்ள தொடர்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.
அதை வைத்துப் பார்க்கும்போது வாக்காளர்கள் பணம் வாங்குவதை மட்டும் எப்படி நிரூபிப்பார்கள்? அதாவது ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார். அதில் பணம் வாங்குவதை வேண்டுமானால் நிரூபிக்க முடியும், ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? ஏனெனில் வாக்களிப்பது என்பது இரகசியமானது, அப்படி இரகசியமாக வாக்களிப்பதுதான் வாக்களிப்பவரின் ஜனநாயக உரிமை என்று வேறு பெருமை பேசுகிறார்கள். மேலும் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு மாறாக வேறு கட்சிக்கு கூட வாக்களிக்க முடியும், அதையும் ஏன் என்று கேட்க முடியாதல்லவா? அல்லது வாக்களித்த ஒவ்வொருவரையும் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? ஆக இவர்களது நோக்கம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதா, இல்லை பாமர மக்களை மிரட்டுவதா?
பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது. போகட்டும், பொறியியல் கல்லூரியில் மகனுக்கு சீட்டு வாங்க வேண்டுமென்று சில பல இலட்சங்களை வாரிக் கொடுப்பது மட்டும் சுயமரியாதையா? மகனை விடுங்கள் நாலைந்து வயது குழந்தைக்கு எல்.கே.ஜி சீட்டு வாங்குவதற்கு கூட சில பல ஆயிரங்களை எந்த எதிர்ப்புமின்றி வாரி இறைப்பது கூட சுயமரியாதைதானா? பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக சிலர் தெருவுக்கு வந்து போராடும்போது இவர்கள் அதில் சேர்ந்து குரலெழுப்புவதற்கு கூட பயப்படுகிறார்களே, இவர்களா ஏழை மக்களின் சுயமரியாதை குறித்து கவலைப்படுவது?
இன்னும் சிலர் வாக்களிப்பது புனிதமான ஜனநாயகக் கடமை என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அந்த புனிதத்தை கெடுக்கும் செயல் என்று கவலைப்படுகிறார்கள். ஆனானப்பட்ட வெங்கடாசலபதிக்கே ஸ்பெசல் தர்ஷன் என்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வைத்து அனுமதிக்கிறார்களே அதில் கெடாத புனிதமா? இல்லை நம்ம ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் கிண்டி கொடுக்கப்படும் யோக அல்வாவுக்காக பல ஆயிரங்களை கட்டணமாக வாங்குகிறார்களே, அது புனிதத்தை கெடுப்பதில்லையா? ஆக ஆன்மீக சரக்குகளே இப்படி விலை வைத்து விற்கப்படும்போது ஆப்ட்ரால் ஒரு வாக்கு அதுவும் எந்த பிரயோசனமும் இல்லாத சரக்கை விற்பதில் என்ன தவறு? இன்னும் கொஞ்சம் தேசபக்தி ரேஞ்சில் பார்த்தால் பாராளுமன்றத்திற்கே தெரியாமல் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரே மன்மோகன் சிங் அது இந்தியாவின் இறையாண்மை புனிதத்தை கற்பழிப்பேசெய்திருக்கிறதே?
இவர்களின் கவலை எல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் இல்லை. ஏழை மக்களின் மீது விலை வாசி உயர்வு, வேலையின்மை முதலான பிரச்சினைகளை தள்ளிவிடுவது போல இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு காரணம் அவர்களே என்ற மேட்டிமைத்த் திமிர்தான் இதில் வெளிப்படுகிறது.
நிலம் வைத்திருப்பவன் அதை விற்கிறான், பங்குகள் வைத்திருப்பவன் அதை விற்று இலாபம் பார்க்கிறான், அது போல விற்பதற்கு ஏதுமில்லாத ஏழைகள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்வதில் என்ன தவறு?
முதலில் இந்த பணம் பெறும் பிரச்சினையை கொஞ்சம் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம். எல்லா கட்சிகளும் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி விடக் காரணம் என்ன? அவையெல்லாம் பலரது வாழ்வில் ஏக்கப் பொருளாய் மட்டும் இருப்பது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், வேலை முதலான அனைத்திலும் அவர்களது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது உரிமையை பறித்து கொண்டவர்கள் அப்படி பறித்த உரிமையின் விளைவாக கிடைத்த சுருட்டலில் இருந்து சிலவற்றை கிள்ளிக் கொடுக்கிறார்கள். தமது உரிமைகள் பறிக்கப்பட்டதை உணராத மக்கள் அல்லது அப்படி உணர்ந்தும் அதற்கு தீர்வு தேட முடியாத நிலையிலிருக்கும் மக்கள்தான் தமது வாக்குகளை அளிப்பதற்கு சிலநூறு ரூபாய்களை வாங்குகிறார்கள்.
ஆக அந்த மக்களது பறிக்கப்படும் உரிமைகள் குறித்து  கவலைப்படாத எவரும் அவர்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்குவது குறித்து கேள்வி கேட்பதற்கு கூட தகுதியற்றவர்களே. ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள். ஆம். நாங்களும் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மட்டுமல்ல வாக்களிப்பதையே எதிர்த்து பிரச்சாரம் செய்கிறோம். இது வேறு, அது வேறு.
அடுத்து சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் கூட ஆளுக்கு நூறோ அல்லது இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் திரட்டப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஏழ்மைதான். இல்லையென்றால் வேகாத வெயிலில் மேக்கப் போட்ட ஜெயலலிதாவின் எழுதி வைக்கப்பட்ட உரையை யார் கேட்கப்போகிறார்கள்? முடிந்தால் தேர்தல்  கமிஷன் இதை தடுத்து பார்க்கட்டுமே? கூட்டம் கூட்டுவதற்கு யாரும் பணம் கொடுக்க கூடாது, வாகனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். ஏன்? கார்ப்பரேட் கட்சிகளின் அரசியல் ஷோக்களுக்கு இப்படித்தான் ஆள் பிடிக்கமுடியும், அப்படி கூட்டினால்தான் அவர்களது அரசியல் நடவடிக்கை வெளியுலகிற்கு தெரியுமென்பதால் அதை அனுமதிக்கிறார்கள்.
இதைத் தாண்டி இப்போது தேர்தல் கூட ஒரு திருவிழா என்ற தகுதியை இழந்து விட்டது. கட்சித் தொண்டர்களின் சுறுசுறுப்பான வேலைகளையும், தெருமுனைக்கூட்டம் துவங்கி பொதுக்கூட்டம் வரையிலும் திரளான மக்கள் பங்கேற்ப்பதையும் இப்போது பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்தல் என்பது வாக்களிப்பது என்பதோடு மட்டும் முடிந்து விடும். மற்ற விசயங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் என்ற நிலை தோன்றும். இதனால் ஏற்படும் இழப்பு என்ன?
இந்த போலி ஜனநாயக அரசியிலில் கூட மக்கள் இடம்பெற முடியாது என்ற நிலைமைதான் தோன்றும். அப்படி தோன்றும் பட்சத்தில் அரசு என்பது தனது பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பே இன்றி அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு வழியின்றி நிறைவேற்றும்.
இன்று தேர்தல் கமிஷனை எதிர்த்து சண்டாமாருதம் செய்யும் கருணாநிதிக்கு கூட கவலை இதுவல்ல. தனது கட்சியினர் திருமங்கலம் ஸ்டைலில் வேலை செய்ய முடியவில்லையே, அ.தி.மு.கவிற்கு மட்டும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதே என்பதுதான் அவரது கவலை. மக்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படுவது அவருக்கும் உடன்பாடனதுதான்.
சில அறிவாளிகள் 49ஓ குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். யாருக்கும் வாக்கு இல்லை என்பதை பதிவு செய்வதன் மூலம் தமது எதிர்ப்பை காட்டலாம் என்கின்றனர். வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.
தேர்தல் கமிஷனது நடவடிக்கைகள் மூலம் தேர்தல் சரியாக நடக்கப் போகிறது என்றோ, அதன் மூலம் தி.மு.கவா, இல்லை அ.தி.மு.கவா யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். அல்லது ஆர்வம் கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தல்மூலம் நாம் நமது அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதால் இதில் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதுதான் முக்கியமானது, கோபத்திற்குரியது.

கருத்துகள் இல்லை: