புதன், ஜனவரி 05, 2011

அலர் தூற்றல்

பண்டைய தமிழர்களின் அகவாழ்வில் தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே உருவான காதலை அறிந்த ஊரார் அதை பற்றி பேசுவது அலர் எனப்படும். அலர் தூற்றுதலால் காதலர்களின் களவு வெளிப்படும்.

காதல் என்றாலே அதை வரவேற்கின்ற பெற்றோர்களைக் காண முடியாது. ஊரார் ஏசுவர், உறவுகள் ஏளனம் செய்யும் அதையும் தாண்டி எங்கும் காதல் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே, வீட்டினுள்ளே, கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
பாடைக் கட்டி அதைகொள்ள வழிசெய்கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைத் தவறி இடர்எய்திக் கெடுகின்றாரே
- என்று வெகுண்டெழுந்தார் பாரதியார்.
காவியத்தில் காதலென்றால் கணிந்தோடும்
கண்ணிறைந்த காதலர்க்கு கண்ணீர்தான் முன் வழியும்
- என்று அழகாக குறிப்பிடுவார் கண்ணதாசன்.


வழிப்பறிக் கொள்ளையும், வரிப்புலியும் வழி மறிக்கும் வெட்கை நிறைந்த பாலை நிலத்தில் காலில் செருப்புக் கூட இல்லாமல் தான் தலைவநூடே உடன்போக்கு செல்லும் தலைவியை சங்க இலக்கியத்தில் வெள்ளி வீதியார் அழகாக படம் பிடித்துக் காட்டுவார்.

தன் காதல் நிறைவேறாததால் மடை ஏறி மடிந்த காளையர்கள் எத்தனைப் பேர். காதலுக்காக உயிர் விட்டவர்களையும், உடன் போக்கு செல்பவர்களையும் காலம் காலமாக பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். அன்று முதல் இன்று வரை அலர் தூற்றுதலும் நிற்கவில்லை, காதலும் நிற்கவில்லை.

அம்பிகாபதி-அமராவதி, காத்தவராயன்-ஆர்யமாலா, லைலா-மஜ்னு, அனார்க்கலி-சலீம் போன்ற காதலர்களின் அமர காவியங்களை மக்கள் படிக்கிறார்கள், திரைப்படங்களில் படமாக பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஆனால், அதே நிகழ்வு தங்கள் வீடுகளில் நடக்கிற பொழுது அவர்களை வெட்டி சாய்க்க கொடுவாள் தூக்குகிறார்கள். இன்றைக்கு கூட வடமாநிலங்களில் ஒரே இனத்தில் கூட காதல் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களைக் கொன்று விடுகிறார்கள் கேட்டால் கௌரவக்கொலையாம். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் கொண்டு வர பாராளுமன்றத்திலே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அலர் தூற்றுவதால் காதலை அடைக்கிவிடலாம் என்பது, நெய்யை ஊற்றி நெருப்பை அணைத்து விடுவதற்கு சமம் என்கிறார் வள்ளுவர். கால்லி ஓர் நாள் காதலனை சந்தித்துவிட்டால் அதையே அவ்வூரார் பேசி பேசி காதலை மறக்க முடியாமல் செய்துவிடுவார்கள்.



சாதிக்கட்டுப்பாடுகளையும், மதக்கட்டுப்பாடுகளையும் மீறியக் காதல்கள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதை நாள்தோறும் செய்தித்தாள்களில் பார்த்து வேதனை அடைந்துக் கொண்டு தானே இருக்கிறோம். சாதி,மதங்களைக் கடந்து காதல் திருமணங்கள் நடக்க வேண்டும். பாரதிதாசன் சொல்வது போல்,
காதல் செய்வீர் காதல் செய்வீர்
சாதி மதங்கள் சாயவே காதல் செய்வீர்
- என்று. வீதி நாடகக் கலைஞர் பிரளயன் அவர்கள் ஒரு பெண் தன் காதலையும், காதலனையும் எண்ணி வேதையோடு பாடுவதாக ஓர் இடத்தில் கூறுவார்,
சும்மா கெடந்த போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ .. ஏது செய்ய போறனோ
நம் கத்திய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க

சாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவேன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் ..
வாக்க பட காத்திருக்கேன் ..
- என்று ஒரு பெண் தான் காதலித்தவனையே கரம் பிடிக்க துடிப்பதாக அழகாக கூறி இருப்பார். 
கவிஞர் அறிவுமதி ஓர் இடத்தில் கூறுவார்,
என்னை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது 
அவனையும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது 
ஆனால் 
எங்களைத்தான் யாருக்கும் பிடிக்கவில்லை
- என்று. காதலை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு விசைக்கும் அதற்கான எதிர் விசை விசை உண்டு இது நியூட்டனின் விதி. இது காதலர்களுக்கும் பொருந்தும். காதலர்களை பெற்றோர்கள் அதட்டினாலோ, அடக்கினாலோ அவர்கள் காதலை என்றும் அழிக்க முடியாதது. அடிக்கு முறையால் அடைக்க பட்ட காதல்கள் வரலாற்றுச் சரித்திரமாகிறது.
எனவே,
காதல் செய்வீர் !! காதல் செய்வீர் !!


கருத்துகள் இல்லை: