வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா? ஒருவேளை இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்றா? அல்லது சினிமாக்களில் காட்டப்படுவது போன்றா?
இதுப்போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் அவ்வப்போது எழுவதுண்டு. இந்த வாரம் அது கொஞ்சம் சூடுப்பிடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகளின் பதில் – யெஸ்!
வேற்றுலகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. விண்வெளியில் இருந்து வரும் ஒவ்வொரு அபூர்வமான சமிக்ஞைகளும் எங்களுக்கு ஒரு வேற்றுலக நாகரீகம் இருக்கும் என ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சமிக்ஞைகளை கேட்கும் போது இந்த பரந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் நாம் தனியாக இல்லை என எண்ண தோன்றுகிறது என்று சொல்லும் விஞ்ஞானிகள், வேற்றுலகவாசிகளை நேரில் பார்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்க கூடும் என்று ஆச்சரியத்தை கூட்டுகிறார்கள்.
நவீன அறிவியல், நிரூபணங்கள் அற்ற அனுமானங்களை, தொன்மங்களை முற்றாக நிராகரிக்கிறது. ஆனால் தொன்மம் என்பதே அறிவியலின் தாய் தான். தொன்மங்களில் இருந்துதான் அறிவியல் பிறக்கிறது.
நீண்ட நெடிய காலம் தொட்டே வேற்றுலகவாசிகள் குறித்தான தொன்ம உரையாடல்கள் மக்களிடையே தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
வானவர்கள்,தேவர்கள்,காந்தவர்கள் என்றெல்லாம் நாம் விளித்து பேசுவது சற்றேறக்குறைய வேற்றுலகவாசிகளை தான். அவர்களை வம்பர் என்கிறது தமிழ்.
*அந்தப் பாம்பு உருளை வடிவில் மிக நீண்டதாக தடித்ததாக இருந்தது. அது விரும்பும் வகையிலெல்லாம் எந்த திசையிலும் நொடிப்பொழுதிம் திரும்பும் வல்லமை கொண்டது. அது மேல் நோக்கி தரையிலிருந்து கிளம்பும் பொழுது அதன் உடம்பின் பின்புறத்தில் இருந்து மிகப்பெரும் தீப்பிழம்புகள் புகை மூட்டத்துடன் வெளிவந்தது. வெளி வந்த வேகத்தில் மேல்நோக்கி சீறிப் பாய்ந்தது.*
இதுவொரு கிரேக்கக் கதையில் வரும் காட்சி.
இது மனிதர்கள் தற்காலத்தில் பயன்படுத்தும் ஒரு ராக்கெட்டை விவரிப்பது போல் உள்ளது. அப்போதைய ஆதிமனிதன் இலை தழைகளோடு நாகரீகமின்றி திரிந்ததால் அதை ராக்கெட் என்று சொல்லத் தெரியாமல் பாம்பு என்று குறிப்பிட்டதாக வேற்றுலககவாசிகள் கோட்பாட்டின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆச்சர்யமூட்டும் கதையொன்று இருக்கிறது..
காகுடுமி என்ற அரசன், தன் மகள் ரேவதிக்கு மணம் முடிக்க நினைக்கிறான். இந்த உலகத்தில் அவள் அழகுக்கு ஈடானவள் யாரும் இல்லை எனக்கருதி பிரம்ம லோகம் செல்கிறான். அங்கே பிரம்மா கொஞ்சம் பிஸி. சற்று நேரம் காத்துவிட்டு உள்ளே செல்கிறார்கள் அரசனும் மகளும்.
உள்ளே பிரம்மாவிடம் விஷயத்தை சொன்னதும் அவர் கெக்கே பிக்கேவென்று சிரிக்கிறார். ஏன் என்று கேட்க ‘நீங்கள் இங்கே காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 சதுர்யுகங்கள் முடிந்துவிட்டன.
உன் மனைவி, மக்கள், உறவினர்கள், அமைச்சர்கள், வேலையாட்கள் எல்லோரும் காலத்தின் சுழற்சியால் மாய்ந்துவிட்டனர்’ என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார்.
ஒவ்வொரு உலகங்களின் காலமும் ஒவ்வொரு விதமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்கிற அறிவியலை இந்த தொன்ம கதை கோடிட்டு காட்டுகிறது.
*N = R* • fp • ne • fl • fi • fc • L ...*
என்ன இது என்று குழப்பமாக இருக்கிறதா? நாம் வாழும் இந்தப் பால்வெளியில் நம்மைப் போலவே வேறு ஒரு Aliens தோன்றியிருக்குமா எனக் கண்டறிவதற்கான கணிதச் சமன்பாடு இது.
Drake Equation என அழைக்கப்படுகிறது.
இதில் இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் பால் வெளியில் தோன்றும் நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களில் உயிர் வாழ்வதற்கான தன்மைகள் எவ்வளவு இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.
துல்லியமாக இத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன, இத்தனை கோள்கள் இருக்கின்றன என நம்மால் கணக்கிட முடிந்தால், நம் பால்வெளியில் வேறு ஒரு நாகரிகம் இருக்கிறதா இல்லையா என நம்மால் கூறி விட முடியும்.
ஆனால், இவற்றில் ஒன்றிற்குக்கூட நமக்கு விடை தெரியாது. ஆனால், ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகையைப் போட்டு இத்தனை நாகரிகங்கள் தோன்றியிருக்கலாம் எனத் தோராயமாகக் கூற முடியும்.
அதன்படி பால்வெளியில் மட்டும் 1000-ல் இருந்து 100,000,000 நாகரிகங்கள் அதாவது வேற்றுலக வாசிகள் வரை தோன்றியிருக்கலாம் என்று விடையளிக்கிறது இந்தச் சமன்பாடு.
ஆக எங்கேயோ நாம் அவர்களை கோட்டை விடுகிறோம்.
நாம் அவர்களை சரியாகத் தேடவில்லை, அவர்கள் நம்மைவிட தொலைதூரத்தில் இருக்கிறார்கள், அவர்களின் செய்தி நம்மை வந்து அடையாது அல்லது அடையவில்லை.
அவர்கள் நமது செய்திகளை கேட்க மட்டுமே விரும்புகிறார்கள். அவர்கள் நம்மை கண்காணிக்க மட்டும் செய்கிறார்கள். பூமியை ஜூராசிக் பார்க் போன்றே பாவிக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் சொல்வது போன்று இன்னும் எதிர்வரும் காலங்களில் aliens மனிதர்கள் சந்திப்பு நிகழுமானால்,
கடவுள் என்னும் நம்பிக்கை நிச்சயமாய் வீழ்ச்சியடையும். பல அறிவியல் குறித்தும் பேரண்டம் பற்றியும் நம்மிடையே உள்ள கருதுகோள்கள் கூட வீழலாம். உச்சம் என நாம் எண்ணும் ஊர்திகள், வானூர்திகள், ஏவு ஊர்திகள், விண்கலங்களின் வேகம் மேம்படலாம்.
நமது உடல் உட்பட , நாம் திடமென நம்பும் பலவும் வெறும் அணுக்களாலானதை கண்களால் காண கிடைக்கலாம், நம் உயிர் பற்றிய நம்பிக்கைகள் உடையலாம். துகள் வடிவு மற்றும் அலை வடிவுகளுக்கிடையே எந்த பொருளையும் மாற்ற இயலலாம்.
காலம், இடம் பற்றிய கற்பிதங்கள் மாறலாம் அல்லது வீழலாம். மற்ற உலகங்களின் இருப்பு, தொலைவு, அவற்றின் இருத்தலுக்கான காரணிகள் நாம் கணக்கிட்டதை விட மாறுப்பட்டதாயிருக்கலாம்.
இறுதியாக, நம் மரணம் பற்றிய நம்பிக்கைகளும் கூட வீழலாம். பிறவிகளை ஒழித்து தெய்வ நிலை அடைந்து ஒளி உடலை பெறும் கல்வியை கற்க போகும் காலம் வரலாம்.
நான் ஒரு கருதுகோளை முன்வைக்கின்றேன். அல்லது இந்த கருதுகோளோடு உடன்படுகிறேன். அதாவது..
பூமியே அவர்களுக்கு ஒரு மரபணு ஆய்வுக்கூடம் தான். இங்கு அவர்கள் பலவித பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றனர்.
பல்வேறு வகையான மரபணுக்களோடு, தங்களது மரபணுக்களை இணைத்து உருவாக்கிய உயிர்களை பெருக்கியும் அழித்தும், பின்னர் தன்னைப் போலவே மனிதர்களை படைத்து அந்த மனிதர்களுடன் அவர்கள் நிகழ்த்திய உடல் சேர்க்கை காரணமாக புதிய கலப்பு மனித இனம் உருவானது. அந்த மரபினர் தான் மனிதர்கள்.
படைத்தவர்களே மனித இனத்தை
அழிக்க முயன்ற போது, அதில் ஒரு பிரிவினர் அந்த அழிவில் இருந்து மனிதர்களை காப்பாற்ற, அவனுக்கு அறிவியலை சொல்லிக் கொடுக்க, அவனை வழிநடத்த பூமியிலேயே தங்கி விட்டனர், மனிதனோடு தங்கிய வேற்றுலக வாசிகள் வேறு எவருமில்லை ; நாகர்கள் !
*சமரன்*
#aliens|#naga|#nasa|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக