புதன், செப்டம்பர் 03, 2014

கடவுளென்றான விசித்திரமான சிற்பங்கள்






அரண்மனையை விட்டுக் கிளம்புகிறார் புத்தர். கிளம்பும்போது, தனது குழந்தையைத் திரும்பவும் ஒரு முறை, தொட்டுப் பார்க்க விரும்பித் திரும்ப வருகிறார், அப்போது யசோதாவின் புடவை விலகியிருக்கின்றது. அதைக் கண்டதும், குழந்தையிடம் விடைபெறும் எண்ணத்தை மட்டுமல்ல துறவற சிந்தனையையே மாற்றிவிடுகின்றார். அவ்வளவு வலிமை படைத்ததாம்  காமம்!

"ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்.
அதுபோல் தான் காமமும், காமம் கூடவே கூடாது என்பவர்கள்தான் மற்றவர்களை விட அதிகமாக காமத்தை பற்றிய நினைவில் இருப்பார்கள், ஒருநாள் அவர்களால் காமத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றால், உடனே உள்ளே அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் காமம் வெளிவந்துவிடும், அதனாலேயே சதா காமத்தை அடக்குவதை பற்றியும் அதுக்கு எதிராக கருத்துக்களை சொல்லியும், அந்த எண்ணத்தை அழுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தன்னை மறந்த கணம் உச்சநிலையில் மட்டுமே ஒருவருக்கு கிடைக்கிறது. அந்த நான்மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம், உடல்களின் சங்கமத்தின்போது ஒரே ஒரு நிமிடம்தான் நீடிக்கிறது.  அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிடத்தின் மேல் உள்ள அளப்பறியா ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறதுஎன்கிறார் ஓஷோ


காமம் பரவசத்தின் முதல் படி. நான் என்ற தன் முனைப்புகள் அறுந்து போகிற அழகிய தருணம் அது. அனுபவிக்க வேண்டிய நிலை.  உடலில் இருக்கிற ஒரு அற்புதமான உணர்வு. அதை நெறிப் படுத்திக் கொள்ளவேண்டும். காமம் என்ற சொல் அசிங்கம் இல்லை. ஆபாசம் இல்லை. பார்வதிக்கு கூட காமக்கோட்டி என்று ஒரு பெயர் உண்டாம். காஞ்சிபுரத்திற்கு இன்னொரு பெயர் இருந்திருக்கிறது.. அது காமகோட்டம்.

ஆக காமம் என்ற அந்த விஷியத்தை மிக மரியாதையோடு அணுகியவர்கள் நம் முன்னோர்கள். கோயிலுக்குள் நுழையும் உணர்வுவோடுதான் பள்ளியறைக்குள் அவர்கள் சென்றார்கள். காமத்தை அர்ச்சிக்க வேண்டும், ஆராதிக்கவேண்டும், வணங்குதல் வேண்டும், தொழுதல் வேண்டும்,


அதற்கான முதல் நிலையாகதான் பாலியல் உறுப்புகளை ஆதி மனிதன் வழிப்பட்டான். அந்தக் காலத்து மக்கள், பாலியலை ஒரு முக்கியமான சமூகக் கடமையாக் கருதினார்கள். இனப்பெருக்கத்திற்கு காரணமான ஆண்குறி, பெண் குறிகள் தெய்வீக சக்தி பொருந்தியது என்று நம்பினார்கள்.  மேலும் மனித இனங்கள் காட்டுவாசிகளாக வாழ்ந்த காலங்களில், இயற்கை அழிவுகள், பிற விலங்குகளால் அல்லது போர்களில் கொல்லப்படுதல், போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் போராட்டங்களினால், பெருமளவு மனித உயிர்கள் இழக்கப் பட்டன. அந்த இழப்பை ஈடுசெய்வதற்காக, பெருமளவில்  இனப்பெருக்கம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தனர், ஆகவே பாலியல் உறுப்புகளை வணங்கினர். ஆண் பெண் சங்கமம் கடவுளாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆண் பெண் குறிகள் கடவுள்கள் என்று ஆக்கப்பட்டன. அந்த பாலியல் குறிகளை குறிப்பாக பிறப்புறுப்புகளை கடவுளாக வழிபடும் நம்பிக்கை, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் இருந்துள்ளது.


பின்னர் மெல்ல மெல்ல ஆண்குறியை மட்டுமே  கடவுளாக வழிபடும் மத நம்பிக்கையாக ஆதிமனிதனின் வழிப்பாட்டு முறை சுருங்கி போனதன் தொடக்கமே ஆணாதிக்க சமுதாயம் உருவாவதற்கு வழிவகுத்தது என்கிறனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்து என்சைக்ளோபீடியா என்ற நூலில் பேரா. ராஜ்பாலி பாண்டே

``வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குப் பாகத்தில் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்பட) பெண் குறி வழிபாடு வழக்கத்தில் இருந்தது. பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம் உலகம் முழுவதுமே இருந்தது. அவற்றிலும் ஆண் குறி வழி பாடுதான் குறிப்பிடத்தக்க அளவில் பரவியிருந்தது.பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது. என்று குறிப்பிடுகிறார். அசாமில் உள்ள காமாக்யா கோயிலில்  பெண்குறியை தான் வணங்கி வருகிறார்கள்.
இன்றைக்கும் பிறந்த குழந்தைகளின் உறுப்புகளை கொஞ்சி மகிழ்வதும் கூட அந்த தொடக்கத்தின் நீட்சியாகத்தான் இருக்கமுடியும்.

ஆதி காலமனிதன் வழிபாட்டு முறை லிங்க வடிவிலே இருந்திருக்கிறது. கொஞ்சம் மண்ணை ஈரபடுத்தி அதை லிங்கமாக வடிவமைத்தே முதலில் வழிபாட்டு முறை ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது தொல்லியல் சான்றுகள். கல்லில் பாலியல் உறுப்புகளின் வடிவத்தை வரைய தெரியாத அல்லது செதுக்க தெரியாத ஆதிகால வழிபாட்டில் உருவாக்க பட்டவைதான் இந்த லிங்க வழிபாடு. இப்போது கூட கிராமங்களில் நடக்கும் குலதெய்வ வழிபாடுகளில் இஷ்ட தெய்வத்தை மக்கள் லிங்க வடிவில் வைத்தே வழிபடுகிறார்கள்.


இப்படி உலகெங்கும் கடவுள் வழிப்பாட்டின் படிநிலையின் தொடக்கம் இதுதான். கிறிஸ்தவர்களும் ஒரு காலத்தில் ஆண்குறித் தெய்வங்களைவழிபட்டு வந்தனர். இவ்வளவு ஏன் ஏசு, மேரி முதலியோர் சிற்பங்கள் நிர்வாணமாகதான் இருந்தது ஒரு கட்டத்தில் அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மாற்றமுடியும் என்ற நிலையில் உள்ளவை மாற்றப்பட்டன. அதாவது, உடைகள் உடுத்தியிருந்தது மாதிரி மாற்றி செதுக்கப்பட்டன; நிர்வாண ஓவியங்களில் அவற்றை மறைத்து தீட்டப்பட்டன.


மத்திய கிழக்கில் யூத, கிறிஸ்தவ மதங்கள் தோன்றுவதற்கு முன்னர், விவிலிய நூலில் "பெத்தெல்" என்ற கல்லை கடவுளாக வழிபடும் முறை இருந்தது பற்றி, விவிலிய நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. யாகோபு கடவுளாக நம்பிய கல்லுக்கு, எண்ணை வார்த்து வழிபட்டதாக கூறுகின்றது. அர்ச்சர்கர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை, இன்றைக்கும் நீங்கள் சிவன் கோயில்களில் காணலாம். பண்டைய காலத்து மக்கள், தெய்வச் சிலைக்கு பாலால் மட்டும் அபிஷேகம் செய்யவில்லை. ஆடு, கோழி போன்றவற்றை வெட்டி, அவற்றின் இரத்தத்தை கல்லின் மேல் ஊற்றியும் அபிஷேகம் செய்தனர். மிருகங்களை பலிகொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் இந்தியாவிலும், இலங்கையிலும் "சிறுதெய்வ வழிபாடு", அல்லது "நாட்டார் வழிபாடு"  என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவில் வாழ்ந்த மக்களும், தெய்வமாக கருதி வழிபட்ட கல்லுக்கு, மிருகங்களை பலிகொடுத்து வந்தனர். இன்றைய அரேபியரின் மூதாதையரான நபெத்தியர்களும், அது போன்ற வழிபாட்டை கடைப்பிடித்து வந்தனர். இப்படி கிருத்துவ , இஸ்லாமிய வழிபாடுகளில் மட்டுமின்றி உலக மதங்களால் ஒரு காலத்தில் பூஜிக்கப்பட்ட  கற்களுக்கு பின்னால் குறிவழிப்பாட்டின் கதை ஒன்று இருக்கிறது. ரிக் வேதத்தில் வரும் சிசினதேவர்கள் என்ற சொல்லுக்குக் குறி வழிபாடு செய்வோர் எனப் பொருள்கூட  உண்டு.  அது சிவலிங்க வழிபாடு செய்யும் தென்னாட்டவரைக் குறிக்கிறது.


தொன்மை காலங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வரையப்பட்ட ஓவியங்களில் எல்லாம், ஆண் தெய்வங்கள், ஆண் குறியுடன் காட்சி தந்தன. அவற்றை இன்று, இத்தாலிக்கும், கிரேக்கத்திற்கும் சுற்றுலா தளங்களில் காட்சி படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இத்தாலியில் இருந்து  டெக்ளி அகஸ்தாலிக்கு செல்லும் வழியில் பாம்பேயில்(Pompei, via Deglki Augustali) உள்ள ஒருவீட்டின் சுவரில் ஆண்குறி சிற்பம் காணப்படுகிறது. இது எதோ ஒரு காக்கும் சின்னம் மாதிரி சதுரம், செவ்வகம் மற்ற வீடு போன்ற வடிவங்களின் நடுவே காணப்படுகின்றது. ஒரு ஆண்குறி-இரு விரைகளுடன் “Hic habitat felicitas” என்ற சொற்களுடன் காணப்படுகிறது


ஐரோப்பாக் கண்டத்தில் முதலாவது வெள்ளையின நாகரீகம் தோன்றிய பல்கேரியாவில், கி.மு. 4000 வருடங்களுக்கு முந்திய புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அங்கே, ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்திருந்த மதகுரு ஒருவரின் எலும்புக்கூடும்  கண்டெடுக்கப் பட்டது. பசுபிக் சமுத்திரத் தீவான, பபுவா நியூ கினியாவில், ஆண்குறிக்கு கவசம் அணியும் வழக்கமுடைய பழங்குடி இனம் ஒன்று வாழ்கின்றது. ஆனால், பண்டைய பல்கேரியாவில், சக்தி வாய்ந்த மதத் தலைவர்கள், தமது மேலாண்மையை காட்டிக் கொள்வதற்காக, ஆண்குறிக்கு தங்கக் கவசம் அணிந்து வந்தனர்.

பாம்பேயில் அகழ்வாய்வின் போது அத்தகைய பல சிற்பங்கள் உடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆண்குறிகள் இரண்டு விரைகள் கூடிய சிற்பங்கள் மேடைமீது பிரதானமாக வைக்கப்பட்டிருந்தன. டெலோஸ் என்ற இடத்தில் உடைந்த நிலையில் இருந்த அவை விசித்திரமான சிற்பங்கள்எனக் குறிப்பிடப் பட்டன
லிங்க வழிபாடும் யோனி வழிபாடும் தொன்மை தமிழர் மரபில் சர்வ சாதாரணம். ஆண் பெண் உறுப்புகள் தெய்வமாக பார்க்கப்பட்டது. காமமும் காம உணர்வும் புனிதமாகக் கருதப்பட்டது. ஆக காமத்தில் இருந்துதான் கடவுள்கள் தோன்றினர். நிர்வாண உலகில், ஆண்குறி-பெண்குறி அவர்களது நினைவுகளை ஆக்கரமித்து, சித்திரங்களாக, சிற்பங்களாக மாறியது வியப்பில்லை. இந்த சித்திரங்கள் தான் காலபோக்கில் கடவுளர்களின் சிலைகளாக மாறிப்போனதில் வியப்பொன்றும் இல்லை.


தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் சிவ வழிபாடு, ஆதி தமிழர்களுக்கு உரிய சிறப்பம்சம் என்றும் தமிழ் உலகு கொண்டாடி வருகிறதே அப்படியானால் உலகெங்கும் விரவி ஆதித் தமிழர்கள் வாழ்ந்த நாடுகளிலும் சிவ வழிபாடு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆச்சரியப் படத் தக்கவாறு இருக்கிறது!  பல அரபு நாடுகளில் சிவாஎன்ற பெயரிலான இடங்கள் பலவுள்ளன. எகிப்தில் உள்ள சிவாபாலைவனச் சோலையில் வருங்காலத்தில் நடக்கப் போவதை அறிவிக்கும் தேவதை இருப்பதாக நம்பப்பட்டது.
இன்றைய இஸ்ரேலில் சிவதா (Shivta), டெல் சிவா (Tel Sheva) என்ற பெயரிலான இடங்கள் நாகேவ் பாலைவனப் பிரதேசத்தில் உள்ளன. பண்டைய நாகாரீக காலத்திய நபெத்திய மக்கள் கட்டிய நகரங்கள் அவை.  ஹீபுரு மொழியில், ஆனி மாதத்திற்கு சிவன் என்று பெயர்!  அரேபியரின் பூர்வீகம், ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னமே நாகரிக வளர்ச்சி கண்ட யேமனில் உள்ளது. அன்று அது, ஷீபா நாகரீகம் என்று அழைக்கப் பட்டது. ஷீபாஎன்பது ஆங்கில உச்சரிப்பு. ஹீபுரு மொழியில், “ஷ்வா”. அரபு மொழியில் சபா” (Saba). சபா என்ற சொல் மருவி, தமிழில் சைவாஎன்று மாறியது.   ”B” உச்சரிப்பு கொண்ட சொற்கள், தமிழில் என்று மாறுவது இயல்பே.


சிவலிங்க வழிபாடு, “இந்தியாவை சேர்ந்த இந்துக்களுக்கே உரியது”  என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். சிவலிங்கத்தை கடவுளாக காணும் இந்துக்களும், அதனை ஆண்குறித் தெய்வம்என்று பரிகாசம் செய்யும் பிற மதத்தவரும் ஒரு உண்மையை அறியாமல் இருக்கின்றனர். அது ஒரு மதத்தின்  நம்பிக்கை என்பதற்கு அப்பால், ஆதி கால ஆப்பிரிக்க-திராவிடர்களின் பிரபஞ்சம் பற்றிய, இனப்பெருக்கம் பற்றிய, படைத்தல் குறித்த அறிவியலை எடுத்துக் காட்டுகின்றது என்கின்றனர் மேனாட்டு வாழ்வியல் அறிஞர்கள்.


டின்டின்னாபுலா” (tintinnanabula) என்ற உலோகத்தால் செய்யப்பட்ட தொங்கும் மணிகள் அப்பட்டமாக ஆண்குறியை பிரதானமாக வைத்து வார்க்கப்பட்டது தெரிகின்றது. ஒரு மனித ஒருவமே தொங்கவிடப்பட்டு, அவனது ஆண்குறி பெரிதாக செய்யப்பட்டு அதிலிருந்து மணிகள் தொங்கவிடப்பட்ட நிலை அது. கடவுள்கள், தெய்வங்கள் தான் என்றில்லை இந்த உலகத்தில் மனிதனால் படைக்கப்பட்டிருக்கும் அத்துனை பொருட்கள் படைப்புகள் ஒவ்வொன்றிலும்  அவனை ஆட்கொண்ட ஆண்-பெண் குறிகளின் வடிவங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒருவேளை இது அவனை அறியாமல் நிகழ்ந்த நிகழ்வாக கூட இருக்கலாம்.


குறி வழிபாடு மிகப் பழைய காலத்தில், உலகின் எல்லா நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. குறிப்பாக மெக்சிகோ, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் லிங்கங்கள் புதைபொருள்களாக மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றைச் சைவ சமயத்தைச் சேர்ந்ததாகக் கருதக் கூடாது. இது பற்றி ஆராய்ச்சி செய்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஹாட்டர் எம் வெஸ்ட்ராப்

விதையுள் அடங்கியுள்ள சக்தியும் மண்ணின் சக்தியும் உற்பத்தியின் இரு காரணிகளாக மனித மனத்தை முற்காலத்தில் கவர்ந்திருக்க வேண்டும். பிராணிகளின் உற்பத்தியிலும் இதே போல ஒன்று ஆணும், மற்றது பெண்ணுமாக இரட்டைக் காரணி அமைப்பு இருப்பதை அவர்கள் ஒப்பிட்டிருக்க வேண்டும்.  இந்த அறிவு பல நாட்டு மக்களுக்கும் பிறரிடமிருந்து  கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் தானே தோன்றியது என்பதில் ஐயம் இல்லை. இதுதான் சுயம்பு லிங்கம். ஏனெனில் இயற்கையின் ஒரு பொருளோ செயல்பாடோ எல்லா இன மக்களுக்கும் அவர்கள் எவ்வளவு தொலைவில் பிரிந்திருந்தாலும் ஒரே மாதிரியான எண்ணத்தைத் தோற்றுவிக்குமாறு மனித மனம் அமைந்துள்ளது. குறிகள் இயற்கையின் உற்பத்திச் சக்தியின் அடையாளமாகக் கருதப்பட்டதால் அவை எல்லா நாடுகளிலும் மிக மரியாதையாக வணங்கப்பட்டன.என்கிறார்.

சரி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்ற பெருமை கொண்டது.  எது தெரியுமா?. பிட்யூட்டரி சுரப்பி. இந்த சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று அறிவியலோடு சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு போவீர்கள். காமத்தின் வழியே கடவுளை காண்பது ஒருபுறம் இருக்கட்டும். கடவுளே காமம் பெற்ற பிள்ளைதான் என்பதை உணரும் காலம் இனி வரும். ஆக கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்ற அர்த்தமற்ற விவாதங்கள் இனி தேவைஇல்லை .

கருத்துகள் இல்லை: