வியாழன், ஆகஸ்ட் 15, 2013

"இந்தியா இஸ் மை கன்ட்ரி"




நாளை சுதந்திர தினம்...
சோகையாய் பறந்தபடி கடைக்கு கடை விற்பனைக்கு வருகிறது எந்த தேசத்தின் கொடி. சரியாக சொல்ல நினைவில்லை ,   இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களில் இருந்து விலகி வெளியில் வந்த அந்த தருணம் குறித்து.  இந்த சமூகம் எனக்கு கற்பித்தவைகளால்  சுதந்திர தின கொண்டாட்டங்களில் நாட்டமில்லாமலே போனது. தோழர் Sivanandam Arasan குறிப்பொன்று  இன்பாக்ஸ்சில் எனக்காக காத்திருந்தது. , இதில் நீங்கள் முரண்படலாம்.   நான் உணர்வோடு உடன்படுகிறேன்.


Arivazhagan Kaivalyam :

நேற்றிரவு ஒன்பது மணி இருக்கலாம், நிறைமொழி மெல்ல அருகில் வந்து "அப்பா, இன்டிபென்டன்ஸ் டே, பத்தி ஸ்கூலில் பேச வேண்டும், ஏதாவது சொல்லிக் கொடுக்கிறீர்களா?".

பகீரென்றது எனக்கு, இந்திய தேசத்தைa மகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும், பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி ஹிந்தியர்கள் நடத்துகிற ஒரு மாபெரும் முதலாளிகள் முன்னேற்ற நாடு குறித்து பொய்யுரைக்க வேண்டும்.

காஷ்மீர் தேசிய இன மக்களின் மீது அது நடத்துகிற வெறியாட்டம் குறித்து மூடி மறைத்து இந்தியா என் தாய் நாடு என்று பொய் சொல்ல வேண்டும். பல்வேறு தேசியப் பழங்குடி இனங்களின் அவமதிக்கும் நீதிமன்றங்கள் குறித்து மூடி மறைத்து இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று புளுக வேண்டும்,

லட்சக்கணக்கில் அழிந்து மட்கிப் போன எனது உறவுகளின் குருதியை மறைத்து பக்ஷேக்களுக்கு விரிக்கப்படும் சிவப்புக் கம்பளம் தான் நமது இறையாண்மையின் அடையாளம் என்று நாக்கூசாமல் சொல்ல வேண்டும்.

அம்பானிகளுக்கும், ஹிந்துஜாக்களுக்கும், டாட்டக்களுக்கும் வாகாக வளைக்கப்படும் சட்டங்களும், காலம் காலமாக ஊரகப் பகுதிகளில் அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் கூட நாயினும் கேவலமாக நடத்தப்படுகிற ஒடுக்கப்பட்ட தலித் குடிமகன் குறித்து ஏதும் பேசாமல் 2020 இல் வல்லரசு என்று வாய்கிழியக் கத்த வேண்டும்.
பள்ளிகள் இந்த தேசம் குறித்த பெருமைகளை அள்ளி விட்டு, அடிமைத்தளை மனப்போக்கை வளர்க்கிறார்கள், மூவர்ணக் கொடியை ஏற்றி மலர் தூவி அவர்களும் சிலிர்த்துக் குழந்தைகளையும் சிலிர்க்க வைக்கிறார்கள்.

என்ன செய்வதென்று புரியாமல் "இந்தியா இஸ் மை கன்ட்ரி" என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். "சூரியன் மேற்கில் உதிக்கும்" என்று சொல்வதைப் போல இருந்தது.
சிரித்து விளையாடும் வயதில் இதே இந்தியா தனது வக்கிரத்தால் அழித்தொழித்த எமது குழந்தைகளின் புன்சிரிப்பு நினைவில் வந்து உறுத்தியது.

அம்மா, இந்தியா நமது நாடில்லை, "நாம் தமிழர்கள், உலகம் முழுதும் நமது தாய்நாடுதான், தமிழ் தான் நமது தேசிய மொழி" என்று நிறைமொழியிடம் சொன்னேன்.
"ஏங்க, பிள்ள பள்ளிகூடத்துல போயி தமிழ்நாடு இஸ் மை கன்ட்ரின்னா" சொல்ல முடியும், வெரட்டி விட்டுருவாங்க" என்று மனைவி சொல்வதில் நியாயம் இருந்தது.

நாம் தமிழர்கள், உலகம் முழுதும் நமது தாய்நாடு தான் என்று நான் சொன்ன சொற்கள் வீட்டுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது,
ஆம், உலகம் முழுதும் நம் தாய்நாடுதான், ஆனால் உள்ளூரில் மட்டும் நாம் காலம் காலமாய் விடுதலை வீரர்கள், புரட்சிக்காரர்கள், போராளிகள், தீண்டத்தகாதவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பறையர்கள், பள்ளர்கள், சக்கிலியர்கள், சேரிக்காரர்கள், தீட்டுக்காரர்கள்.
ஊருக்குள் ஒய்யாரமாய் ஓடும் தேரோ வீதிக்குள் வராது, ஊர்க்குளத்தில் நீர் குடிக்கவும், பிணங்களை எரிக்கவும் காலம் காலமாய் குடியானவர்களோடு மல்லுக்கு நிற்க வேண்டும்.

நல்ல நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு அவமானத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியே குந்தியிருக்க வேண்டும்.
நான் தமிழன் என்கிற பொய்ப்பிம்பமும் நெடுநாளைக்கு வராது போலிருந்தது, அது இந்திய தேசியமாயினும், தமிழ் தேசியமாயினும் " சேரிக்காரனாகிய, பறையனும், பள்ளனும், சக்கிலியனும்" நாடுகளுக்கு அப்பாற்பட்ட அடிமையாகவே இருக்க வேண்டியிருக்கிறது.

இப்போது நிறைமொழிக்கு அம்மா சொல்லிக் கொடுக்கத் துவங்கி இருந்தார்கள், "இந்தியா இஸ் மை கன்ட்ரி, ஆல் இண்டியன்ஸ் ஆர் மை சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்............"

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, "நான் யார்?" என்கிற கேள்வி ஒரு வெறி கொண்ட நாயைப் போலத் துரத்தத் துவங்கியது. முதலில் இந்தியனாக இருந்தேன், பிறகு தமிழனாக மாறினேன், இப்போது தமிழனாக இருப்பதிலும் பெரிய மாற்றம் இல்லை என்றே தோன்றியது.
"தேசப்பற்றை ஒரு முதிர்வற்ற குழந்தைத்தனமான வியாதி" என்று நெடுங்காலத்துக்கு முன்பே சொல்லிய ஐசக் நியூட்டனின் சொற்கள் நிழலாடியது.

மகளுக்கு எந்த ஒரு தேசத்தையும் பெருமையோடு அறிமுகம் செய்ய முடியாத மன அழுத்தம் மிகுந்த தந்தையாக இருப்பது வலி மிக்கது,
"ப்ரௌட் டு பி அன் இந்தியன்" என்று விடுதலை நாளில் டீ ஷர்ட் போட்டுக் கொண்டு திரியும் ஒரு வெட்கம் இந்தியனாகவோ, சே குவாராவின் படத்தைப் போட்டுக் கொண்டும், பிரபாகரனின் படத்தைப் போட்டுக் கொண்டும் ஊரின் சேரிக்காரனை வதைத்தபடி தமிழ் தேசியம் குறித்துப் பினாத்தும் ஒரு புரட்சி வெங்காயமாகவோ இருந்திருக்காலம், மகளுக்கு எளிதாக உரைகளைத் தயாரிக்க முடியும்.

அடையாளங்கள் ஏதுமற்ற மனிதனாக, சக மனிதனை நேசிக்கிற, யாரையும் அடிமை என்றெண்ணாத, எந்த தேசத்தின் மீதான கட்டுமானத்திலும் இன்னொரு தேசத்தை அதன் மக்களை வெறுக்காத, ஊரின் மற்றொரு புறத்தில் வசிக்கிற பழங்குடி மனிதனுக்கு உரிமைகளை மறுக்காத, தனக்கு அருகில் நிகழ்கிற அநீதியைக் கண்டு அதற்கு எதிராய்ப் பொங்கி எழுகிற ஒரு எளிய மனிதனாய் இருப்பது மிகக் கடினமான ஒரு வாழ்க்கை முறையாய் மாறிப் போய் விட்டது.

"இந்தியா இஸ் மை கன்ட்ரி, ஆல் இண்டியன்ஸ்.............. நிறைமொழியின் குரல் அழுத்தமாக வந்து காதில் நுழைகிறது.

தனக்கு அருகில் உயிர்களுக்கு எதிராக நிகழும் அநீதிகளுக்க்காக சினம் கொள்கிறவனே உண்மையான தேசப்பற்றாளன், தேசங்களைத் தாண்டி மனிதர்களை நேசிக்கிற விடுதலையை குழந்தைகளுக்குக் விரைவில் கற்றுக் கொடுக்க வேண்டும், அதுவரை அவர்கள் நில எல்லைகளுக்கு உட்பட்ட தேசத்தைத் தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், உறுதியாக உண்மை அது அல்ல......


எளிய உழைக்கும் மக்களையும், குழந்தைகளையும் உள்ளடக்கிய இன்னொரு தேசத்தின் மீது வெறுப்புக் கொள்கிற தேசப்பற்றாளனாக இருப்பதைக் காட்டிலும் நான் நாடற்ற ஒரு பழங்குடியினனாகவே இருக்க விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை: