ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

நடுக்கடலில் மீனவர்கள்

சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்க, ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர், ஒரு கிளிட்ட இருக்கு, அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்ப்த்தனான்னுகேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பாகேள்விபட்டிருப்பீங்க.ஏன்னா,அது சின்ன வயசு கதை. இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன்.

ஒரு பாலம் தாண்டி, ஒரு கோயில்இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணி , கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போல, என்னப் போல சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல.
இத கேள்விபட்டிருக்கீங்களா?.
கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னா, அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும், பாலமும், எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லை, ரொம்ப யோசிக்காதீங்க. யோசிக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கு.
அந்தப் பாலம்   – பாம்பன் பாலம்அந்தக் கோயில் ராமநாதசுவாமி கோயில்.அந்த ஊர்       – ராமேஸ்வரம்.அந்த மக்கள்    – நம்மளுடைய மீனவ மக்கள்.  கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருக்காங்க. அவுங்களுக்கு என்ன பிரச்சனைன்னு உங்ளுக்கு தெரியுமா? சொல்றேன். தெரிஞ்சுக்கோங்க.
அவுங்களுக்கு பிரச்சனையே உள்ளூர்காரங்களும், அரசாங்கமும், பக்கத்து நாட்டுகாரனும் தான். யாருக்கு தான் பிரச்சனை இல்லைன்னு கேக்குறீங்களா?. நீங்க கேக்குறது கரெக்ட் தான். நமக்கெல்லாம் பிரச்சனைன்றது வீட்ல தண்ணி வரல, போலீஸ் சிக்னல்ல புடிச்சிட்டாங்க, இந்த மாசம் சம்பளம் 4 நாள் லேட்டாயிடுச்சு, கிரெடிட் கார்ட் பில்லுல வட்டி ஏறிட்டே போகுது, பத்து மணிக்கெல்லாம் டாஸ்மார்க்க அடச்சிடுறாங்கன்னு அடுக்கிட்டே போகலாம். நான் ஒன்ணும் யாரையும் தப்பா சொல்லல, நடமுறையில இருக்கிறது தானே. ஆனா, நமக்கு தினம் தினம் உயிர் போயிருமோன்னு பயப்படுற மாதிரி எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா அது அவுங்களுக்கு இருக்கு.
முதல்ல பக்கத்து நாட்டுக்காரன்ல இருந்து ஆரம்பிக்கிறேன். பக்கத்து நாட்டுக்காரன்னா, நம்ம எதிரி நாடுன்னு சொல்ற பாக்கிஸ்தான்னு நினைச்சுட்டீங்களா?. அவனக் கூட ஒரு வகையில சேத்துக்கலாம். அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.
இவன் யாருன்னா, நம்ம நேச நாடுன்னு சொல்ற இலங்கை. நம்ம ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள்ள மீன்புடி தொழிலுக்கு போகும் போது தொழில பாக்க விடாம சித்ரவதை பண்ணி சாக அடிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க. ஏன் இப்படி பன்னுறாங்கன்னு கேட்டீங்கன்னா? சிங்களவர்களுக்கு தமிழர்கள் மேல ஒரு காழ்ப்புணர்ச்சி. இது தான் அடிப்படை பிரச்சனை. அதிலையும் இந்த கச்சத்தீவு எப்ப அவுங்க கைக்கு போச்சோ, அதுக்கப்புறம் தான் நம்மளோட மீனவர்களுக்கு ஆரம்பிச்சுச்சு பிரச்சனையெல்லாம்.
மீதக்கதைய கர்பினிப் பெண்களோ, குழந்தைகளோ, வயதானவர்களோ யாரும் இத படிக்காதீங்க.
நம்ம மீனவர்கள்ட்ட கிட்டத்தட்ட 712 விசைப்படகுகளும், 1300 நாட்டுப் படகுகளும் இருக்குது. பெரும்பாலும் அதிகாலையிலும், இரவிலும் தான் இவுங்க மீன்பிடிக்க கடலுக்குள்ள போவாங்க. கடலுக்குள்ள போனவங்க ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்ல மீன் பிடிச்சிட்டு திரும்பி வந்துருவாங்க. இவுங்க போகும் போது நம்ம இந்திய கடற்படை என்ன பண்ணும்னா?, கார்ப்ரேட் கம்பெனி வாட்ச்மேனோட வேலைய பாப்பாங்க. மீனவர் அட்டை இருக்கா?, கள்ளக்கடத்தல் ஏதும் பன்றாங்களா? வேற என்ன என்ன இருக்குன்னு பாப்பாங்க.
அவுங்களுக்கு முக்கியம் எல்லாம், விடுதலைப்புலிகள் யாராவது ஊடுறுவி வந்துடுவாங்களோன்னு தான்.    இதெல்லாம் தாண்டி கடலுக்குள்ள போனா, நம்ம கடல் பகுதியில மீனே கிடையாது. இந்திய எல்லை, சர்வதேச எல்லை, இலங்கை எல்லைன்னு கடல இஸ்டத்துக்கு கூறு போட்டு சொந்தம் கொண்டாடிட்டு இருக்காங்க. எல்லைகள் இது இதுன்னு ஒரு குறிப்பும் கிடையாது. நடுக்கடல். வெறும் தண்ணி மட்டும் தான். இருந்தாலும் மீனவர்களுக்கு எல்லை எதுன்னு நல்லாவே தெரியும். அப்புறம் ஏன் எல்லைய தான்டுறாங்கன்னு கேக்குறீங்களா?. நம்ம பகுதியில தான் மீனே இல்லையே.
இலங்கை பகுதியில தான் நிறைய சதுப்பு நிலமும், பவளப் பாறையும் இருக்கு. அங்க தான் மீன்கள் இனப்பெருக்கம் அடைந்து நிறைய இருக்கு. மீனவர்கள் அங்க மீன் பிடிச்சிட்டிருக்கும் போது தான் இலங்கை கடற்படையினர் எங்கிட்டிருந்தாவது கண் இமைக்கிற நேரத்தில வந்து நிப்பாங்க. இலங்கை கடற்படையினர்ட்ட இருக்குறது அதிவேக இன்ஜின் கொண்ட ராட்சத இரும்பு போட். ரஸ்யா, சைனா ன்னு வேற வேற நாட்டுல இருந்து இறக்குமதி செய்து வச்சிருக்காங்க. அந்த போட்ட வச்சு நம்ம மீனவர்களோட விசைப்படக வேகமா அணச்சு ஓரமா ஒரு இடி இடிப்பாங்க. அவ்வுளவு தான், 8 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள போட்டோட ஓரப்பகுதி டைட்டானிக் படத்துல பனிக்கட்டியில இடிச்ச கப்பல் மாதிரி சேதத்துக்குள்ளாயிரும்.
சில சமயத்துல முங்கக்கூட செங்சுரும். நம்ம ஊர்ல, தெருவுல விக்கிற நிறைய ஹாலிவுட் படம்லாம் பாத்திருப்பீங்க, நடுக்கடல்ல சண்டை, கொலைன்னு. அதெல்லாம் நீங்க நேர்ல பாக்கனும்னா ஹாலிவுட்லாம் போக வேண்டாம், நேரா நம்ம ராமேஸ்வரத்துக்கு வாங்க. உயிர் மேல ஆசை இல்லேனா யாருக்காது பணத்த கொடுத்து ஒரு போட் எடுத்து உள்ள போய் பாருங்க. சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வுளவு நேரடி சம்மந்தம் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்கனுலாம் கிடையாது, பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போது, தண்ணிலையா பாயாது.
நடுக்கடல்ல யாரோட உதவியும் கிடைக்காது. கத்துனா கூட யாருக்கும் கேக்காது.  மீசையே முலைக்காம கையில துப்பாக்கியோட நாலு, அஞ்சு சின்ன பசங்க கால தூக்கி போட்விட்டு போட்டுஅழகா தவ்வி வருவாங்க. அவுங்களுக்கு சம்மந்தமே இல்லாம தடியா ஒரு பூட்ஸ் போட்டுக்கிட்டு வந்து அவுங்க கேக்குற முதல் வார்த்தை, ,“நீ இந்திய வேசி மகன் தானேடா?”. உங்கள யாராவது கெட்ட வார்த்த சொல்லி கூப்பிட்டா, என்ன பண்ணுவீங்க. அவுங்கள விட இன்னும் நாலு வார்த்த அதிகமா சொல்லுவீங்க. அதுக்கு மேல அடிதடி சண்டைன்னு போகும். அடுத்து போலீஸ் வருவாங்க. ஆனா கடல்ல எந்த போலீஸும் வராது, நேவியும் வராது. எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஆமான்னு சொல்லிதான் ஆகனும்.
சிங்களவனுக்கு தமிழ் தெரியாதுன்லாம் நினைக்காதீங்க. இப்ப இருக்கிற, மாடர்ன் ஜென்ரேசன விட நல்ல பேசுவாங்க. மீனவர்கள் ஒத்துக்கிட்டாலும் அடுத்து அவுங்க படுற சித்ரவதையெல்லாம் நம்மாளால யோசிச்சுகூட பாக்க முடியாது.
எல்லாத்தையும் நேரா நிக்க வச்சு அவுங்களோட உடையை கழட்ட சொல்வாங்க. அம்மனமா நிக்க வைப்பாங்க. உங்கள அப்படி நிக்க வச்சா என்ன பண்ணுவீங்கன்னு யோசிச்சு பாருங்க?. அதோட மட்டும் முடியாது. நம்ம இந்திய அரசாங்கம் போட்ட சட்டத்த இலங்கை அரசாங்கம் அராஜகத்தோட மீனவர்களோட சம்மதம் இல்லாம நிறைவேத்துது. என்ன சட்டம்னு கேக்குறீங்களா?.
ஒரினச் சேர்க்கை சட்டம் தாங்க.
நடுக்கடல்ல மீனவர்கள ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண சொல்லிட்டு போட்டுமேல போய் உக்காந்துப்பாங்க. மீனவர்கள் படும் கஷ்டத்த பாத்து, அவுங்க செயல் முறைய பாத்துட்டு போட்டதட்டி தட்டி, அடிச்சு அடிச்சு பேயா சிரிப்பாங்க. நம்ம மீனவர்கள் எப்போதும் தொழிலுக்கு போகும் போது குடும்பமா தான் போவாங்க. அப்பா, அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன்னு எல்லாரும் ஒண்ணா தான் போவாங்க. ஏன்னா, எல்லாத்துக்குமே அது தானே தொழில். நம்ம ஊர் அரசியல எப்படி ஒரே குடும்பமா இருந்து பாத்துக்கிறாங்களோ அதே போலத்தான் அவுங்களுக்கும் மீன்புடி தொழில். இதுல பல சமயம் குடும்பத்துக்குள்ளையே ஒருத்தருக்கு ஒருத்தர் ஹோமோ செக்ஸ் பண்ண நேர்ந்துரும். அப்பாவும் மகனும், மாமனாரும் மருமகனும், சித்தப்பனும் பெரியப்பனும்னு பாவமா மாட்டிப்பாங்க. இது என்னோட அப்பா, இது என்னோட சித்தப்பான்னு சொன்னாங்கனா அவ்வுளவு தான். வலுக்கட்டாயமா சேர வச்சிருவாங்க. இந்த சம்பவம் நடக்கும் போது ஒரு சிங்களவன் துப்பாக்கி வச்சுகிட்டு பக்கத்துலேயே நிப்பான். அவுங்க சரியா பண்ணலேனா, துப்பாக்கிய வச்சு குறியிலேயே தட்டுவான். வலியில துடிச்சாவோ, கதறுனாவோ திருப்பி திருப்பி அடி தான் இல்ல வேற யாரோடையாவது சேத்து விட்டுருவாங்க.
சில சமயம், ஐஸ்கட்டி மேலையும் படுக்க வைப்பாங்க, படுக்க வச்சு இந்த லீலையெல்லாம் நடத்துவாங்க. இந்த கொடுமைய யார்ட்ட போய்  சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்க. போலீஸ்ட்டையா? இல்லகடற்படையிலையா? -அட்ப்போங்க, மீதக்கதைய தெரிஞ்சுக்கோங்க.உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் இப்படி ஒரு வலுக்கட்டாயமா ஒரு உறவு ஏற்பட்டுச்சுனா ……… யோசிக்கவே முடியலையா?.
பரவாயில்ல, யோசிச்சு பாருங்க. எப்படி நீங்களும் உங்க அப்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்த பாத்துக்கிறது, வீட்ல அம்மா, தங்கச்சிட்ட என்னனு சொல்வீங்க?. நம்மட்டெல்லாம் பதிலேகிடையாது. ஆனா, அவுங்க இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும், எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அடக்கி வச்சுட்டு, கரையில குடும்பம் காத்துட்டிருக்குன்னு, மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க.. இதோட முடியாது இவுங்களோட துயரம்.
மீனவர்கள் எதுக்காக 200 லிட்டர் டீசல் போட்டுட்டு, இவ்ளோ கஷ்டப்பட்டு கடலுக்குள்ள வந்தாங்களோ அதுக்கே பங்கம் விளைவிச்சுருவாங்க. இவுங்க பிடிச்ச மீன்களை எல்லாம் கடல்ல தூக்கி குப்பைய கொட்டுற மாதிரி கொட்டிருவாங்க. மீன் வலையையும் சேத்து தூக்கி போட்டுருவாங்க. அந்த வலை எவ்வுளவுன்னு தெரியுமா உங்களுக்கு?…9000 ரூபாய். உங்க கையில இருக்கிற மொபைல் ரேட்ட விட இது கம்மியா இருக்கலாம். ஆனா மாசத்துக்கு பத்து பதினஞ்சு தடவ வலை போச்சுனா, என்ன பன்னுவாங்க?.  ”வட போச்சேன்னுசொல்ற மாதிரி வல போச்சேன்னுலாம்சொல்ல முடியாது. வழிகாட்டி கருவி, மொபைல், டீசல் கேன் எல்லாத்தையும் கையாண்டுருவாங்க. எதையும் தடுக்க முடியாது. ஒண்ணுமே பண்ணமுடியாது. மீறி ஏதாவது திமிருனாங்கன்னா, கொஞ்சம் கூட யோசிக்காம கடல்ல குதிக்க சொல்வாங்க. நீச்சல் தெரிஞ்சா தப்பிச்சாங்க, எதையாவது தொத்திகிட்டு கரைக்கு வருவாங்க, இல்லேன்னா அதோ கதி தான். மீனோட மீனா போகவேண்டியது தான். சில சமயத்தில் துப்பாக்கி குண்டு தான் பதில். சுட்டு கடல்ல தூக்கி போட்டுருவாங்க.
பல சமயம் கைது பன்னிட்டு போயிருவாங்க, கைது பன்னிட்டு போனவங்கள்ள பிரிச்சு பிரிச்சு 20 நாள், 30 நாள் ஜெயில்ல வச்சுட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்புவாங்க. அந்த 20, 30 நாள்ள உள்ள நடக்கிற கொடுமையெல்லாம் போட்ல என்ன நடந்துச்சோ, அதே தான். 100 கிராம் சாப்பாட்டுல 150 கிராம் கல்ல போட்டு, பிசஞ்சு சாப்பட சொல்லுவாங்க. சாப்புட்டு தான் ஆகனும், இல்லேன்னா ஒரு மாசம் எப்படி தாங்குறது, சில பேர் தண்ணிய குடிச்சிட்டு இருந்தரலாம்னு நினச்சாலும் முடியாது. தண்ணி கூட தரமாட்டாங்க. மீறி தண்ணி கேட்டா, காமன் கக்கூஸ்ல இருக்கிற தண்னிய குடிக்க சொல்வாங்க. சில சமயத்துல அதையும் குடிச்சுத்தான் ஆகனும்.
இப்படியே இருந்தா நாங்க செத்துபோயிருவோம்னுசொன்னா, உன்னைய சாகடிக்கிறதுக்கு தானே இங்க கூட்டிட்டே வந்திருக்குனு சொல்லுவாங்க, அதுக்கப்புறம் சிங்களத்துல வேற திட்டி அடிப்பாங்க. வீட்டுக்கு போவோமா, போமாட்டோமான்னு எதுவுமே தெரியாம ஒவ்வொரு ராத்திரியும் போகும். இப்படி தினம் தினம் பிரச்சனையை வச்சுகிட்டு கடலுக்குள்ள போய் தொழில் பாத்துகிட்டு இருக்காங்க.
இதுல இந்தியா இலங்கை கிரிக்கெட் மேட்ச் நடந்தா கடலுக்கு பாதி பேர் போக மாட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா?.
கடலுக்குள்ள போனா இன்னைக்கு யாரு ஜெயிப்பாங்கன்றத முடிவ பொறுத்து அடி விழும். இந்தியா ஜெயிச்சுச்சுனா அடி செமத்தியா விழும், இந்தியா தோத்துறுச்சுன்னா அவமானம் மட்டும் மிஞ்சும். தோத்ததுனால ஏற்படுற அவமானம் இல்லங்க, நாலு அடி அடிச்சிட்டு, ட்ரஸ்ஸ கழட்டிட்டு அம்மனமா கரைக்கு அனுப்புவாங்க. கோனிப்பையை கட்டிட்டு தான் வருவாங்க. நம்ம என்ன பன்னுவோம், இங்க சச்சின் 100 அடிக்க மாட்டாரான்னு சாமிய கும்பிட்டுட்டு, டி.விக்கு விபூதிய தூவிட்டு, கடவுளே இந்தியா ஜெயிச்சரனும், சச்சின் 100 போட்டுரனும், மேன் ஆஃப் த மேட்ச் சச்சின் வாங்கிடனும்னு வேண்டிகிட்டு உட்காந்திருப்போம், இந்தியா டீம் மேல அவ்ளோ பற்று, டீவி முன்னாடி உக்காந்து கத்தியாவது பந்த ப்வுண்டரிக்கு போக வைக்கனும்றது தானே நம்ம வேலை. ஆனா, கடலுக்குள்ள, சச்சின் அடிக்கிற ஒவ்வொரு ஃபோருக்கும் மீனவர்கள் அடி தான் வாங்குறாங்க. இலங்கை விக்கெட் விழுந்துட்டா போதும் இங்க மீனவர்கள உட்கார வைத்து மீன் கூடைய தலையில கவுத்தி அடிப்பாங்க. சச்சினுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, ஏன், நமக்கும் தான் என்ன சம்மந்தம் இருக்கு, நாம வழக்கம் போல ஐ.பி.எல் மேட்ச பாத்துட்டு, ப்ரீத்தி ஜிந்தா யார கட்டிபுடிக்கிறான்னு பாத்துகிட்டு, டெவென்ட்டி டெவென்ட்டி, மினி வேர்ல்ட் கப்பு, மெகா வேர்ல்டு கப்புன்னு எல்லா மேட்சுகளையும் பாத்துட்டு, இந்தியா மேல உணர்ச்சி பொங்க சக் தே இந்தியா”, ”சக் தே இந்தியான்னு பாட்டு பாடிட்டு, ரிங்கிங் டோனா மொபைல்ல வச்சுட்டு, கூட்டம் கூட்டமா சேர்ந்து கூச்சல் போட்டு சந்தோசமா தானே இருக்கப் போறோம். அதுலையும் தான் என்ன தப்பு இருக்கு, நாமலும் இந்தியாவுல தானே இருக்கோம்.
இது எல்லாத்தையும் தாங்கிட்டு கரைக்கு திரும்புனா, இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு இந்திய கடற்படை கொண்டாடிட்டு இருக்கும், எவ்வுளவு கடுப்பா இருக்கும். அந்த நிலைமைல நீங்க இருந்தீங்கனா என்ன பண்னுவீங்க? உங்க இந்திய பற்று, கிரிக்கெட் பற்றெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு யோசிச்சு பாருங்களேன்?.
அவுங்க இதெல்லாம் யோசிச்சாலும் ஒண்ணும் பன்ன முடியாது. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, இலங்கை கடற்படை எங்கள அடிக்குறாங்கன்னு சொன்னா, நீங்க எல்லைய தான்டுனீங்களா?, ஏன் தான்டுனீங்க?, உங்கள விடுதல புலிங்கன்னு சந்தேகப் பட்டுருப்பாங்க, உங்க மீனவர் அட்டயெடுத்து காமிக்க வேண்டியது தானே?. இப்படி கேள்வியா கேட்டு சமாளிச்சுருவாங்க.
இவ்வுளவு பிரச்சனைய வச்சிட்டு ஏன் தான் அவுங்க கடலுக்கு உள்ள போகனும்னு கேக்குறீங்களா?. இன்ஜினியரிங் படிச்ச உங்கள போய் ஹார்ட் ஆப்ரேசன் பன்ன சொன்னா பன்னுவீங்களா? இல்ல டாக்டருக்கு படிச்ச உங்கள கம்பியூட்டர்ல உக்காந்து கோடிங் எழுத சொன்னா எழுதுவீங்களா?. அதுவும் இல்லேனா பைக் மட்டும் ஓட்டத் தெரிஞ்ச உங்கள போய் கன்டெய்னர் ஓட்ட சொன்னா முடியுமா?….இப்படி நிறைய கேட்டுக்கிட்டே போகலாம். அதே தான் அங்கையும், தலைமுறை தலைமுறையா பன்னுன தொழிலை எப்படி விடமுடியும். போராட்டம் தானே வாழ்க்கையே
நான் நம்ம தெருவுல இறங்கி ஒரு வாக்கிங் பொய்ட்டு வருவோமேஇல்ல ஒரமா டெண்ட்ட போட்டுட்டு கத்திட்டிருப்போமே அந்த மாபெரும் போராட்டத்தலாம்  சொல்லலை. இவுங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கான போரட்டம். பாக்கிஸ்தான்ல கூட அரெஸ்ட் பண்ணிட்டு போவாங்களே தவிற இப்படி அடிக்கலாம் மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட்டு, பத்திரமா வச்சுப்பாங்க, அப்புறம் ஒழுங்கா அனுப்பிவச்சிருவாங்க. ஆனா, நேச நாடுன்னு சொல்ற இந்த இலங்கை…..
சரி, இந்த பிரச்சனையெல்லாம் நமக்கு நம்பிக்கையான அரசாங்கத்துட்ட சொல்லலாம்னு போவாங்க. நம்ம அரசாங்கமும் பதில் சொல்லும். நிறையவே சொல்லும். சமீபத்துல கூட 21 மீனவர்கள கைது பன்னிட்டாங்கன்னு வேலை நிறுத்தம்லாம் பன்னுனாங்க. ரித்தீஸ் சார்ட்ட போய் சொல்லிருக்காங்க. நான் உடனே உங்களுக்கு உதவுறேன்னு, சில காரியங்கள எல்லாம் பண்ணிருக்காங்க. நல்ல விசயம் தான். மீனவர்கள் சார்புல 10 பேர் சென்னைக்கு வந்து முறையிட, சென்னையிலிருந்து முக்கியமானவங்க எல்லாம் டெல்லிக்கு பறக்க, டெல்லியிலிருந்து அதிமுக்கியமானவங்க இலங்கைக்கு பறக்க, மீனவர்கள் வீடு திரும்புனாங்க.
இதோட எல்லா பிரச்சனையும் முடிஞ்சிறுச்சு, இனிமேல் நீங்க தைரியமா கடலுக்குள்ள போலாம்னு நம்ம வணக்கத்துக்குறிய ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மேடம் சொல்ல, எல்லாரும் நிம்மதியா கடலுக்கு போனாங்க. அன்னைக்கு மட்டும் எவனும் யாரையும் அடிக்கல. ஆனா, மறு நாள்ள இருந்து அடி, உதை எல்லாம் தொடங்கிடுச்சு. என்ன காரணம்னு யாருக்குமே தெரியல. இத திருப்பியும் ரித்தீஸ் சார்ட்ட போய் சொன்னாங்க. அதுக்கு ரித்தீஸ் சார், “ நமக்கு சொந்தமான இடம் கரையோரம் வேற ஒன்னு இருக்கு, அங்க போய் தங்கி மீன் பிடிங்க, ஒரு பயலும் உங்கள தொடமுடியாதுன்னு சொன்னார். பிறந்த இடத்த விட்டு , மண்ண விட்டு எப்படி போவாங்க? நீங்களே சொல்லுங்க,? அவுங்களுக்கு வேற உங்கள போல பைக், கன்டெய்னர் ரெண்டும் ஓட்டுவாங்கன்னு சொல்ல முடியாது. போட் மட்டும் தான் ஓட்டத் தெரியும். தொழிலும் அப்படித்தான்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பிடிச்ச மீன விக்கனும்ல, அதுக்கு நாலு பேர் இருக்காங்க, கம்மியா மீன் பிடிச்சிட்டு வரும் போது அதிக விலை கொடுத்து வாங்கிப்பாங்க. அதிகமா மீன் பிடிச்சிட்டு வரும் போது, வலுக்கட்டாயமா கம்மியான விலைல வாங்கிப்பாங்க. இதையே தொடர்ந்து செஞ்சு, இப்ப அவுங்க வைக்கிறது தான் விலை. அவுங்க விக்கிறது தான் மீனு. அந்த மீனத்தான் நம்ம சாப்பிடுறோம், அது தான் நமக்கும் அவுங்களுக்கும் இருக்கிற ஒரே சம்மந்தம். இதுல நம்ம கடல்பகுதியில இருக்கிற ஒண்ணு ரெண்டு வகை மீனையும் பிடிக்காதன்னு வேற திடீர் திடீர்னு தடை போட்டுருவாங்க. கேரளாவுல தேங்காய் எண்ணையில பொறிச்சு சாப்புடுற பேச்சாலைன்ற மீன் இங்க நிறைய கிடைக்கும்.
அந்த மீன  பிடிக்காதன்னு சொல்லிருவாங்க. என்னன்னு விசாரிச்சு பாத்தா, அந்த மீனுக்கு நிறைய வருதாம். அதுனால  கோயிலுக்கு வர்ற பகத்கோடிகள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்கலாம். நீங்களே சொல்லுங்க செத்தது எதுவா இருந்தாலும் ஈ மொய்க்கத் தானே செய்யும். நாளைக்கு நம்மளே செத்து போயிட்டா மொய்க்காதா என்ன?… இதலாம் ஒரு பிரச்சனைன்னு இதுக்கு சட்டம் வேற. முக்கியமான பிரச்சனைய தீர்த்துவைக்க மாட்டேங்றாங்க. இந்த தடையெல்லாம் யாராவது சொல்லியா நம்ம ஹரிஹரன் கலெக்டர் சார் செஞ்சிருப்பாரு? உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க? தெரியலேனா இந்த அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.
திருப்பதி போயிருக்கீங்களா நீங்க?. அங்க இருக்கிற உண்டியல பாத்திருக்கீங்களா?. லட்ட தவிற வேறு எதுவும் தெரியாதுன்னு சொல்றீங்களா? அதுல ஒண்ணும் தப்பு கிடையாது.
ஜருகண்டி, ஜருகண்டின்னு விரட்டிட்டே இருப்பாங்க. ஆந்திரா கல்லாப்பட்டியே அது தானே. அதே போல தமிழகத்தோட கல்லாப்பெட்டியா ராமேஸ்வரத்த மாத்திடலாம்னு யாராவது நினைச்சாங்களோ என்னவோ தெரியல, அதுக்கு தடையா மீன்புடி தொழில் இருந்துச்சோ என்னவோ அதுவும் தெரியல. ஆனா கோவில சுத்தி இப்ப ஐயர் ஐய்யங்கார்கள் லாம் நிறைய ஆயிட்டாங்க. சாமி பக்கத்துலேயே உக்காந்து கும்பிட்டுக்கிட்டே காசு எண்ணனும்னு நினச்சாங்களோ என்னவோ. சரி காசு எல்லாத்துக்கும் தேவதானே. எவன் எவனோ, வெளி நாட்டுல இருந்து வரானுங்க.  திடீர் திடீர்னு கம்பெனி ஆரம்பிச்சு, கோடி கோடியா உங்கள வச்சு சம்பாதிக்குறாங்க.  எலும்புத்துண்டு மாதிரி  எட்டாயிரம், பத்தாயிரம்னு உங்களுக்கு கொடுக்குறாங்க, அவுங்களுக்கே எவ்வுளவு விசிவாசமா இருக்கீங்க. ஆனா, நம்ம அரசாங்கம்மீனவ மக்கள தண்ணி தொலிச்சு விட்டுருச்சு.
அப்படி என்ன அந்த தொழில்ல இருந்து அரசாங்கத்துக்கு பெருசா கிடச்சிருச்சுன்னு கேக்குறீங்களா? ஏதாவது கிடச்சாதான் செய்யனுமா என்ன?. ஆனா, கிடச்சும் செய்யலங்க.
ராமேஸ்வரம் மீன்புடி தொழில் மூலமா அரசாங்கத்துக்கு ஒரு நாளுக்கு மூனு கோடி ரூபாய் வருமானம். நீங்க 12த்ல கணக்கு பாடத்துல பாஸ்னா, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, ஒரு வருசத்துக்கு எவ்வுளவு வருமானம்னு?. மீனவர்களும் பங்களா கட்டி கொடு, கார் வாங்கி கொடுன்னு மாமனார்ட்ட கேக்குறமாதிரி எல்லாம் கேக்கல. 1000 போட் நிப்பாட்ட இடமில்ல, புயல் காலத்துல போட் முட்டிக்கிட்டு, அடிபட்டு சேதமாகுது, ஒரு ஹார்பர் கட்டி கொடுங்கன்னு தான் கேக்குறாங்க. அதையும் இன்னைக்கு நேத்து கேக்கல, பத்து வருசமா கேக்குறாங்க.
இவ்வுளவு பிரச்சனையும், இத்தன காலமா மத்திய அரசுக்கு யாருமே எடுத்துட்டு போலையான்னு கேக்குறீங்களா?.
யார் இருக்கா எடுத்துட்டு போறதுக்கு.? மத்தியில இவுங்க குறையையும், கோரிக்கைகளையும், இவுங்க சார்பா எடுத்து வைக்க ஒரு அமைச்சர் கிடையாது. விவசாயத்துறை கீழ தான் மீன் துறை இருக்கு. ரெண்டு துறைக்கும் ஒரே அமைச்சர். ஆள் இல்லேன்றதுக்காக எதுவும் தெரியாம போகுதா என்ன? மீடியா போகாத இடமாங்க இல்ல, தெரு தெருவா, முக்குக்கு முக்குக்கு, ரூம் ரூமா போகுதே. இந்த அரசாங்கம் விசித்திரமானது தாங்க எப்படின்னு கேக்குறிங்களா?.
காட்டுக்குபோயிருக்கீங்களா?.புலிய பாத்திருக்கீங்களா?.நான் கேக்குறது விலங்கு புலிங்க. போலேனாலும் பரவாயில்லை பேராண்மை படம் பாத்தீங்களா, அதுல நம்ம ஜெயம் ரவி சார் காட்டுக்குள்ள ஒரு மிருகத்த கொன்னு தூக்கிட்டு வந்து பாட்டு பாடுவாரு. அதான் புலி. புலிகளோட எண்னிக்கை குறஞ்சுருச்சுன்னு அதுகல பாதுகாக்குறதுக்கு மத்தியில வனத்துறைய ரெண்டா பிரிச்சு  புலிகளை காப்பாற்றுவோம்னு சொல்றதுக்கு ஒரு அமைச்சர் வரப்போகிறாராம்.
ஒரு தொழிலையும், அந்த மக்களையும் காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர் கிடையாது. ஒரு மிருகத்த காப்பாத்துறதுக்கு ஒரு அமைச்சர். இது தான் மனுசனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு போல.
சரி விடுங்க கடவுளுக்கு மனுசன நரபலி எங்கேயாவது கொடுக்குறாங்களான்னு கேட்டா, ராமேஸ்வரம் போங்கனு சொல்வோம்.


நன்றி : காட்சி வலைப்பூ

கருத்துகள் இல்லை: