வியாழன், டிசம்பர் 23, 2010

அம்பேத்கரை கண்டேன்




சென்னை மினி உதயம் திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.

இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.

திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும்கூடுகிறது.

திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்..காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரையரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.

படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.

'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.

'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும்கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை.ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !.

அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
http://www.spypig.com/64139f37-0cb4-11e0-b513-00188be76496/pig.gif
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறுஅனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

நன்றி - காலப்பறவை 

கருத்துகள் இல்லை: