வெள்ளி, பிப்ரவரி 09, 2024

எது சமணம் ?
இடதுசாரி இயக்கங்கள் , தலித் இயக்கங்கள்,  தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் என்றெல்லாம் பொத்தம் பொதுவாக குறிப்பிடுகின்றோமே, அதைப்போல சமணம் என்ற பெயர் கூட ஒரு பொத்தம் பொதுவான சொல்தான். வேத மறுப்பு சமய நெறிகள் யாவற்றையும் குறிக்கும் ஒரு பொதுவான பெயரே சமணம். 

ஐந்திறப் பள்ளிகள் யாத்து தந்திருந்த  மெய்க்கோட்பாட்டு இயல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டிருந்த ஹோமம், வேள்வி, யாகம், பலியிடுதல் போன்ற வழிபாட்டு வணக்க முறைகள், வட புல பொதுமக்களுக்கு பெரும் வெறுப்பை தந்தன. 

வைதீக கூட்டத்தினருக்கு ஆட்சியாளர்களின் செல்வந்தர்களின் ஆதரவு இருந்ததால், பொதுமக்களின் இந்த வெறுப்பை அவர்கள் பொருட்படுத்தவே வில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் வைதீக எதிர்ப்பு குழுக்கள் முளைத்தன. இந்த குழுக்களுக்கு அறிவுரைகள் | வழிகாட்டுதல்கள் மற்றும் வைதீக வழி வணக்க முறைகளை எதிர்ப்பதற்கான முறையான செயல்திட்டங்கள் தமிழ் கணியர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. 

வைதீக எதிர்ப்போடு கணியர்களின் மெய்யியல் தத்துவார்த்தங்களையும் மக்களிடம் பரப்பிடவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டன. இந்த குழுக்களே பின்னாளில் சாவகர், அருகர் என்றெல்லாம் அறியப்பட்டன. ஒட்டுமொத்த இந்த குழுவினர் பொத்தாம் பொதுவாக சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். 

சாவகர்கள் நீண்ட விரிந்த சடையோடும் அருகர்கள் முழுவதும் மழித்தும் தங்களை உருவகப்படுத்திக்கொண்டனர். சமணக்கொள்கை கோட்பாடுகள் எழுச்சிப் பெற்று பொது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுவந்த அதே வேளையில்  அவர்களுக்குள் பகை உணர்வும் வளர்ந்தது. தங்களது வளமான வாழ்க்கை, வருவாய் பாதிப்படைவது கண்டு,  பெருங்கோபத்துடன் காத்திருந்த வைதீக கூட்டத்தினர் சமணர்களின் பகை உணர்வை பயன்படுத்தி அவர்களுக்குள் மோதிக்கொள்ள வழிவகை செய்தனர். 

வைதீக எதிர்ப்பை விட்டுவிட்டு ஆங்காங்கே தங்களுக்குள் மோதிக்கொண்டனர். 
 “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்” என்று இந்த சாவக / அருக சகோதர பகையை கணியர்கள் கண்டித்து புத்திமதி சொல்லி ஒருசேர அனுப்பி வைத்த விவகாரங்கள் வெளியில் தெரிய வர சமணர்களுக்கு பின்புலமாக கணியர்கள் இருந்த கதையெல்லாம் வைதீகர்களுக்கு தெரிய வந்தது. 

அப்புறமென்ன..? 

சமணர்கள் மீது இருந்த கோபம் கணியர்கள் மீது திரும்பியது  
ஐந்திறப்  பள்ளிகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கணியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சாவகர்களும் அருகர்களும் தென்புலம் நகர்ந்தனர். 

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வைதீக எதிர்ப்பு நெறிகள் அழித்தொழிக்கப்பட்ட போது அருகத்தை தழுவி வட புலத்தில் உருவான ஒரு சமயமே ஜைனம். இதனை நிகண்டுகள் பிற்காலத்தில் சமணத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டன. இதனாலேயே ஜைனம் தான் சமணம் என்றொரு தவறான கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது.

#சமணம்|#சாவகம்|#அருகம்|#சமணம்|#கணியர்|#ஐந்திறப்பள்ளி

கருத்துகள் இல்லை: