திங்கள், பிப்ரவரி 05, 2024

பெளத்த வரலாற்று எச்ச்சங்கள்


 கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழமன்னன் கிள்ளி வளவனின்  தம்பி இளங்கிள்ளி காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டான். அப்பொழுது பைம்பூம் போதிப் பகவற்கு ஒரு சேதியம் அதாவது பெளத்த ஆலயம் அமைத்தான் என்கிறது மணிமேகலை. அதோடு காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே இருக்கின்ற பிள்ளையார் பாளையத்தில் தருமத வனம் எனும் பூந்தோட்டம் நிறுவி அங்கு பெளத்தர்கள் தவமிருக்கும் கூடத்தினையும் அமைத்து அதற்கு சிறப்பான விழாவும் எடுத்தான். மணிமேகலை காஞ்சிக்கு வருகை தந்த போது அங்கு ஏற்கனவே பெளத்த சேதியமும் தவப்பீடமும்  இருந்ததை மணிமேகலை வழியே சாத்தனார் காட்சிப்படுத்துகிறார்.

 

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, பவுத்த காஞ்சி ஜைனக் காஞ்சி என காஞ்சி  நான்கு நிலப் பிரிவுகளாக இருந்தது. சிவ காஞ்சி என்பது இன்றைக்கு இருக்கின்ற பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணு காஞ்சி, சின்ன காஞ்சிபுரம். காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய பகுதியே பெளத்த காஞ்சியாக இருந்தது. காஞ்சிக்கு வெளியே திருப்பருத்திக்குன்றத்தில் சமணர்கள் நிறைந்து தவமெய்தி சமணம் வளர்த்ததால் அது சமணக்காஞ்சி அதாவது ஜைனக்காஞ்சி என்று வழங்கப்படுகிறது.  

 

பெளத்த பள்ளி தலைவரான அறவண அடிகள் வாழ்ந்த அறப்பணஞ்சேரி , தாராதேவி ஆலயமான காமாட்சியம்மன் கோயில்,  மணிமேகலையின் கோயிலான கருக்கினில் அமர்ந்தாள் போன்றவை பெளத்த வரலாற்று எச்ச்சங்களாகும்.


கருத்துகள் இல்லை: