வெடித்துச் சிதறிய பட்டாசு காகிதங்களோடும்
வெளிச்சம் பிரசவித்த மத்தாப்புகளோடும் எரிந்து கழிந்து கடந்து போயிருக்கும்
தீபாவளி !
புராண, இதிகாசங்களில் நமக்கு உடன்பாடில்லை
என்பது வேறு. ஆயினும் எதிரிக்காகவும் இரக்கப்படுகின்றன இந்த மண்ணில், பகைவருக்கும்
அருள்வாய் நெஞ்சே என உருகும் உள்ளம் கொண்ட இந்த தேசத்தில், மன்னிப்பென்னும்
மந்திரம் தந்த மகாத்மாக்கள் வாழ்ந்த நாட்டில்,
ஒருவனைக்கொன்றழித்ததைக் குதூகலத்தோடு
கொண்டாடி மகிழ்வதுதான் மனித நாகரிகமா? அழிந்துபோனவன் குறித்து ஆனந்தபடுவதுதான்
உயர்ந்த பண்பாடா? இதனை விழாக்கள் என்கிற பெயரில் கூட விரும்புதல் சரியா? ஜென்கூட
இறப்பை கொண்டாடுகிறதே தவிர எதிரியின் இழப்பை அல்ல.
மரண தண்டனைகளுக்கே மறுபரிசிலினை தேவை என
செங்காவி கட்டிடங்களை நோக்கி நாம் முழக்கங்களை முன் வைத்துவரும் இவ்வேளையில்
சடலங்களைகண்டு சந்தோசம் அடைவது கொடூர நெஞ்சங்களில் குறியீடு அல்லவா?
இன்னும் சொல்லப்போனால் தமிழர்களால்
தவிர்க்க வேண்டிய நிகழ்வு இது. மேலும் தமிழர்களை அரக்கர்களாய் அடையாளம்
காட்டுவதும் அவர்தம் வீழ்ச்சிக்களுக்கு விழா எடுப்பதுவும் வேதனைக்குரியாதே அன்றி
விரும்பத்தக்கது அல்ல.
நெடுங்காலமாக இருந்து வருகிறதே என்பதற்காக
சாதீயம் சரி என்று எப்படி ஏற்க முடியாதோ, சொரிந்து கொள்வதில் சுகமிருக்கிறது
என்பதற்காக எப்படி புண்களை புகழ்ந்து விட முடியாதோ, அதை போன்றே..
குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்கப்படுத்தி
அவர்களின் வாழ்க்கையை வெளிச்ச சிதறள்களாய் வெடித்து சிதறவைக்கும், ஏழை –எளியவர்களின்
பொருளாதார விடுதலையை புஸ்வாணம் ஆக்கும்
தமிழர்களின் வீழ்ச்சிக்கு மத்தாப்பு சுழற்றும்
தீபாவளிக்கு இனி தீ வைப்போம் !
முறையற்ற
வழக்கங்களை முடிந்தவரை தவிர்ப்போம் !
சமரன்.
தமிழ் முற்றம்
2006 இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக