சனி, ஜனவரி 22, 2011

சென்னை அரசு பொது மருத்துவமனை பேசுகிறேன்!

முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... ஆரோக்கியமான வணக்கம். நான்தான் சென்னை அரசு பொது மருத்துவமனை பேசுகிறேன்! 

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது உடல் என்னில் வைக்கப்பட்டிருந்ததால் எனக்கு ராஜீவ் பெயரை சூட்டுமாறு ஜனவரி 13-ம் தேதி பீட்டர் அல்போன்ஸ் சட்டசபையில் கோரிக்கை வைக்க, அதை உடனடியாக ஏற்றுக்கொண்டீர்கள். அடடா.. காங்கிரஸ்காரன் கேட்டால் சும்மா இருப்பீர்களா? 5-வது நாளே ஜனவரி 18-ம் தேதி என் வாசலில் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைஎன போர்டும் வைத்துவிட்டீர்கள். 

நேற்று காலை இரண்டு கம்பவுன்டர்கள் பேப்பரை வைத்து பேசிக்கொண்ட பேச்சு என் சுவர்களில் எதிரொலித்தது. அதையடுத்துதான் இந்தத் தகவலே எனக்குத் தெரியும். 

மணியரசன், சீமான் போன்ற சிலரின் எதிர்ப்பைத் தவிர மருந்துக்குக் கூட தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு வராததால் இதில் சம்பந்தப்பட்ட நானே பேசுவது என முடிவெடுத்திருக்கிறேன். அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என நீங்கள் பராசக்தியில் கேட்டதுபோல், ‘கட்டடம் என்றைக்கடா பேசும்?’ என்று சிலர் கேட்கக் கூடும். 

ஏன் நீங்கள் கட்டிய வள்ளுவர் கோட்டம் தமிழ் பண்பாடு பேசவில்லையா? நீங்கள் எழுப்பிய பூம்புகார் சிற்பக் கூடம் தமிழன் தொன்மை பேச-வில்லையா? நீங்கள் எழுப்பிய திருவள்ளுவர் சிலை சுனாமியையே எதிர்த்து நின்று பேசவில்லையா? அந்தக் கல் படைப்புகள் எல்லாம் பேசும்போது... தினம் தினம் ரணங்களைக் காணும் வாய்ப்பு பெற்ற எனக்கு ஏன் பேச்சு வராது? 

பேசுகிறேன் கேளுங்கள். நான் பேசுவதை விட உங்கள் அன்புக்கும், ஆசிக்கும் உரிய ஒருவர் பேசியதையே மீண்டும் பேசுகிறேன். 

சமீபத்தில் அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள்என்ற நூல் வெளியீட்டு விழாவில் உங்களது இளவல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். 

பேரறிஞர் அண்ணா சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அய்யா (பெரியார்) அண்ணாவை பார்க்க அங்கே வருகிறார். குன்றக்குடி அடிகளார் எல்லாம் வந்தார்கள். அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டுப் போன பின்பு, அண்ணாவை தனியாக சந்தித்த அய்யா, ‘நீங்க உடம்பைப் பாத்துக்கணும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... இந்தாங்க இத வச்சிக்கோங்கஎன்று கொஞ்சம் பணத்தை எடுத்து அண்ணாவிடம் நீட்டினார். எங்களுக்கே தெரியாது, அய்யா பணம் எடுத்து வந்திருந்தது. 

அப்போது கண்கலங்கிய அண்ணா, ‘இல்லீங்கய்யா... அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. உங்க அன்பே போதும். வேணும்னா நானே வந்து அய்யாக்கிட்ட வாங்கிக்கிறேன்என்று பதில் சொன்னார். அந்த இடம் முழுவதும் உருக்கம் நிலவியது. அய்யா அவ்வளவு லேசாக யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். இரண்டே பேருக்குத்தான் கொடுத்திருக்கிறார். ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அண்ணா...’’ என்று உங்கள் கருப்புச் சட்டைக் கண்மணி அன்று பேசியபோது கேட்டவர்களின் கண்கள் பனித்து; இதயம் கனத்தது.

அந்த வரலாற்றுப் பெருமை மிக்க சந்திப்பு என் மடியில்தானே நடந்தது! தமிழகத்தில் அறியாமை நோயை முற்றாக ஒழித்த இரண்டு சுயமரியாதை வைத்தியர்கள் அன்று என் மடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அவர்கள் பெயரை சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே..? ஏன் கலைஞர் அய்யா?

ரொம்ப காலம் ஆகிவிடவில்லை அய்யா... உங்கள் அருமைப் புதல்வர், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6&ம் தேதி என் வளாகத்தில் இதய ஊடுருவி ஆய்வகத்தை திறந்துவைத்தார். அப்போதுகூட மிசா காலத்தில் தானும் தன் தோழர்களும் இந்திராகாந்தி அரசாங்கத்தால் பட்ட இன்னல்களையும் அதையடுத்து என் மடியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தருணங்களையும் உருக உருகப் பகிர்ந்துகொண்டார். கல்லால் ஆன என் இதயம் கூட சிலிர்த்தது. இது அண்ணாவிடம் இரவல் பெற்ற உங்கள் இதயத்தில் ஊடுருவவில்லையா அய்யா?

தி.மு.க. என்ற இயக்கத்தின் அடி உரமாக இன்றும் திகழும் அந்த மிசா தியாகிகளில் ஒருவரின் பெயரைக் கூட சுமக்க அருகதை அற்றுப் போய்விட்டேனா நான்?

அன்று ஈழப் பகுதிகளுக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை... சுமார் 12 ஆயிரம் தமிழச்சிகளின் கற்பை சூறையாடியதாகவும் அதைவிட பலரது உயிர்களை துப்பாக்கிக் குழல்களால் குடித்ததாகவும் செய்திகள் வந்தன. அப்போது உங்கள் தமிழ் குருதி கொதித்தது. தமிழனின் ரத்தக் கறை பூசிவரும் இந்திய ராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்என்று தமிழ் கர்வத்தோடு செயல்பட்ட நீங்கள்... இன்று அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவின் பெயரையா எனக்கு சூட்டுகிறீர்கள்? ஐயகோ...

அந்த ஈழத்து தமிழச்சிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்று இந்த மருத்துவமனைக்குத் தெரியாதா என்ன? பெரியார், அண்ணா, கக்கன் என தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியப்படுத்திய தலைவர்களை நான் ஆரோக்கியப்படுத்தியிருக்கிறேன். இன்றோ..? 

அதிகாலை வேளையில் என் வளாகத்தில் பார்த்தீர்களானால் நாட்டு வைத்தியத்தையும் தாண்டி மஞ்சள் காமாலை நோய்க்கு ஊசிபோட நிறைய பேர் வருவார்கள். அவர்களையாவது நான் குணப்படுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்கு காங்கிரஸ் காமாலை பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்களே? அந்த நோயை நான் எப்படி குணப்படுத்துவேன்? 

ஒரு குழந்தை, ‘எனக்கு இன்ன பெயரை வைக்காதேஎன்று தாய் தந்தையிடம் சொல்லத் தெரிவதில்லை. ஆனால், அதே குழந்தை விவரம் தெரிந்தபிறகு தனக்கு இந்த பெயர் முரணாக இருக்கிறது என்று தெரிந்தால் அதை தூக்கி எறிந்து பொருத்தமான புனைப் பெயர் சூட்டவும் தயங்குவதில்லை. இது தங்கள் பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்த வரலாறு! 

எத்தனையோ பெயர் சூட்டுதல்கள் மூலம் வரலாற்றை மீட்டெடுத்த தாங்கள், இந்த பெயர் சூட்டுதல் மூலம் வரலாற்றை மறைத்துவிட்டு கூட்டணியை மீட்டெடுக்க பிரயத்தனப்பட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இனி திராவிட சாஸ்திரிகள்என்று தங்களுக்கு காங்கிரஸ் சார்பில் பட்டமளிப்பு விழா நடக்கலாம். அதில் தங்கபாலுக்கள் கோரிக்கை வைத்தால் புதிய தலைமைச் செயலகத்துக்குக் கூட சோனியாவின் பெயரை நீங்கள் சூட்டலாம். 

ஆனாலும், நல்லவேளையாக எனக்கு ராஜபக்ஷே பெயரை சூட்டாமல் போனீர்களே? அதுவரைக்கும் உங்களுக்கு நன்றி கலைஞரே..!




கருத்துகள் இல்லை: