ஞாயிறு, நவம்பர் 09, 2025

இளமுறியா

தனுஷ்கோடியில் இருந்து
வேகமெடுத்து உத்திரகோசமங்கை
நோக்கி பறந்து கார். 

உத்திரகோசமங்கை!

புராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த உலகின் முதல் சிவ ஆலயம்,  இங்குள்ள மூலவர்  மூவாயிரம் வருடங்களுக்கும் முந்தைய சுயம்பானவர். உலகிலேயே மிகப் பெரிய மரகத நடராஜர் சிலை இங்குள்ளது என்பது போன்ற தகவல்கள் நமக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, ரைட் எடுத்து தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் வேகமெடுத்து அகைன் ரைட் எடுத்தா உத்தரகோசமங்கை பெயர்ப் பலகை நம்மை அன்புடன் வரவேற்கிறது. 

உத்திரகோசமங்கை என்பதற்கு பார்வதிக்கு உபதேசம் தந்த இடமென்று பொருளாம். அதற்கு  முன்பு இதன் பெயர் இலவந்திகை என்கிறது இலக்கியங்கள்.

மாணிக்கவாசகர் வந்தமர்ந்த இலந்தை மரம் இன்றும் தல விருட்சமாக திகழ்கிறது. இந்த மரத்தடியில் தான் மங்களநாதர் எழுந்தருளிய இருக்கின்றார்  

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி 

மங்களநாதருக்கும் 
இன்னொரு பேர் இருக்கு. 

கார் குலுங்கி நின்றது. 

அதற்குள் கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டோம். பார்க்கிங் கிடைக்காமல் பக்கத்து தெருவில் காரை சொருகி விட்டு எல்லோரும் இறங்க, நான் சட்டென்று நான் காரை விட்டு இறங்கி ராஜகோபுரம் நோக்கி நடந்தேன். 

கும்பாபிஷேகம் முடிந்து, நேற்று கல்யாணமான புது மாப்பிள்ளை போல ஜம்மென்று இருந்தது ராஜகோபுரம். 

ஓம் நமச்சிவாய..
ஓம் நமச்சிவாய..

கோபுர வாசலின் இருபுறமும் அமர்ந்திருந்த யாசகர்கள் சிவ நாமம் உச்சரிக்க உச்சரிக்க, என் நினைவு சட்டென்று பூர்வீக காலத்திற்கு புறப்பட்டு போனது. 

இதோ நான் நிற்கின்ற இந்த இடத்தில் தானே, இதோ என் காலடியில் தானே ஒரு காலத்தில் கடல் இருந்தது. கொடுங்கடல் குடி கொண்டிருந்தது. 

சொன்னால் யாராவது நம்புவீர்களா?

லேசாக புன்னகைத்துக் கொண்டேன்.

நான் கோபுர வாசலிலேயே தேங்கி நிற்பது கண்டு கோயிலுக்கு சென்று கொண்டிருந்த விமல் அண்ணனும்  சம்பந்தம் அண்ணனும் என் வருகை எதிர்பார்த்து அப்படியே நின்றிருந்தார்கள்.

அவர்களை நோக்கி நடந்தேன். 

பஃறுளி ஆற்றோடும்,  பன்மலை அடுக்கத்தோடும் என் சிந்தனை வட்டமடித்துக் கொண்டிருந்தது. 

எல்லோரோடும் கோவிலுக்குள் நுழைந்தேன். ஏதோ விசேஷம் போல, ஏகப்பட்ட கூட்டம். 

நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய உயரமான பிரகாரங்கள் கோயிலின் பிரமிக்க வைக்கும் தோற்றத்திற்கு பங்களிப்பை தருகின்றன.

திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா? 

திருவிளையாடல் படத்தில் சிவாஜி சிவனாக வந்து, சுறாவினைக் கொன்று சாவித்திரியை மணக்கும் காட்சி வருமே, அதுவெறும் கற்பனை காட்சி என்று தானே நினைத்தீர்கள். காட்சி அல்ல.  சங்க இலக்கியங்கள்  பதிவு செய்திருக்கும் காலத்தின் சாட்சி. 

ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

என்று மாணிக்கவாசகரும் கூட அதனை உறுதி செய்கின்றார்.

அண்ணாமலையில் இருந்து கொண்டு இலவந்திகை பற்றி  பாடுகின்றாரே அந்த படலம் நடந்த இடம் வேறெங்கும் இல்லை. அதோ அந்த வாசலில் தான். 

முன்பொரு காலத்தில் உத்திரகோசமங்கையின் இந்த கோயில் வாசலில் தான் கடல் இருந்தது என்பதை கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் தான் நமக்கு கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்துகின்றன; கடற்காற்று அரித்த எச்சங்களைப் பறைசாற்றுகின்றன. 

உத்திரகோசமங்கை கோவிற் குளத்து மீன்கள் கூட கடல் நீரில் வாழும் ரக மீன்கள் தான். 

அம்மன் சன்னதிக்குச் சென்றோம். அவ்வளவாக கூட்டமில்லை. வெளிப்பிரகாரம் சுற்றிக்கொண்டு மரகத நடராசர் சன்னதிக்கு போனோம். 

மரகத சிலை முழுக்க சந்தனத்தால் பூசி, சந்தன காப்பிட்டு இருந்தனர். அங்கிருந்து வெளியில் வந்தால் எதிரே இருக்கிறது தல விருட்சமாக விரிந்து இருக்கிறது இலந்தை மரம். 
 
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான் என்று இராவணன் மனைவி மண்டோதரி கூட இங்கே வந்து வழிபட்டுச் சென்றதாக மாணிக்கவாசகர் பாடுகிறார்.

மண் முந்தியோ மங்கை முந்தியோ!

என்பது வெறும் வார்த்தை இல்லை. பெரும் நிஜம். கோயிலின் தொன்மை பேசும் சொல்லாடல். ராமேஸ்வரம்  எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

ராமேஸ்வரம் 
என்னங்க.. 
ராமேஸ்வரம்.. 

சொல்லப்போனால் அப்போது இலங்கை என்றொரு தீவே இல்லை.

ஆதி காலத்தில் இந்துமாக் கடல் என்ற ஒரு கடல் தெற்கே இல்லையே இல்லை. எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. அந்தக் காலத்திலேயே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

நிலமெல்லாம் ஒரே ஒரு கண்டமாக இருந்தது, அது ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை இருந்த அந்த நீண்ட நெடிய கண்டத்திற்கு லெமூரியாக் கண்டம் என்று பெயர். 

லெமூரியா கண்டம் பற்றி; குமரிக்கண்டம் பற்றி, அதன் பெயர் காரணம் பற்றி ஆகச்சிறந்த ஆய்வாளர்கள் எல்லாம் ஏதேதோ டெப்னிசியன்ஸ் சொல்லி இருக்கிறார்கள். 

ச்சும்மா...

உங்க கிட்ட ஒரு கேள்வி. லெமூரியானா என்ன மீனிங்?

கொஞ்சம் கூகுள்ல சர்ச் பண்ணிட்டு வாங்களேன். நானும்  கொஞ்சம் கோவில் சுத்திட்டு வாரேன்.

இன்னும் இன்ச் இன்சாக சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் காலம் இடம் தரவில்லை. அரை மனதாக, ஒருவழியா வெளியில் வந்தேன். 

எனக்கு முன்னே தம்பிகள் கோயிலை விட்டு வெளிய  வந்திருந்தார்கள். 

என்னடா இது?

கோயில் குளம்னு சுத்திக்கிட்டு, ஒரே போரா இருக்கே என்று உடன் வந்த  தம்பிகளுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டியிருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 

அவர்களுக்கு எப்படி சொல்வேன்.. 

புராண உருவாக்கங்களை, அவற்றுள் உள்ளுற உவமையாக இருக்கின்ற ஆதிமானுட நிகழ்வுகளை இப்படியான பயணங்கள் மூலமாக தான் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று.!

வெளியில் வந்து ஆளுக்கு ஆள் படங்கள் எடுத்துக் கொண்டோம். 

என்ன.. 
கூகுள்ல சர்ச் பண்ணிங்களா..? 

ஆளு ஆளுக்கு ஏதேதோ சொல்லி நீட்டி முழக்கி வச்சிருக்காங்களா.. 😊 
அதெல்லாம் அப்படியே கொஞ்சம் ஓரம் கட்டிட்டு வாங்க. 

லெமூரியா..!

அதாவது இளமுறியா என்பதே கூட நம்மூர் பெயர் தான். அதுவும் சுத்த தமிழ் பெயர் தான்.

என்ன நம்ப முடியல தானே..? 

ரொம்ப சிம்பிள்..

இலை மூரி என்றால் சோற்றுக்கற்றாழை. பரந்து விரிந்த நீண்ட நெடிய நிலம் முழுக்க சோற்றுக்கற்றாழை விளைந்திருந்ததால் இதற்கு இளமுறியா கண்டம் என்று பெயர்.

அவ்வளவு தாங்க மேட்டர்.

என்ன..

வீட்டு வாசற்படிக்கட்டுகளில் சோற்றுக்கற்றாழை தொங்கிக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவில் வந்து போகிறதா? அட அப்படி என்றால் நீங்களும் நானும் நாவலந்தேயவர் தான்.

அப்போ குமரி கண்டம்..? 

அதானே கேட்கிறீங்க..

சோற்றுக்கற்றாழைக்கு இன்னொரு பேர் குமரி. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும். 

சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து, யுகம் கடந்து நிற்கும் இந்த மண்ணில்   நானும் காலாற நடக்கிறேன் என்பதே  ஒரு வைப் தானே.

சரி இங்கிருந்த எங்கே கடல் போயிற்று..?

கால நிலைகள் தந்த பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாலை நிலவானதற்கு இந்த கொடுங்கடல்தான் காரணம்.

ஐயா..
என் பேரு மாணிக்கம். 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

என்று 
சூப்பர் ஸ்டார் டயலாக் மாதிரி,

மங்களநாதருக்கும் ஏதோ இன்னொரு பேர் இருக்கு அப்படின்னு சொன்னீங்களே.. அது என்ன தலைவா என்று தானே கேட்க வருகிறீர்கள்..? 

 
அது...

பிரளய நாதர்!

ஆழிப் பெருவெள்ள தலைவன்.

கூட்டி கழிச்சு பாருங்க..
கணக்கு சரியா வரும்.

#உத்திரகோசமங்கை #பிரளயநாதர் #மாணிக்கவாசகர் #தமிழ்மண் #குமரிக்கண்டம் #லெமூரியாகண்டம்  #SpiritualJourney #TempleTrails

வியாழன், ஜனவரி 23, 2025

ஆரியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் பூர்வீகம் என்ன?


ஆரியர்களும் திராவிடர்களும் இனக் குழுக்கள் அல்ல ; பயண குழுக்கள். ஒரே நிலத்திலிருந்து கிளம்பிச் சென்ற இரு பெரும் பயண குழுக்கள்.

இந்த இரு குழுவினரையும் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, ஆழிப்பேரலை எதிர்கொண்டு பூர்வீக மண்ணிலேயே போராடி வாழ்ந்தவர்கள் நாகர்கள். நாகர்களின் தலைவனை பிரான் என்று அழைப்பது மரபு.

அதைப் போன்றே

சமஸ்கிருதத்தை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நிலம் வழியே பயணப் பட்டவர்கள் தங்களது மூப்பர்களை ஆர்ய என்று அழைத்துக் கொண்டனர்.

தமிழை அதன் அறிவு சார் பெருமக்களை காத்து நீர் வழியே பயணப்பட்டவர்கள் தங்களது வழிகாட்டிகளை திராவிட என்று அழைத்துக் கொண்டனர்.

பிரான் என்பதும் ஆரிய என்பதும் திராவிட என்பதும் மரியாதைக்குரிய டைட்டில்கள். இவை அனைத்தும் நாகர்களின் தலைவர்களை, மூப்பர்களை, வழிகாட்டிகளை அடையாளப் படுத்துகின்ற Noble titles.

பின்னாளில்..
சமஸ்கிருதத்தை ஆரியம் என்றும் தமிழை திராவிடம் என்றும் பைந்தமிழர் எழுதியும் பேசியும் வந்தனர்.

சான்றாக..

வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் #த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்கிறார் தாயுமானவன்.

பாடலின் பொருள் :
வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் தாயுமானவர்.

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் #த்ராவிட வேத ஸாகரம்.

பாடலின் பொருள் :
ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதுமான தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.

அதாவது தமிழ் என்ற வார்த்தைக்கு நிகராக திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் நாதமுனி.


#ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே'

(தமிழ் தாய் வாழ்த்து)

பாடலின் பொருள் :
உலக வழக்கு அழிந்து ஒழிந்த சமஸ்கிருதம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே

அதாவது சமஸ்கிருதம் என்ற வார்த்தைக்கு நிகராக ஆரியம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார் மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை.

அன்னையும் (தமிழ்) பிதாவும் (சமஸ்கிருதம்) முன்னறி தெய்வம்.

தமிழ் எமது பேச்சு மொழி, சமஸ்கிருதம் எமது குறியீட்டு மொழி. தமிழ் என்பது மக்கள் மொழி. சமஸ்கிருதம் என்பது அறிவர் மொழி, இரண்டுமே தமிழர் மொழி ; அது எமது நாகர் மொழி!

உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற மெசபடோமியா நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், எகிப்திய நாகரிகம், சீன நாகரிகம் உள்ளிட்ட உலகின் தொன்மையான நாகரீகங்களை படைத்ததும் நாகர்களின் இரு பெரும் ஆர்ய, திராவிட பயண குழுக்களே. பின் இந்த இரு குழுக்களும் தாய்நிலம் தேடி நாவலன் தேயம் வந்தடைந்தனர்.

உலகம் முழுவதும் சிதறிய தமிழன் உருவாக்கிய நகரங்கள் யாவும் எமது ஊரே! அங்கு வாழ்கின்ற யாவரும் எமது உறவே! என்பதை உணர்த்திட தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் எம் முப்பாட்டன்.

ஆனால்..

சுய சிந்தனையற்ற காப்பி பேஸ்ட் கும்பல்கள் திராவிட போலிகளின் மூலம், தமிழ் தேசிய போலிகளின் மூலம் பொய்யான பரப்புரைகளால்,

சமஸ்கிருதத்தை தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்தியத்தைப் போன்றே திராவிடத்தையும் தமிழர்களின் எதிர்நிலைக்கு நகர்த்துகின்ற போக்கு இங்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

களவாடப்படும் எமது அறிவுசார் சொத்துகள் | தாரை வார்க்கப்படும் எமது அறிவுசார் சொத்துக்கள் நிச்சயம் ஒருநாள் மீட்கப்படும்.

சமரன்

#பிரான் | #ஆரியர் | #திராவிடர் | #தமிழர் | #தமிழ் | #சமஸ்கிருதம் | #மொழி | #அறிவுசார்சொத்துக்கள்